Train Hijack: 400 பயணிகளுடன் ரயிலைக் கடத்திய கிளர்ச்சியாளர்கள்; பரபரக்கும் பாகிஸ்தான் -பின்னணி என்ன?
பாகிஸ்தானின் தென்மேற்கில் அமைந்திருக்கும் பலூச்சிஸ்தான் மாகாணத்தின் குவெட்டா பகுதியிலிருந்து பெஷாவருக்கு 400 பயணிகளுடன் சென்ற ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று (மார்ச் 11) கடத்தப்பட்டிருக்கிறது.
பலூச்சிஸ்தானைச் சேர்ந்த கிளர்ச்சிக்காரர்களால் இந்த ரயில் கடத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. ரயில் குகை வழியாகச் செல்லும்போது அப்பகுதியின் மலைகளில் துப்பாக்கியுடன் பதுங்கியிருந்தவர்கள் ரயிலில் இருந்து பாதுகாவலர்கள், ரயில் ஓட்டுநர்களைத் தாக்கிவிட்டு துப்பாக்கிக் குண்டுகளை முழுங்கவிட்டு அச்சத்தை ஏற்படுத்தி, பயணிகளைப் பிணைக் கைதிகளாகப் பிடித்துள்ளதாக பாகிஸ்தான் ரயில்வே தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. மேலும், ரயில் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதியில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்தக் கடத்தலை 'பலூச் லிபரேஷன் ஆர்மி (Baloch Liberation Army) செய்துள்ளதாகத் தகவல்கள் பரவி வருகின்றன.
ரயிலைக் கடத்தி, நூற்றுக்கும் மேற்பட்ட பயணிகளைப் பிணைக் கைதிகளாக வைத்திருக்கும் பலூச்சிஸ்தான் கிளர்ச்சிக்காரர்கள், பாகிஸ்தான் அரசு தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றினால் மட்டுமே பயணிகளை விடுவிப்பதாக எச்சரிக்கை விடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாக பாகிஸ்தான் உள்துறை அமைச்சர் மொஹ்சின் நக்வி, "மிருகங்கள் அப்பாவி மக்கள் மீது தாக்குதல் நடத்தி, சிறைப் பிடித்து வைத்திருக்கிறார்கள். இதற்கு அவர்கள் பதில் சொல்லியாக வேண்டும்" என்று பேசியிருக்கிறார்.
ரயில் கடத்தலின் பின்னணி
பலூச்சிஸ்தான் மாகாணம் எண்ணெய் வளங்கள், தங்கம், காப்பர், இயற்கை எரிவாயு வளங்கள் என பல்வேறு வளங்களைக் கொண்டது. அப்பகுதியின் வளங்களை எடுத்துக் கொள்ளும் பாகிஸ்தான் அரசு, அப்பகுதி மக்களுக்கு உரிய நிதி ஒதுகீட்டையும், முறையான பொருளாதார பகிர்வையும் கொடுப்பதில்லை என பலூச்சிஸ்தானில் 2000ம் ஆண்டு முதலே போராட்டங்களும், கிளர்ச்சிகளும் வெடிக்க ஆரம்பித்தன. பாகிஸ்தானின் தலைநகரில் பலூச் மக்கள் பல போராட்டங்களை நடத்தினர். ஆனால், பாகிஸ்தான் அரசு, பொருளாதார பகிர்வில் எந்தவொரு உறுதியும் வழங்காததால் இந்தப் போராட்டங்கள் கிளர்ச்சியாக மாறத் தொடங்கின.
அமைதிப் போராட்டம் டு ஆயுதப்போராட்டம்
பாகிஸ்தான் அரசுக்கு எதிராகப் போராடுபவர்கள் தொடர்ச்சியாகக் கைது செய்யப்பட்டனர். சிறைக் கொடுமைகள் நடந்ததாகக் கூறுகின்றனர். போராடும் பாலுச் மக்கள் மீது மனித உரிமை மீறல்களை பாகிஸ்தான் அரசு செய்வதாகக் குற்றம்சாட்டினர் அம்மக்கள். இதனால் அங்குப் போராட்டங்கள் வெடிக்க, 'மனித, அரசியல் மற்றும் பொருளாதார உரிமைகள் வேண்டும்' என்ற கோரிக்கைகளை முன்வைத்து பலூச் மக்கள் தீவிரமாகப் போராடினர். சட்டத்திற்குட்பட்டு ஜனநாயகத்தின் அடிப்படையில் நடந்து வந்த இப்போராட்டங்கள், ஒருக்கட்டத்தில் புரட்சிப் போராட்டமாக வெடிக்கத் தொடங்கியது. கிளர்ச்சிப் படைகள் உருவாக இது ஆயுதம் ஏந்தியப் போராட்டமாகவும் மாறத் தொடங்கியது
கிளர்ச்சிப் படைகள் 'மனித, அரசியல் மற்றும் பொருளாதார உரிமைகள் வேண்டும்' இல்லையெனில் 'சுதந்திரம் வேண்டும்' என்ற கோரிக்கைகளுடன் போராட்டங்களை தீவிரப்படுத்தினர். இதற்கிடயில் அமைதியாக, ஜனநாயகத்தின் வழியே நின்று போராடும் பலூச்சிஸ்தானைச் சேர்ந்த போராட்டக்காரர்கள் பலர் பாகிஸ்தான் ராணுவத்தால் கைது செய்ப்பட்டு சிறைக்காவலில் கொலை செய்யப்பட்டதாக எழுந்தக் குற்றச்சாட்டுகள் தீயாகப் பரவின.
நவம்பர் 23, 2023 அன்று பலூச் மோலா பக்ஷ் (Balach Mola Bakhsh) என்ற பலூச்சிஸ்தானைச் சேர்ந்த 24 வயது இளைஞர், பாகிஸ்தான் காவலர்களால் கைதுசெய்யப்பட்டு சிறைக்காவலிலேயே உயிரிழந்த சம்பவம், பலூச்சிஸ்தானில் பெரும் கிளர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
அப்போது நடந்த போராட்டத்தில் 'நீதிக்கான, உரிமைக்கான எங்களின் போராட்டத்தில் இனி புது அத்தியாயம் தொடங்கிவிட்டது. நாங்கள் பாகிஸ்தான் அரசுக்கு எதிராக இல்லை. பாகிஸ்தான் அரசுதான் எங்களுக்கு எதிராக இருக்கிறது' என்று முழக்கமிட்டனர்.
இதையடுத்து பாகிஸ்தான் அரசுக்கும், பலூச்சிஸ்தான் கிளர்ச்சிப் படைகளுக்குமிடையே பனிப்போர் ஆரம்பமானது. அதன் விளைவாக பலூச்சிஸ்தானில் துப்பாக்கிக் குண்டுகள் சத்தம் கேட்க ஆரம்பித்தன. பாகிஸ்தான் அரசு பலூச்சிஸ்தானில் போராட்டங்கள் அனைத்தும் பிரிவினைவாதிகள், தீவிரவாதிகளால் அரசியல் உள்நோக்கத்துடன் நடப்பதாகக் கூறுகிறது.
இந்தப் பின்னிணியில்தான் இப்போது 400 பயணிகளுடன் சென்ற ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயில் கடத்தப்பட்டிருக்கிறது. பலூச்சிஸ்தானைச் சேர்ந்த கிளர்ச்சிக்காரர்களால் இந்த ரயில் கடத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.