Travel Contest: "வண்டிய நிறுத்துங்க; பயப்படாதீங்க’’ - பதைபதைக்க வைத்த பரம்பிக்குளம் சுற்றுலா
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் ‘My Vikatan’ முன்னெடுப்பு இது.
இந்தக் கட்டுரையில் இடம்பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள்.
விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல - ஆசிரியர்
பரம்பிக்குளம் சுற்றுலா அனுபவம் பாகம் 1: "பாக்க சின்னதா இருக்கும்; ஆனா ஆளயே கொன்றும்"
மறுபடியும் பயணம் தொடர்ந்தது. அதுவரையிலும் பயணித்தது மலைப் பாதைதான் எனினும், பெரிய ஏற்றங்கள் இல்லாமல், சமநிலத்தில் பயணிப்பதாகவே தோன்றியது.
ஆனால் போகப் போக, ஏற்றங்களுடன் கூடிய கடுமையான கொண்டைஊசி வளைவுகளும் சேர்ந்ததில், பயணம் சற்று திகிலூட்டக் கூடியதாக இருந்தது.
சற்று தூரம் கடந்ததும், மறுபடியும் ஒரு சம நிலப்பரப்பு.
நீண்ட தூர பயணத்தினால் நண்பர்கள் சற்று சோர்வடைந்திருந்தார்கள். எனவே வாகனத்தில் அமைதி குடிகொண்டது.
அந்த அமைதியைச் சற்று தளர்த்த விரும்பி நான் காவலர் அக்காவிடம் பேச்சைத் தொடர்ந்தேன்.
"அக்கா, நீங்க எவ்ளோ வருஷமா இங்க இருக்கீங்க?"
"நான் பொறந்து வளர்ந்தது எல்லாம் இங்க தான்", என்றார்.
"இங்க எவ்ளோ பேர் இருக்கீங்க?"
"இந்த காட்டுல, மொத்தம் 4 குழு இருக்கு, எல்லாரும் சேர்த்து 1000 பேருக்கு மேல இருபோம்" என்றார்
"ஓ 4 குழு இருக்காங்களா?"
"ஆமா, காடர், மலசர், முதுவன், மலமலசர்னு 4 குழு இருக்கு. இதுல நான் காடர் குழுவைச் சேர்ந்தவள்" என்றார்
அப்படியாகப் பேச்சு தொடர்ந்து, சட்டென்று காவலர் அக்கா, "வண்டிய மெதுவா விடுங்க" என, பயமுடன் கூடிய மெல்லிய குரலில் கூறினார்.
"என்ன ஆச்சு அக்கா?" என்றேன்,
"அங்க அந்த மரத்துக்குப் பின்னாடி எதோ கும்பலா இருக்குற மாதிரி இருக்கு"
எனக் கூறி சற்று தொலைவில் இருந்த பெரிய மரம் ஒன்றைச் சுட்டிக் காட்டினார்.
உடனே, எதையோ அறிந்துகொண்டதைப் போல,
"வண்டிய நிறுத்துங்க, பயப்படாதீங்க, சத்தம் போடாதீங்க, கண்ணாடியை இறக்காதீங்க..."
என அடுக்கடுக்காய் கட்டளைகளை விடுத்தார். ஏதும் புரியாதவர்களாய் நாங்கள் விழித்துக்கொண்டிருந்தோம்.
"அந்த மரத்துக்கு பின்னாடி இருக்க பொதருக்குள்ள பாருங்க" என்றார் காவலர் அக்கா.

அங்கு உற்று நோக்கியதில், நன்கு திரண்டிருந்த தோள்களுடனும், பெரிய திமில்களுடனும், கருத்துப் பெருத்து இருந்தது அதன் உருவம். மெல்லிய குரலில் அந்த அக்கா கூறினார்,
"அது காட்டெருமைக் கூட்டம். சாலையைக் கடக்கக் காத்திருக்கிறது. எனவே வாகனத்தை நகர்த்த வேண்டாம்" என்றார்.
சற்று நேரத்தில், ஒரு பெரிய காட்டெருமை மரத்தின் பின்னாலிருந்து தலையை மட்டும் வெளியே நீட்டிப் பார்த்தது. பாதையில் ஏதேனும் ஆபத்து இருக்கிறதா எனப் பார்ப்பது போல் இருந்தது அதன் செயல்.
பிறகு மெல்ல நகர்ந்து சாலையை அடைந்து இரு புறமும் பார்த்தது. எங்கள் வாகனத்தையும் உற்று நோக்கியது. எங்கள் அனைவரின் கண்களும் அதன் மீது நிலைகொண்டது.
உடனே அது எதோ சமிக்கை செய்ய, பின்னால் காத்திருந்த சுமார் 12 எருமைகள், திபு திபு எனப் புழுதி கிளம்ப வெளியே வந்து சாலையைக் கடந்தன.
சில குட்டிகள் தாவிக் குதித்துச் சென்றது. அந்த பிரமாண்டமான காட்சியைத் திகில் கலந்த வியப்புடன் கண்கொட்டாமல் பார்த்துக்கொண்டு அமைதியாய் காத்திருந்தோம்.
காட்டெருமைகள் சாலையைக் கடந்ததும், வாகனம் புறப்பட அனுமதி அளித்தார் காவலர் அக்கா. மேலும் பேசத் தொடங்கினார்.
"காட்டெருமைகள் ரொம்ப பயங்கரமானது. அதோட தலை பாறை போல் உறுதியானது. அதுக்கு கோபம் வந்தா ஒரே முட்டுல நம்ம வண்டிய கூட உருட்டி விட்டுறும்"
எனக் காட்டெருமைகளின் பெருமைகளைக் கூறினார். இன்னும் சற்று தொலைவு பயணம் செய்ததும். ஒரு சிறிய கிராமம் வந்தது.
"நீங்க தங்குற இடம் கிட்ட வந்துடுச்சு" எனக் கூறி வண்டியை இடப்புறம் திருப்பச் சொன்னார். திரும்பியதும், பாதை சற்று ஏற்றத்துடன் இருந்தது. மேலே ஏறியதும், "இங்க நிறுத்துங்க, நீங்கள் தங்கும் விடுதி வந்துவிட்டது" என்றார் காவலர் அக்கா.

பரம்பிக்குளத்தில், தங்குவதற்கு நான்கு விதமான விடுதிகள் உள்ளன. அதில் இரண்டு விடுதிகள், அடர் காட்டின் நடுவிலும், சிறிய தீவிலும் இருந்தன.
மற்றொன்று மரவீடு. 'ஹனி கோம்ப்' எனும் விடுதி மட்டும், பரம்பிக்குளம் கிராமத்தின் அருகில் இருந்தது. எங்கள் குழுவில் பெண்களும் ஒரு சுட்டிக் குட்டியும் இருந்ததால், பாதுகாப்பு கருதி, கிராமத்தின் அருகில் இருந்த 'ஹனி கோம்ப்' விடுதியைத் தேர்வு செய்து முன்பதிவு செய்திருந்தோம்.
அனைவரும் மிகுந்த களைப்பிலிருந்ததால், விடுதியைச் சுற்றிப் பார்க்கவோ, அதன் சுற்றுப்புற அமைப்பைப் பார்க்கவோ தோன்றவில்லை. தாமதம் ஏதும் செய்யாமல், அவரவர் அறைக்குச் சென்று, சிறிது ஓய்வுக்குப் பின்னர் சிரம பரிகாரம் முடித்து விட்டு, உடைகளை மாற்றி மதிய உணவருந்த ஆயத்தம் ஆனோம். ஊன் உணவும் சைவ உணவும் பரிமாறப்பட்டது.
பசி ருசி அறியாது என்பது எவ்வளவு உண்மை என்பது அன்று தான் தெரிந்தது. உணவின் சுவை நன்றாக இருந்ததெனினும், காரம் சற்று அதிகமாகவே இருந்தது.
சாப்பிடும் வரை அதை உணராத நாங்கள், சாப்பிட்டு முடித்ததும் நன்கு உணர்ந்தோம். எனவே, விடுதியைப் பராமரிப்பவரிடம் சென்று, உணவின் சுவையைப் பாராட்டிவிட்டு, காரம் மட்டும் சற்று குறைத்துக்கொள்ளும்படி அன்புடன் வேண்டினோம். அவரும் நன்றி கூறி வேண்டுதலை ஏற்றார்.

மீண்டும் சற்று ஓய்விற்குப் பின், மூன்று மணி அளவில் மீண்டும் பயணம் தொடர்ந்தது. காவலர் அக்கா குறித்த நேரத்தைவிட ஒரு மணி நேரம் தாமதமாகக் கிளம்பியதால், எந்த இடத்திலும் தாமதிக்க நேரம் இல்லை.
சற்று துரிதமாகவே சுற்றிப் பார்க்க முடிவு செய்தோம். காரணம், அடர்ந்த வனம் ஆகாய சூரியனைச் சற்று துரிதமாகவே மறைத்துவிடும்.
6 மணிக்கெல்லாம் நன்கு இருட்டி விடும். அதன் பிறகு காட்டில் பயணிப்பது பேராபத்தை விளைவிக்கக் கூடும்.
ஏற்கனவே முடிவு செய்தபடி, நாங்கள் முதலில் வேலி வியூ பாயிண்ட் (valley view point) சென்றோம். சுற்றிலும் மேகங்கள் தவழ்ந்து செல்லும் மலைத் தொடர்.
மலைத்தொடர் முழுவதும் வானுயர்ந்த மரங்கள் சூழ்ந்து அடர் வனமாக மாற்றி இருந்தது. அந்த அடர் வனத்தின் நடுவில் வளைந்து வளைந்து செல்லும் ஆறு போல் காட்சி தந்தது அந்த மிகப் பெரிய நீர்த் தேக்கம்.

அங்கிருந்து மலை இறங்கி பரம்பிக்குளம் அணைக்கட்டு வந்தடைந்தோம். மலையின் உச்சத்தில் இருந்து பார்த்தபோது ஆறு போல் காட்சி அளித்த அந்த அணை, நெருங்கி அருகில் வந்ததும், அடுத்த பக்கத்தின் கரையைக் காண முடியாத கடல் போல் காட்சி அளித்தது. அங்குச் சில புகைப்படங்களைப் பதிவு செய்துகொண்டிருக்கையில்,
"டீ வந்துடுச்சு வாங்க குடிக்கலாம்" என்றது அக்காவின் குரல்.
மதி மயக்கும் மாலை வேலை, கடல் போன்ற நீர்த் தேக்கம், பச்சைப் படர்ந்த பர்வதங்கள், கூடிக் குலாவிப் பேச மனதிற்கினிய நண்பர்கள் இவை மட்டுமே போதும் உற்சாகத்தின் எல்லையை அடைய.
அவற்றுடன், சுவை மிக்க தேநீரும் சேர்ந்தால், அந்த தருணத்தை விவரிக்க வார்த்தைகள் இல்லை.

தேநீர் பருகியதும், கன்னிமாரா தேக்கு மரம் நோக்கி எங்கள் பயணம் தொடர்ந்தது. காவலர் அக்கா அந்த தேக்கு மரத்தின் மகத்துவத்தை மகிழ்ச்சி பொங்கப் பகிர்ந்துகொண்டார்.
ஆங்கிலேயர் காலத்தில், இந்த மரத்தை வெட்ட முயன்றபோது, இந்த மரத்திலிருந்து குருதி கசிந்ததாக நம்பப்படுகிறது. எனவே அதை வெட்டாமல் விட்டு விட்டனர். அன்றிலிருந்து இந்த மரம் கன்னிமரா மரம் (கன்னிப் பெண்ணைக் குறிக்கும் சொல்) என அப்பகுதி மக்களால் வழிபாடு செய்யப்பட்டது.
மேலும், இது உலகிலேயே மிகப்பெரிய இயற்கையாய் வளர்ந்த தேக்கு மரம். 2011 ஆம் ஆண்டின் படி, இதன் வயது 460 வருடம். கிட்டத்தட்ட 40 மீட்டர் உயரம். அக்கா அளித்த அந்த விவரங்கள் எங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. அந்த ஆச்சரியத்துடன் இயற்கையின் பிரமாண்டமும் சேர்ந்துகொண்டது.
ஒரு வாகனம் மட்டுமே செல்லும் அகலம் உள்ள மணற்பாதை அது. வலப்புறம், அடர்ந்த மரமும் புத்தர்களும் கொண்ட மலைகள், இடப்புறம், பெரிய பள்ளம், பள்ளத்தின் கீழ், சிறிய காட்டாறு. ஆற்றில் நீர்ப்பிரவாகம் குறைவாகவே இருந்தது.
ஆற்றின் அக்கரையில் காட்டெருமை மந்தைகள் புற்களை மேய்ந்து அசைபோட்டுக் கொண்டிருந்தன. அவைகள் ஒன்றை ஒன்று முட்டிக்கொண்டு விளையாடிய காட்சி, செல்லச் சண்டை பிடிக்கும் நண்பர்களின் விளையாட்டு போல் இருந்தது.
அடர்வனம் என்பதால், அந்தப் பகுதி முழுவதும் ஆதவனின் ஆசீர்வாதம் இல்லாமல் இருண்டு கிடந்தது. இவ்வாறு காட்சிகளை இரசித்தபடி, வாகனம் மெல்ல இயக்கப்பட்டது.

சற்று நேரத்தில், கன்னிமரா மரம் இருப்பிடம் வந்தடைந்தோம். சிறு குவளையில், பெரிய கேணியின் நீரை அடைக்க முயல்வது போல, சிறார்களும் பெரியவர்களும் அம்மரத்தைக் கட்டியணைக்க முயன்றுகொண்டிருந்தனர். சிலர் குடும்பமாகச் சேர்ந்தும் முயன்று கொண்டிருந்தார்கள்.
அவ்வளவு பெரிய மரம் அது. உயரம் விண்ணைத்தொடும் அளவுக்கு ஒரே நேராக ஓங்கி வளர்ந்திருந்தது. எவ்வளவு முயன்றும், அந்த மரத்தின் முழு உருவத்தையும் எங்களால் படமாக்க முடியவில்லை.
அவ்வளவு உயரம். ஆனால் நாங்கள் எழுவரும் ஒன்றுசேர்ந்து கைகோர்த்து அம்மரத்தினைக் கட்டி அணைப்பதில் வெற்றி கண்டோம்.
நேரம் ஆக ஆக, ஏற்கனவே இருட்டிக்கொண்டிருந்த அந்த இடம் மேலும் இருளடையத் தொடங்கியது. எனவே விரைந்து கிளம்பும்படி காவலர் அக்கா அறிவுறுத்தினார்.
நாங்கள் மேலும் சில புகைப்படங்கள் எடுத்துக்கொண்டிருந்த நேரத்தில், அங்கிருந்த இரண்டு வாகனமும் கிளம்பிவிட்டது.
எங்கள் வாகனமும் நாங்களும் மட்டும் அந்த அடர் வனத்தில் தனித்திருந்தோம்.
"சீக்கரம் வாங்க கிளம்பலாம்", என அக்கா சற்று கோபம் கலந்த குரலில் கூறினார். அவரின் குரலில் கோபம் மட்டும் அல்ல, எங்களைப் பத்திரமாகக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற அக்கறையும் கலந்திருந்தது.
உடனே கிளம்பிவிட்டோம், எனினும் நன்கு இருட்டத் தொடங்கிவிட்டது.

சற்று தூரம் பயணித்ததும், எங்கள் இடப்புறம் இருந்த அடர்ந்த வனத்தில், எதோ சலசலப்பு சத்தம் கேட்டுச் சட்டென்று வண்டியை நிறுத்த சொன்னார் காவலர் அக்கா.
மெல்லிய அச்சமும், பதற்றமும் கலந்த குரலில் கூறினார், "அது டஸ்கர்". ஒன்றும் புரியாமல், வாகனத்தை நிறுத்திக் கேட்டோம், "என்ன அக்கா சொன்னீங்க?". அது ஒரு டஸ்கர் என மறுபடியும் கூறினார்.
ஒன்றும் புரியாமல் நாங்கள் விழித்ததைக் கண்டு அவர் மேலும் தொடர்ந்தார்,
"பெரிய தந்தங்களைக் கொண்ட யானையை டஸ்கர் என அழைப்பார்கள். அங்க அந்த புதருக்குப் பின்னாடி பாருங்க ஒரு டஸ்கர் தனியா வருது", எனக் கூறி மறுபடியும் உற்று நோக்கினார்.
"நல்லவேளை யானை தனியா இல்லை, இன்னொரு யானையும் இருக்கு", என்றார்.
"என்ன அக்கா சொல்றீங்க, ஒரு யானை வந்தாலே கஷ்டம், நீங்க இரண்டு யானை இருக்கு பயம் இல்லனு சொல்றீங்க" என்றோம் ஆச்சரியத்துடன்.
"ஆமா, யானைக் கூட்டமா இருந்த ஆபத்து இல்லை, ஆனால் தனியா இருந்தா ஆபத்து அதிகம்" என்றார்.
யானைகளின் உருவம் முழுவதும் தெரியவில்லை, ஆனால் அக்காவின் கண்கள் மிகவும் கூர்மையானது மட்டுமல்ல, அவரின் அனுபவமும் அதிகம். எனவே அவர்களால் அதனைக் காண முடிந்தது. நன்கு உற்றுப் பார்த்த பின்னரே எங்கள் கண்களுக்குத் தெரிந்தது அந்தப் பெரிய உருவம்.
பாதி உருவம் மட்டுமே காண முடிந்த எங்களுக்குப் பெரிய தந்தங்கள் கொண்ட அந்த யானையின் முழு உருவத்தையும் காண மனம் ஏங்கியது.
ஆனால் யானைகள், நின்ற இடத்திலேயே நிலைகொண்டு மரம் செடிகளை உணவாக்கிக் கொண்டிருந்தன. நேரம் ஆகா ஆகா, மேலும் இருள் படரத் தொடங்கியது. எனவே கிளம்ப முற்பட்டோம்.
எங்களின் எண்ணங்களைப் புரிந்துகொண்டது போல யானைகளும் நகரத் தொடங்கின.
"வண்டிய நிறுத்துங்க, யானைகள் வெளியே வருகின்றன, அவைகள் சாலையைக் கடந்ததும் நாம் செல்லலாம்" என்றார் அக்கா.

ஆனால், சில வினாடிகளில், யானைகள் வழி மாறுவதைக் கவனித்த அக்கா, யானைகள் மேலும் நெருக்கமாகக் கடக்கக் கூடும் என்ற அச்சத்தில், வாகனத்தைச் சத்தம் இல்லாமல் சற்று பின்னல் செலுத்தச் சொன்னார். எங்களின் பயம் மேலும் அதிகரித்தது. வாகனத்தைச் சற்று பின் நகர்த்தி நிறுத்தினோம்.
சில நிமிடங்கள் கழிந்தது, யானைகள் வெளியே வரவில்லை. கதிரவன் இன்னும் அஸ்தமிக்கவில்லை. ஆனால், கதிரவனின் கதிர்கள், உள்நுழைய முடியாததால், இருட்டு மேலும் அதிகமாகிக் கொண்டே இருந்தது.
இன்னும் சில நிமிடங்கள், அங்கேயே காத்திருந்தோம். பயன் ஏதும் இல்லை, யானைகள் இரண்டும் வெளியே வரவில்லை, என்ன ஆனது எனவும் தெரியவில்லை.
"வண்டிய கொஞ்சம் முன்னாடி எடுங்க" என்றார் அக்கா.
"யானை வந்துட்டா என்ன அக்கா பண்றது?" என்றேன் நான்.
"வருவதா இருந்தா இந்நேரம் வந்திருக்கணும், அது வேற பக்கமா போய் இருக்கும்" என்றார் அக்கா.
சற்று மனதைத் திடப் படுத்திக் கொண்டு வாகனத்தை முன் நகர்த்தினோம். சிறு தொலைவு சென்றதும், மீண்டும் சலசலப்பு சத்தம் கேட்டது.
காவலர் அக்கா சற்று உற்று நோக்கிவிட்டுக் கூறினார், "இனி பயம் இல்ல அது ரெண்டும் வேற பக்கம் போயிடுச்சு, நீங்க கொஞ்சம் வேகமா போங்க, நாம இந்த இடத்த விட்டு சீக்கரம் போய்டணும்".
ஆபத்து இனி இல்லை என அறிந்ததும், அனைவரின் முகத்திலும் மகிழ்ச்சி, ஆனால் யானையின் முழு உருவத்தையும் பார்க்க முடியாமல் போன வருத்தமும் அதில் சற்று கலந்தே இருந்தது.

அங்கிருந்து வெளியே வந்து தார்ச் சாலையை அடைய சுமார் 6 மணி ஆனது. நன்கு இருட்டிவிட்ட காரணத்தால், வாகனத்தின் முகப்பு விளக்குகளை எரியவிட்டுப் பயணித்தோம்.
வழி எங்கும் ஆங்காங்கே மான் கூட்டங்களும், ஒரு இடத்தில் காட்டெருமை மந்தைகளும் தென்பட்டன. முகப்பு விளக்கின் வெளிச்சம் பட்டதும், அவற்றின் கண்கள், சிறிய நெருப்பு துண்டங்கள் போல் காட்சியளித்தன. அவை அந்த இருளின் பயங்கரத்தை, மேலும் பயங்கரமாக்கின.
இருட்டிவிட்ட காரணத்தாலும், 6 மணிக்கு மேல் வாகனங்கள் வெளியே செல்லக் கூடாது என்ற கடுமையான கட்டுப்பாடுகளின் காரணமாகவும், வாகனத்தை எங்கும் நிறுத்த அனுமதி தரவில்லை காவலர் அக்கா. மணி 6.30 அளவில் விடுதியை அடைந்தோம்.
"7 மணிக்கு நடன நிகழ்ச்சி ஆரம்பம் ஆகி விடும், நீங்க கொஞ்சம் சீக்கிரம் தயார் ஆகிட்டு வந்துடுங்க, பக்கத்து கட்டிடம்தான் நடந்தே போயிடலாம்" என்றார் அக்கா.
நாங்களும் சிரமப் பரிகாரங்கள் முடித்துவிட்டு விரைந்து வந்துவிட்டோம். காவலர் அக்கா எங்களை நடன மண்டபத்திற்கு அழைத்துச் சென்றார். எங்களை அங்கு விட்டு விட்டு,
"நான் இப்போ கிளம்புறேன், நீங்க நடனம் பாத்துட்டு விடுதிக்கு போய்டுங்க, வெளிய ரொம்ப நேரம் இருக்க வேண்டாம். நான் காலைல 6 மணிக்கு வந்துருவேன்.
அதுவரைக்கும் உங்களுக்கு ஏதாச்சும் உதவி வேணும்னா, விடுதி காவலர் கிட்ட கேளுங்க அவங்க உதவி பண்ணுவாங்க. நீங்க காலைல சீக்கரம் தயார் ஆய்டுங்க. 6.30 மணிக்கு நாம கிளம்பலாம்" எனக் கூறி விடை பெற்று சென்றார் அக்கா.

அரைமணி நேரம் அரங்கேறியது அந்த அற்புத ஆட்டம். ஆடவர்கள் வாத்தியம் இசைக்க, அந்த இசைக்கேற்ப அற்புதத்தை அரங்கேற்றினார்கள் அம்மலையில் வசிக்கும் பெண்கள்.
அரைமணி நேரம் சட்டென முடிந்தது போல் இருந்தது. நடன அரங்கம் விட்டு வெளியே வந்ததும். சில பெட்டிக்கடைகள் இருந்தன. விடுதிக்குச் செல்லும் முன், சில தின்பண்டங்கள் வாங்கிச் செல்ல கடைக்குச் சென்றோம்.
தெரு விளக்குகள் எதுவும் இல்லை. சுற்றிலும் கும் இருட்டு. அமாவாசை முடிந்து 10 தினங்களுக்கு மேல் இருக்கும். நிலவு வளர்பிறை பருவத்திலிருந்தது.
நிலவு முழு வடிவம் பெற்றிருக்காவிட்டாலும், மெல்லிய ஒளியை வீசிக்கொண்டிருந்தது. நிலவொளியுடன், எங்கள் கைப்பேசியின் ஒளியையும் துணைக்குக் கொண்டு நடந்து சென்றோம். அப்பொழுது, அங்கிருந்த பெரியவர் ஒருவர்,
"தம்பிகளா ரொம்ப நேரம் வெளிய இருக்காதீங்க. சீக்கரம் போய்டுங்க. காட்டு பண்ணி சுத்திட்டு இருக்கும். அது ரொம்ப மோசமானது. போன வரம், ஒரு பெண்ணை முட்டி தள்ளிடுச்சு. பாவம் அவ, கால் ஒடஞ்சு மருத்துவமனையில் இருக்கா" எனக் கூறி முடித்தார்.

மனதில் சற்று பயத்துடன், கடைக்குச் சென்று தேன்மிட்டாய், இளந்தபழம், பட்டாணி போன்ற தின்பண்டங்களை வாங்கிக்கொண்டு விடுதிக்கு விரைந்து சென்றோம்.
இரவு உணவு தயார் நிலையிலிருந்தது. அரைமணி நேரம் ஓய்வெடுத்த பிறகு அனைவரும் உணவருந்த ஆயத்தம் ஆனோம். சைவம், அசைவம் இரண்டும் பரிமாறப்பட்டது.
அரிசி சோறு, கோதுமை ரொட்டி, நாட்டுக் கோழி குழம்பு, இரசம், மோர், பருப்பு குழம்பு, அப்பளம் என அனைத்தும் அடங்கிய விருந்து உணவு பரிமாறப்பட்டது.
உணவு மிகுந்த சுவையுடன் இருந்தது. நல்ல பசியிலிருந்த நாங்கள் வயிறார உணவருந்தினோம்.
விடுதிக்கு வெளியே ஒரு அழகிய பூந்தோட்டம் இருந்தது. இரவில், மின்விளக்கின் ஒளியில் பூந்தோட்டம் மிக ரம்மியமாக இருந்தது. அங்கிருந்த சுற்றுச் சுவரில் அமர்ந்து கதைகள் பேச ஆரம்பித்தோம்.
அன்று நாள் முழுவதும் நடந்த நிகழ்வுகளைப் பேசி மகிழ்ந்தோம். நேரம் அதிகம் ஆனதால், அறைக்குச் செல்ல வேண்டினர் விடுதியின் காவலர். அரை மனத்துடனே அறைக்குச் சென்றோம், ஆனால் இப்பொழுது ஒரு சிறிய மாறுதல், அனைவரும் ஒன்றாக ஒரே அறைக்குச் சென்றோம்.
உடன் கொண்டுவந்திருந்த சீட்டுக் கட்டுகளை அவிழ்த்து விளையாட ஆரம்பித்தோம். கூடி மகிழ்ந்து, கதைகள் பேசிக் கொண்டாட்டத்துடன் விளையாடியதில் நேரம் போவதைக் கவனிக்க யாருக்கும் நேரமில்லை.
காலையில் 6 மணிக்குத் தயாராக இருக்கும்படி காவலர் அக்கா கூறியது சட்டென நினைவிற்கு வரவே, உறங்கச் செல்வது என முடிவு செய்து, அவரவர் அறைக்குச் சென்று ஓய்வெடுத்தோம்.
அன்று நாள் முழுவதும் நடந்த நிகழ்வுகள் மனதிலும் கண்களிலும் கனிந்திருக்க, நித்ராதேவி எங்களை ஆட்கொண்டு நித்திரையில் ஆழ்த்தினாள்.
முதல் நாள் பயணம் இனிதே முடிந்தது. இரண்டாம் நாள் பயணத்தில் சந்திபோம்..!

இனி வாசகர்கள் விகடன் அறிவிக்கும் மாதாந்திர தலைப்பை மையப்படுத்தி கட்டுரைகள் அனுப்பலாம்.
இந்த மாதத்திற்கான தலைப்பு - ‘சுற்றுலா”. சுற்றுலா என்கிற தலைப்பில் My Vikatanக்கு உங்களது கட்டுரை படைப்புகளை அனுப்பலாம். நீங்க சுற்றுலா போன அனுபவமாக இருக்கலாம், பார்க்க வேண்டிய தலங்களாக இருக்கலாம், சுற்றுலா போகும் போது செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்த தகவல்களாகவும் இருக்கலாம். ஆனால், உங்களின் சொந்த படைப்பாக, இதுவரை எந்த தளத்திலும் வெளிவராத படைப்பாக இருக்க வேண்டும், புகைப்படங்களுடன் அனுப்பவேண்டும். தேர்வு செய்யப்படும் கட்டுரைகள் அனைத்தும் பிரசுரம் ஆகும்.
வாசகர்களை உற்சாகப்படுத்தும் நோக்கில், இந்த மாதம் அனுப்பப்படும் பயணக் கட்டுரைகளில் சிறந்த கட்டுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுத் தொகை வழங்கப்பட உள்ளது.
பரிசுத்தொகை விவரம்:
முதல் பரிசு : ரூ. 2,500 (2 வெற்றியாளர்கள்)
இரண்டாம் பரிசு : ரூ. 1000 (5 வெற்றியாளர்கள்)
நினைவுப் பரிசு: ₹500 (10 வெற்றியாளர்கள்)
நினைவில் கொள்க:
நீங்க கட்டுரையை அனுப்ப வேண்டிய கடைசி நாள் ஏப்ரல் 20, 2025
ஒருவர் ஒன்றுக்கு மேற்பட்ட கட்டுரைகளை அனுப்பலாம்.
உங்கள் படைப்புகளை: my@vikatan.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம்
விகடனுக்கு என்று பிரத்யேகமாக அனுப்பப்படும் கட்டுரைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும்
உங்கள் படைப்பை திருத்தவோ, பிரசுரிக்கவோ, நிராகரிக்கவோ முழு உரிமையும் விகடனுக்கு இருக்கிறது.
கட்டுரையின் தரத்தின் அடிப்படையில் வெற்றியாளர்கள் விகடன் நடுவர் குழுவால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!

ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.