TVK: "சமரசத்திற்கு இடமில்லை.. எந்த எல்லைக்கும் செல்வோம்" - தவெக தலைவர் விஜய் பேசியது என்ன?
த.வெ.க மேற்கு மண்டல பூத் கமிட்டி முகவர்கள் கருத்தரங்கம் இரண்டாவது நாளாக நேற்றும் கோவை தனியார் கல்லூரியில் நடைபெற்றது.
நேற்றைய தினம் கோவை, திருப்பூர், நீலகிரி, கரூர் மாவட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
ஹோட்டலில் இருந்து விஜய் கேரவன் மூலம் ரோட் ஷோவாக நிகழ்ச்சி அரங்கத்துக்கு வந்தார்.

கூட்டத்தில் பேசிய அக்கட்சி பொதுச்செயலாளர் என். ஆனந்த், “கோவையே சும்மா அதிருதுல. இங்கு வந்துள்ள 8,500 பேர் 8.50 லட்சம் வாக்குக்குச் சமம். இங்கேயே நமக்கு 50 லட்சம் ஓட்டு நம் கையில் இருக்கிறது” என்று பேசினார்.
தேர்தல் பிரிவு மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா, “எங்கள் தலைவர் 3 நிமிடம்தான் பேசினார். சற்று கூடுதலாகப் பேசியிருக்கலாம் என்று சிலர் கூறுகிறார்கள்.
3 நிமிடம் பேசியதையே தாங்க முடியாமல் தொலைக்காட்சியில் ஒரு மணி நேரம் விவாதம் நடத்துகிறார்கள்.

எங்கு, என்ன பேச வேண்டும் என்பது எங்கள் தலைவருக்கு நன்கு தெரியும்.” என்று விமர்சனங்களுக்குப் பதில் அளித்தார்.
த.வெ.க தலைவர் விஜய் இரண்டாம் நாள் தன் கருத்தைச் சற்று தெளிவாகவும், உறுதியாகவும் முன் வைத்தார்.
கருத்தரங்கில் கடைசியாக மைக் பிடித்த விஜய் பேசும்போது, “என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்களுக்கு வணக்கம். நேற்று பேசும்போது இந்தக் கூட்டம் ஓட்டுக்காக நடத்தப்படும் கூட்டம் இல்லை என்று சொன்னேன். த.வெ.க வெறும் அரசியல் ஆதாயத்துக்காகத் தொடங்கப்பட்ட கட்சி கிடையாது.

சமரசம் என்ற பேச்சுக்கே இடம் இல்லை. இதனால் மக்களுக்கு ஒரு நல்லது நடக்கிறது என்றால் எந்த ஒரு எல்லைக்குச் சென்றும் மக்களுக்கு நல்லது செய்ய தயங்க மாட்டோம்.
நமது ஆட்சி அமையும்போது ஒரு சுத்தமான அரசாக இருக்கும். நமது அரசாங்கத்தில் கரப்ஷன் இருக்காது. கல்பிரட்கள் இருக்க மாட்டார்கள். அதனால் நமது வாக்குச்சாவடி முகவர்கள் எந்த தயக்கம் இல்லாமல் தைரியமாகச் சென்று மக்களை நேரடியாகச் சந்திக்க வேண்டும்.

‘மக்களிடம் செல். மக்களிடம் இருந்து கற்றுக்கொள். மக்களுடன் வாழ். மக்களுடன் இருந்து மக்களுக்காகச் சேவை செய்’ என்ற பேரறிஞர் அண்ணாவின் கூற்றை மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.
இதைப் புரிந்து கொண்டு நீங்கள் செயல்பட்டால் உங்கள் ஊர் சிறுவாணி தண்ணீரைப் போல அவ்வளவு சுத்தமான ஒரு ஆட்சி அமையும்.
நம் ஆட்சி தெளிவான, உண்மையான, வெளிப்படையான நிர்வாகம் செய்யக்கூடிய ஆட்சியாக அமையும். இதை ஒவ்வொருவரும் மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும்.
வாக்குச்சாவடிக்கு ஓட்டுப் போடும் மக்களுக்கு நாம் உதவியாக இருக்க வேண்டியது நம் கடமை. குடும்பம், குடும்பாக கோயில்களுக்கு, பண்டிகைக்குச் செல்வதைப் போல், நமக்காக குடும்பமாக ஓட்டுப் போடும் மக்களுக்கு இதை ஒரு கொண்டாட்டமாகச் செய்ய வேண்டும்.

அப்படி ஒரு எண்ணத்தை மக்களிடம் உருவாக்க வேண்டும். நீங்கள்தான் முதுகெலும்பு. அதை மனதில் வைத்துக் கொண்டு செயல்படுங்கள். மன உறுதியுடன் இருங்கள். நல்லதே நடக்கும்” என்றார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs