உச்சநீதிமன்ற கிளையை சென்னையில் அமைக்க வேண்டும்: முதல்வர் மீண்டும் கோரிக்கை
TVK : 'பாளையங்கோட்டைனா சஜிதானே...' - நெருக்கமான மாவட்டச் செயலாளர் மரணம்; சோகத்தில் விஜய்!
தமிழக வெற்றிக் கழகத்தின் திருநெல்வேலி வடக்கு மாவட்டச் செயலாளர் சஜி என்பவர் மாரடைப்பால் திடீரென உயிரிழந்திருக்கிறார். சஜி, விஜய் தனியே அழைத்து பேசக்கூடிய முக்கிய நிர்வாகி. அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்துக்கு மிகவும் நெருக்கமானவர். முக்கிய நிர்வாகியை இழந்திருப்பதால் பனையூர் வட்டாரமே சோகத்தில் மூழ்கியிருக்கிறது. ஸ்ரீபெரும்புதூரில் வைக்கப்பட்டிருக்கும் அவரின் உடலுக்கு அக்கட்சியின் தலைவர் விஜய் நேரில் சென்று அஞ்சலி செலுத்தவிருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.

விஜய் ஒவ்வொரு கட்டத்துக்கும் 19 மாவட்டச் செயலாளர்களாக அறிவித்துக் கொண்டிருக்கிறார். இரண்டு நாட்களுக்கு முன்பு கூட 6 ஆம் கட்ட மாவட்டச் செயலாளர்களின் பட்டியலை விஜய் வெளியிட்டிருந்தார். திருநெல்வேலி மற்றும் பாளையங்கோட்டை தொகுதிகளை உள்ளடக்கி திருநெல்வேலி வடக்கு மாவட்டமென உருவாக்கி அதற்கு மாவட்டச் செயலாளராக சஜி என்பவரை விஜய் நியமித்திருந்தார். கட்சிப் பணிகளுக்காக கடந்த சில நாட்களாக சென்னையில் முகாமிட்டிருந்தவர், இன்று காலை திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்திருக்கிறார். சஜி, ஆனந்துக்கு நெருக்கமானவர். எப்போதுமே ஆனந்துடனே பயணிப்பவர். அதனால் தமிழகம் முழுவதுமுள்ள தவெக நிர்வாகிகளுக்கு பரிச்சயமானவர். இரண்டு நாட்களுக்கு முன்பு ஆறாம் கட்ட மா.செக்களை அறிவித்துவிட்டு விஜய் கிளம்பிய போதும் சஜியை அழைத்துதான் கட்சி விவகாரங்கள் குறித்து தனியாக பேசிவிட்டு சென்றார்.
90 களிலிருந்தே விஜய்யின் ரசிகர் மன்றத்தை சேர்ந்தவர் என்பதாலும் எந்த வேலையாக இருந்தாலும் இழத்துப் போட்டு செய்வதாலும் விஜய்யுமே தனிப்பட்ட முறையில் சஜியை பற்றி நல்ல அபிப்ராயம் கொண்டிருந்ததாக சொல்கின்றனர் தவெக-வினர்.
நிர்வாகிகள் நியமனத்தின் போது திருநெல்வேலி, பாளையங்கோட்டை தொகுதியை உள்ளடக்கிய திருநெல்வேலி வடக்கு மாவட்டத்துக்கு அந்தோணி சேவியர் என்பவரை மாவட்டச் செயலாளராக நியமித்திருப்பதாக சொல்லி விஜய்யின் முன் அந்த மாவட்டத்து ஃபைல் வைக்கப்பட்டிருக்கிறது. 'பாளையங்கோட்டைன்னா சஜிதானே. அவருக்கு போஸ்டிங் போடாமா வேற யாருக்கோ போட்ருக்கீங்களே என்ன விஷயம்?' என ஆனந்திடம் விஜய் கொஞ்சம் இறுக்கமாகவே கேட்டிருக்கிறார். அதற்கு, 'சஜியோட சர்டிபிகேட் பெயர் அந்தோணி சேவியர்தான் சார்...' என ஆனந்த் விளக்கிய பிறகுதான் விஜய் கூலாகியிருக்கிறார். 'ஏம்பா எத்தனை வருசமாக பழகியிருக்கோம். உனக்கு இன்னொரு பெயர் இருக்குன்னு சொல்லாம விட்டுடேயப்பா..' என நியமன ஆணையை வழங்கும்போது விஜய்யும் சஜியிடம் ஜாலியாக கலாய்த்திருக்கிறார்.

அதேமாதிரி, நிர்வாகிகள் கூடியிருந்த அரங்கத்தில் திருநெல்வேலி பெண் நிர்வாகி ஒருவர், 'சஜி அண்ணா..சஜி அண்ணா..' என சத்தமாக அழைத்திருக்கிறார். அதைக் கவனித்த விஜய்யும், 'ண்ணா...சஜி அண்ணா..வாங்கண்ணா..' என படங்களில் அவர் பேசும் பாணியில் பேசி ஜாலியாக கலாய்த்திருக்கிறார். அதேமாதிரி, இரண்டு நாட்களுக்கு முன்பு ஆறாம் கட்ட மா.செக்கள் அறிவிப்பை முடித்துவிட்டு விஜய் காரில் ஏறி கிளம்ப சென்றார். சஜியை பார்த்தவுடன் காரில் இருந்து இறங்கிய விஜய் அவரிடம் தனியாக சில நிமிடங்கள் பேசி தென் மாவட்டங்களின் அப்டேட்டை கேட்டுவிட்டுதான் சென்றிருக்கிறார். பனையூரில் ஒரு சில நிர்வாகிகளுக்கு மட்டுமே விஜய் இந்தளவுக்கு முக்கியத்துவம் கொடுப்பார். அப்படிப்பட்ட நிர்வாகி உயிரிழந்ததால் பனையூர் வட்டாரமே சோகத்தில் இருக்கிறது.
'கட்சிக்காக நேரம் காலம் பார்க்காம ஓடி ஓடி உழைப்பாரு. அவர் நல்லா தூங்கியே பல மாசம் ஆச்சு. 10 நாளைக்கு முன்னாடிதான் சுகர் அதிகமாக ஹாஸ்பிட்டல்ல காமிச்சாரு. மாத்திரைகளை சரியா எடுத்து ஜாக்கிரதையா இருங்கன்னு டாக்டர்களும் அறிவுறுத்துனாங்க. உடம்ப பார்க்காம கட்சி கட்சினு ஓடினாரு. இப்பவும் கட்சிப் பணிக்காக சென்னை வந்தப்போதான் இப்படி ஆகிப் போச்சு.' என வருந்துகின்றனர் தவெக நிர்வாகிகள்.

விஜய் பையனூரில் 'ஜனநாயகன்' படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறார். சஜியின் இறப்புப் பற்றி தகவல் விஜய்க்கு சொல்லப்பட்டிருக்கிறது. 'என் மீதும் கழகத்தின் மீதும் அளவற்ற அன்பு கொண்டு கழகப் பணியாற்றி வந்தவர். அவரைப் பிரிந்து வாடும் அவரது குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றேன்.' என சஜிக்காக இரங்கல் செய்தியையும் விஜய் ட்விட்டரில் வெளியிட்டிருக்கிறார்.
உடற்கூறாய்வுக்காக சஜியின் உடல் ஸ்ரீபெரும்புதூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டிருக்கிறது. இன்று மாலை அங்கே நேரில் சென்று அவரின் உடலுக்கு விஜய் அஞ்சலி செலுத்தவிருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.