ஜம்மு ரயில் நிலையத்தை தகர்க்க புறா மூலம் வெடிகுண்டு மிரட்டல்?
TVK மதுரை மாநாடு: ``Stalin Uncle... Its Very Wrong Uncle" - மாநாட்டில் விஜய் பேச்சு
தமிழக அரசியலில் புதிய கட்சியாகக் கடந்த ஆண்டு பிப்ரவரி 2-ம் தேதி விஜய்யால் தொடங்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு கொள்கை விளக்க மாநாடாக 2024 அக்டோபர் 27-ம் தேதி மாபெரும் அளவில் நடத்தப்பட்டது.
இந்த நிலையில், மதுரை பாரபத்தியில் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு இன்று மாலை 3 மணியளவில் தொடங்கியது. அதைத்தொடர்ந்து மாநாட்டில் உரையாற்றிய விஜய், ``எதிர்காலம் வரும் என் கடமை வரும் இந்தக் கூட்டத்தின் ஆட்டத்தை ஒழிப்பேன்... மறைமுக உறவுக்காரரான பாசிச பா.ஜ.க-வுக்கும் பாயச தி.மு.க-வுக்கும் எதிராக மக்கள் அரசியல் என்ற அந்தச் சவுக்கை எடுக்கலாமா?
நரேந்திர மோடிஜி அவர்களே மூன்றாவது முறையாக ஒன்றியத்தின் ஆட்சி அதிகாரத்தை கையில் வைத்திருக்கிறீர்கள். நீங்கள் ஆட்சிக்கு வந்தது ஒட்டுமொத்த மக்களுக்கும் நல்லது செய்வதற்காகவா? அல்லது நம்முடைய இஸ்லாமிய நண்பர்களுக்கும், தோழர்களுக்கும் எதிராகச் சதி செய்வதற்காகவா?
மக்களுக்குக் கேட்பதற்கு நிறையக் கேள்விகள் இருக்கின்றன. அதனால் அவர்கள் சார்பாக உங்களிடம் சில கேள்விகளைக் கேட்க வேண்டும் மிஸ்டர் பிரைம் மினிஸ்டர் அவர்களே!
நமது தமிழ்நாட்டின் மீனவர்கள் கிட்டத்தட்ட 800 பேருக்கும் மேல் இலங்கை கடற்படையால் தாக்கி அழிக்கப்பட்டிருக்கிறார்கள். அதைக் கண்டிப்பதற்காக உங்களிடம் எதையும் கேட்கவில்லை. என்னுடைய மீனவர்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக, கச்சத்தீவை எங்களுக்கு மீட்டுக் கொடுங்கள். உங்களுடைய முரட்டுப் பிடிவாதத்தால் நடத்திக்கொண்டிருக்கும் நீட் தேர்வை நீக்குங்கள். செய்வீர்களா திரு. நரேந்திர பாய் தாமோதர மோடிஜி அவர்களே...
எங்களுக்கு என்ன தேவையோ, எது நல்லதோ அதைச் செய்யாமல் ஆட்சியை மட்டும் கையில் வைத்துக் கொண்டிருக்கிறது பா.ஜ.க. மக்களை ஏமாற்ற நேரடியாக பாசிச பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்திருக்கும் அடிமை கூட்டணி ஒன்று, மறைமுகமாக ஆர்.எஸ்.எஸ் - பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்திருக்கக் கூடிய குடும்பம் ஒன்று. இப்படி மக்கள் சக்தியே இல்லாத இந்த ஊழல் கட்சிகளை அடிபணிய வைத்து, 2029 வரை சொகுசாகப் பயணம் செல்லலாம் எனத் திட்டம் வைத்திருக்கிறீர்களா மோடி ஜி.
என்னதான் நேரடியாகவும், மறைமுகமாகவும் எனக் குட்டிக்கரணம் போட்டாலும், தாமரை இலையில் தண்ணீரே ஒட்டாது தமிழக மக்கள் மட்டும் எப்படி ஓட்டுவார்கள்?
தமிழ்நாட்டில் ஒரு எம்.பி சீட்டு கூட தரவில்லை என்பதற்காக, தமிழ்நாட்டுக்கும், மக்களுக்கும் எதுவும் செய்யாமல் வஞ்சனை செய்கிறது ஒன்றிய பா.ஜ.க அரசு. சங்கம் வைத்து தமிழ் வளர்த்த தமிழ் மண்ணின், கீழடியில் கிடைத்த ஆதாரங்களை எல்லாம் மறைத்து, எங்கள் நாகரிகத்தையும் வரலாற்றையும் அழிக்கும் வேலையைச் செய்யலாம் என்று நினைக்கிறீர்கள். தமிழ்நாட்டைத் தொட்டால் என்ன நடக்கும் என்பதற்குப் பல உதாரணங்கள் இருக்கின்றன. இதை எல்லாம் மறைத்து விட்டு எங்கள் மக்களை ஏமாற்றலாம் என நினைக்காதீர்கள்.
மத நல்லிணக்கத்திற்குப் பெயர் பெற்ற இந்த மதுரை மண்ணிலிருந்து சொல்கிறேன். உங்கள் எண்ணமெல்லாம் ஒரு நாளும் ஈடேறாது.
எம்.ஜி.ஆர் உயிரோடு இருக்கும் வரை, அந்த முதலமைச்சர் சீட்டை எனக்குக் கொடுங்கள் என எதிரிகளை மக்களிடம் கெஞ்ச வைத்தவர். இப்பொழுது அவர் ஆரம்பித்த கட்சியைக் கட்டி காப்பாற்றுவது யார்? அந்தக் கட்சி எப்படி இருக்கிறது? அந்தக் கட்சியின் அப்பாவி தொண்டர்கள் அதை வெளியே சொல்ல முடியாமல் வேதனையில் தவிக்கிறார்கள்.
அதனால் எந்த வேஷம் போட்டு பா.ஜ.க தமிழ் நாட்டுக்கு வந்தாலும், அவையெல்லாம் இங்கு வேலைக்கு ஆகாது. இப்படிப் பொருந்தா கூட்டணியாக பா.ஜ.க கூட்டணி இருப்பதால், விளம்பர தி.மு.க பா.ஜ.க-வுடன் உள்ளுக்குள் ஒரு உறவை வைத்துக் கொண்டு, வெளியே எதிர்ப்பது போல நடித்துக் கொண்டு கொண்டிருக்கிறது.
எதிர்க்கட்சியாக இருந்தால் மோடிக்கு எதிர்ப்பு தெரிவித்து பலூன் விடுவது. ஆளும் கட்சியாக இருந்தால் குடைபிடித்துக் கொண்டு கும்பிடு போட்டு வரவேற்பது. ஒரு ரெய்டு வந்துவிட்டால் போதும் இதுவரை போகவே போகாத ஒரு மீட்டிங்கைக் காரணம் காட்டி, டெல்லிக்குச் சென்று விடுவார்கள். அங்கு ஒரு ரகசிய மீட்டிங் நடத்தி அந்த ரெய்டு பிரச்னையைக் காணாமலாக்கிவிடுவார்கள். வாட் ஸ்டாலின் அங்கிள். இட்ஸ் வெரி ராங் அங்கிள்" எனப் பேசினார்.