ஆப்கானுடன் கைகுலுக்கும் இந்தியா; பாகிஸ்தானுடன் குலாவும் அமெரிக்கா! - மாறும் கூட்...
TVK Vijay: "ஒரு அரசியல் தலைவர் மக்களைச் சந்திக்க முடியாத சூழல்" - அரசை விமர்சிக்கும் தமிழிசை
தவெக தலைவர் விஜய் கலந்துகொண்ட கரூர் பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். அதைத் தொடர்ந்து நடந்த பல்வேறு அரசியல் மோதல்களுக்கு நடுவில், கூட்ட நெரிசல் மரணம் தொடர்பான வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.
அதைத் தொடர்ந்து, கரூரில் உயிரிழந்த குடும்பத்துக்கு தவெக தலைவர் விஜய் ரூ. 20 லட்சத்தை நிவாரணமாக வழங்கினார். அதே நேரம், கரூரில் பாதிக்கப்பட்டவர்களை தவெக தலைவர் விஜய் நேரில் சென்று சந்திக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்தது.
இதற்கிடையில் தவெக தலைவர் கரூர் செல்லவிருப்பதாகவும் தகவல் வெளியானது. இந்த நிலையில், இரண்டு தினங்களுக்கு முன்பு கரூரில் பாதிக்கப்பட்ட 37 குடும்பத்தினரை மாமல்லபுரம் வரவழைத்து தவெக தலைவர் சந்தித்தார்.

அப்போது, பாதிக்கப்பட்ட குடும்பத்தினரின் காலில் விழுந்து மன்னிப்புக் கேட்டதாகவும், அவர்களின் குடும்பத்தில் ஒருவராக இருந்து கவனித்துக்கொள்வதாகவும் ஆறுதல் கூறியதாக தகவல் வெளியானது. அதே நேரம் தவெக தலைவர் விஜய் நேரில் செல்லாமல், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை வரவழைத்து சந்தித்தது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளானது.
இந்த நிலையில், தமிழ்நாடு பா.ஜ.க-வின் முன்னாள் தலைவரும், தெலங்கானா முன்னாள் ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் சென்னை பெரம்பூரில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது கரூர் மக்களை நேரில் வரவழைத்து விஜய் சந்தித்தது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த தமிழிசை, ``தமிழ்நாட்டில் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால், தமிழ்நாட்டில் ஒரு அரசியல் கட்சித் தலைவர் சுதந்திரமாக ஒரு இடத்துக்குச் சென்று மக்களைச் சந்திக்க முடியாத சூழல் தமிழ்நாட்டில் இருக்கிறது என்ற உண்மையை ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும்.
பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் சொல்வது இயற்கையான விஷயம். ஆனால், நினைத்த நேரத்தில் அனுமதி பெறாமலோ, அல்லது அனுமதி பெற்றும்கூட ஒரு இடத்துக்குச் செல்ல முடியவில்லை. இதுதான் இப்போது தமிழ்நாட்டின் கள எதார்த்தம்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
















