செய்திகள் :

ஆப்கானுடன் கைகுலுக்கும் இந்தியா; பாகிஸ்தானுடன் குலாவும் அமெரிக்கா! - மாறும் கூட்டணி கணக்குகள்!

post image

(பொறுப்பு துறப்பு: இந்த கட்டுரையில் இடம்பெற்றிருக்கும் கருத்துக்கள் அனைத்தும் கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துக்கள். விகடனின் கருத்துக்கள் அல்ல - ஆசிரியர்)

தெற்காசியப் பிராந்திய அரசியல் களத்தில் கடந்த சில வாரங்களாக பரபரப்பாக செய்தித் தலைப்புகளில் அடிபட்டவை  இரண்டு விஷயங்கள். 


ஒன்று , இந்தியாவுடன் இறக்குமதி வரி விவகாரம் தொடங்கி  விசா பிரச்சனைகள் வரை கடுமை காட்டி, கடந்த சுமார் 30 ஆண்டுகளாக நெருக்கமான இந்திய அமெரிக்க உறவுகளில் ஒரு பெரும் விரிசலை ஏற்படுத்திய அமெரிக்க அதிபர் ட்ரம்ப்,   மேலும் இந்தியாவுக்கு எரிச்சலையூட்டும் விதமாக,  பாகிஸ்தானுடன் காட்டத் தொடங்கியிருக்கும் திடீர் நெருக்கம். 

இரண்டாவது,  அதே போல,  கடந்த சுமார் 25 வருடங்களாக இந்தியாவுக்குத் தலைவலியாக இருந்த ஆப்கானிஸ்தானின் தாலிபான்கள்,  இந்தியாவுடன் சுமுக உறவுக்குத் தயார் என்று கொடி காட்டியிருப்பதும்,  இந்தியாவும் அதற்கு சற்று சாதகமாக சமிக்ஞை செய்திருப்பதும்தான். 

மோடி, ட்ரம்ப்...


ஆப்கானிஸ்தான் - இந்திய உறவுகளில் ஏற்படத் தொடங்கி இருப்பது போலத் தெரியும் மாற்றங்கள் கடந்த இரு வாரங்களுக்கு முன் ஆப்கானிஸ்தானின் வெளியுறவு அமைச்சர் அமிர் கான் முட்டக்கியின் விஜயத்திலிருந்து  வெளிச்சத்துக்கு வந்திருந்தாலும், இதற்கான அடித்தளம் கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியாவால் போடப்பட்டிருக்கிறது.  

ஆப்கானிஸ்தானைப் பொறுத்தவரை, இந்தியாக்கு அந்நாட்டுடன் நெருங்கிய கலாசார, வரலாற்றுத் தொடர்புகள் இருந்திருக்கின்றன.  ஆனால் , இஸ்லாமியக் கடும்போக்கு தாலிபான்கள் அரசு 90களின் மத்தியில் அங்கு அமைந்ததிலிருந்து உறவுகள் பாதிக்கப்பட்டன.  

1999ல்  இந்திய பயணிகள் விமானத்தை பாகிஸ்தானிலிருந்து இயங்கிய தீவிரவாதிகள் கடத்தி, ஆப்கானிஸ்தானின் காந்தகார் விமான நிலையத்தில் பிடித்து வைத்து,  பயணிகளை விடுவிக்க,  இந்தியச் சிறைகளில் இருந்த பாகிஸ்தானியத் தீவிரவாதிகளை விடுதலை செய்யக் கோரி,  அதற்கு அப்போதைய வாஜ்பாய் தலைமையிலான அரசு இசைந்ததும்  இந்தியாவால் மறக்கமுடியாத வரலாறு.

இதன் பின்னர்,  2001 செப்டம்பர் 11  இரட்டைக் கோபுரத் தாக்குதலை அடுத்து, அமெரிக்காவின் சீற்றத்துக்கு ஆளான தாலிபான் அரசு,  அமெரிக்க படையெடுப்பால் அகற்றப்பட்டு,  மேற்குலகின் ஆதரவு பெற்ற ஹமித் கார்சாய் அரசு ஆப்கானிஸ்தானில் உருவான பின்னர், இந்திய-ஆப்கானிஸ்தான் உறவுகள் மேம்படத்  தொடங்கின. 

ஆப்கானிஸ்தானுடன் மீண்டும் தூதரக உறவுகளை உருவாக்கிய இந்தியா,  போரினால் பாதிக்கப்பட்ட ஆப்கானிஸ்தானின் பொருளாதர புத்தாக்கத்துக்கும் பல கோடிக்கணக்கான டாலர்கள் நிதி உதவி செய்தது.  

இந்த இந்திய உதவிக்குப் பின்னால், ஒரு புவிசார் அரசியல் யதார்த்தக் கணக்கும் இருந்தது.  இந்தியாவின் பரம வைரியான பாகிஸ்தான் , ஆப்கானிஸ்தானை தனது, “கேந்திர அரசியல் கொல்லைப்புறமாக”வே பார்த்து வந்திருக்கிறது.  தனது கிழக்கு எல்லையில் இந்தியாவின் அரசியல்-ராணுவ நகர்வுகளுக்கு ஈடுகொடுக்கவும்,  சமன் செய்யவும், தன் மேற்கு எல்லையில் அமைந்திருக்கும் ஆப்கானிஸ்தானை அது பயன்படுத்திக்கொண்டிருந்தது. அதிலும் தாலிபானுடன் பாகிஸ்தானின் நட்பு அதற்கு ஒரு “நல்வாய்ப்பாக” அமைந்திருந்தது. 

Taliban Minister in india
இந்தியா - தாலிபன் அமைச்சர்

இதைக் கணக்கில் கொண்டுதான், தாலிபான் அரசு 2001ல் அமெரிக்கப் படையெடுப்பால் வீழ்ந்த போது, இந்தியா , மேற்குலக ஆதரவுடன் அமைந்த புதிய ஆப்கானிஸ்தான் அரசுக்கு ஆதரவும், ராஜிய அங்கீகாரமும் தந்து,  தாலிபான் காலத்தில் துண்டிக்கப்பட்டிருந்த தூதரக உறவுகளை புதுப்பித்தது. 

ஆனால் அமெரிக்காவின் ஆப்கன் ஈடுபாடு தோல்வியில் முடிந்து,  2021 ஆகஸ்டில்  அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறி,  காபூல் மீண்டும் தாலிபான் வசம் போன நிலையில்,  இந்தியா அவசர அவசரமாக தனது காபூல் தூதரகத்தையும்,  ஆப்கானிஸ்தானில் கடந்த 20 ஆண்டுகளில் தொடங்கப்பட்டிருந்த  நான்கு  துணைத் தூதரகங்களையும் மூடி,  தன் ராஜிய அலுவலகர்களையும்,  மற்ற இந்தியப் பிரஜைகளையும் ஆப்கானிஸ்தானிலிருந்து விலக்கிக்கொண்டது.  


இந்தியாவில் இயங்கி வந்த ஆப்கானிஸ்தான் தூதரகம்,  பழைய அரசின் பிரதிநிதிகளைக் கொண்டே சில மாதங்கள் இயங்கி பின்னர் அவை செயலிழந்து போயின. 

இதற்கிடையே,  தாலிபான் அரசு மீண்டும் அமைந்ததால் பாகிஸ்தான் அடைந்த பெரு மகிழ்ச்சி வெகு காலம் நீடிக்கவில்லை.  

இதற்குக் காரணம், பாகிஸ்தானில் அரசுக்கு எதிராக செயல்பட்டுவரும் டெஹ்ரிக் இ தாலிபான் என்ற பாகிஸ்தானத் தாலிபான் அமைப்பினர் சமீப சில மாதங்களாக நடத்திவரும் தாக்குதல்கள்தான் என்று கூறப்படுகிறது.  பாகிஸ்தானின் வடமேற்கு எல்லைப்புற மாகாணத்தில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதல்கள் அதற்கு அப்பால் இருக்கும் ஆப்கானிஸ்தானில் இருந்துகொண்டு பாகிஸ்தானுக்குள் ஊடுருவி நடத்தப்பட்டவை என்பதால், பாகிஸ்தான் இத்தாக்குதலை நடத்தியவர்களுக்கு ஆப்கான் தாலிபான் அரசு ஆதரவு அளிப்பதாக குற்றம் சாட்டியது. 

இதை தாலிபான் அரசு மறுக்க, இரு நாடுகளுக்கும் இடையே வார்த்தைப் போர் வெடித்து, உறவுகள் மோசமடைந்தன.  

பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் எல்லை

இந்தப் பின்னணியில்தான் ஆப்கானிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையே நிலவி வந்த முறுகல் நிலையில் சற்று மாற்றம் ஏற்பட்டிருக்கிறது.  `எதிரியின் எதிரி நண்பன்' என்ற கொள்கையைப் பின்பற்றி இரு நாடுகளும் பரஸ்பரம் தங்கள் பழையை விரோதங்களை மறந்து புதிதாக உறவுக்குக் கை கொடுக்கத் தொடங்கியிருக்கின்றன. 


2021ல் காபூலில் மீண்டும் ஆட்சிக்கு வந்த தாலிபான் அரசை ரஷ்யா தவிர வேறெந்த பெரிய நாடுகளும் உலக அளவில் அங்கீகரிக்காத நிலையில்,  இந்தியாவின் நிலைப்பாட்டில் ஏற்பட்டிருக்கும் இந்த மாற்றம் தனக்கு சர்வதேச அளவில் இருக்கும்  “தீண்டத்தகாத” அரசு என்ற நிலையை மாற்ற உதவும் என்று தாலிபான் அரசு நம்புகிறது. 

தாலிபான் அரசின் வெளியுறவு அமைச்சர் முட்டக்கி ஐநா பாதுகாப்பு கவுன்சிலால் தடைகள் விதிக்கப்பட்டவர். 

அவர் இந்தியா வருவதற்கு,  சிறப்பு சலுகையாக,  ஐநா அவருக்கு விதித்திருந்த பயணத்தடையை தற்காலிகமாக தளர்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

இந்த விஜயத்தின் நோக்கம் தாலிபான் அரசைப் பொறுத்தவரை ,  பொருளாதார, வர்த்தக நோக்கங்கள் கொண்டவை என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.  இந்தியக் கம்பெனிகள் ஆப்கானிஸ்தானில் சுரங்கத் தொழில் மற்றும் பிற கனிமத் தொழில்களில் முதலீடு செய்ய தாலிபான் வெளியுறவு அமைச்சர் அழைப்பு விடுத்திருக்கிறார். 

இந்திய அரசைப் பொறுத்தவரை, அதிலும் குறிப்பாக, பாஜக கூட்டணி அரசைப் பொறுத்த அளவில்,  ஒரு இஸ்லாமியக் கடும்போக்கு அமைப்பான, இந்திய நலன்களுக்கு எதிராக இதுவரை செயல்பட்ட தாலிபான் அமைப்பால் நடத்தப்படும் அரசுடன் இது போல மீண்டும் ஒரு ராஜிய உறவை தொடர்வதற்கு, யதார்த்த அரசியல் காரணங்கள் இருக்கின்றன. 


பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும்,  இந்திய நலன்களுக்கு எதிராகவும்  செயல்படும் அல் கய்தா போன்றா இஸ்லாமிய தீவிரவாதக் குழுவினர் ஆப்கானிஸ்தானிலிருந்து இயங்குவதைத் தடுக்க  இந்த ஆப்கான் - இந்திய உறவின் “புதிய அத்தியாயம்” உதவும் என்று இந்தியா கருதுகிறது.  

இந்தியா - ஆப்கானிஸ்தான்
இந்தியா - ஆப்கானிஸ்தான்

இதன் தொடர்ச்சியாகத்தான் ஆப்கானிஸ்தானின் இறையாண்மையை இந்தியா மதிக்கிறது என்ற கருத்தை இந்தியா வெளியிட்டது.  மூடப்பட்ட இந்தியத் தூதரகத்தை திறக்க முடிவு செய்வதும் இதன் தர்க்க ரீதியான விளைவாகவே பார்க்கப்படுகிறது.  இன்னும் தாலிபான் அரசுக்கு இந்தியா ராஜிய ரீதியிலான அங்கீகாரத்தை அதிகார பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும்,  இந்த நகர்வுகள் மேலும் அடுத்த கட்டத்துக்கு செல்லும்போது, அதுவும் நடக்கலாம். 

அமெரிக்க - பாகிஸ்தான் உறவுகளில் ஏற்பட்டிருக்கும் திடீர் நெருக்கம்  கடந்த சுமார் 25 ஆண்டுகளுக்கு மேலாக சீராகி வந்த இந்திய அமெரிக்க உறவுகளில் ஒரு சிக்கலை ஏற்படுத்தியிருக்கிறது. 


இந்தியா மீது இறக்குமதி வரிகளை விதித்தை கையோடு,  அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பாகிஸ்தானின் ராணுவ தளபதி அசிம் முனீரை வாஷிங்டனுக்கு அழைத்து விருந்து கொடுத்து உபசரித்ததும்,  பாகிஸ்தானின் ( இன்னும் சரியாக கணிக்கப்படாத) எண்ணெய் உற்பத்தித் துறையில் அமெரிக்க நிறுவனங்கள் முதலீடு செய்யும் என்று அறிவித்ததுடன் நிற்காமல்,  “ என்ன சொல்ல, ஒரு வேளை எதிர்காலத்தில் இந்தியா கூட பாகிஸ்தானிடம் எண்ணெய் வாங்கலாம்”  என்று சொன்னது  எரியும் நெருப்பில் எண்ணெய் வார்த்தது போல இந்திய அரசியல் தலைமைக்கு எரிச்சலூட்டியிருக்கும்.  

பாகிஸ்தானுடன் அமெரிக்க அதிபர் காட்டிவரும் திடீர் நெருக்கத்துக்கு வேறு இரு காரணங்களையும் சர்வதேச அரசியல் பகுப்பாய்வாளர்கள் கூறுகிறார்கள்.  

ட்ரம்ப் - ஷெபாஸ் ஷெரீப்
ட்ரம்ப் - ஷெபாஸ் ஷெரீப்


ஒன்று  பாகிஸ்தான், கிரிப்டோ நாணய முதலீடுகளில் காட்டி வரும் ஆர்வம்.   பாகிஸ்தானின் பொருளாதார வீழ்ச்சிக்குப் பின்னர் அங்கு பணவீக்கம் அசுர வேகத்தில் உயர்ந்ததை அடுத்து,  பாகிஸ்தான இளைஞர்கள், அதிலும் குறிப்பாக மத்திய கிழக்கு நாடுகளில் வேலையில் இருந்து கொண்டு , தங்கள் குடும்பங்களுக்குப் பணம் அனுப்புபவர்கள்,  பாரம்பரியமான வங்கிப் பரிவர்த்தனைகள் மூலம் அனுப்பும் தங்கள் பணத்தின் மதிப்பு ,  வங்கிகள் விதிக்கும் கமிஷன் தொகையால் குறைவதை விரும்பாமல், கிரிப்டோ பரிவர்த்தனைகளை நாடுவதால், இந்தத் துறை இப்போது பாகிஸ்தானில் பெரிதும் வளர்ந்து வரும் துறையாகக் கருதப்படுகிறது.  இந்தத்துறையில் இப்போது அமெரிக்காவில் ட்ரம்ப்புக்கு நெருக்கமான கிரிப்டோ கரன்சி நிறுவனமான உலக சுதந்திர நிதியம் ( World Liberty Financial)  என்ற நிறுவனத்துடன் பாகிஸ்தான் அரசு ஒத்துழைத்துவருவதாக செய்திகள் கூறுகின்றன.

இதைத் தவிர அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பாகிஸ்தானை நெருங்குவதற்கு மற்றொரு பிராந்திய அரசியல் காரணமும் உண்டென்று சில பகுப்பாய்வாளர்கள் கருதுகிறார்கள்.  

கத்தாரின் மீது ( அங்கு தங்கியிருந்த ஹமாஸ் இயக்கத்தின் சில தலைவர்களைக் குறி வைத்து)  சமீபத்தில் இஸ்ரேல் நடத்திய குண்டுத்தாக்குதலை அடுத்து சௌதி அரேபியா போன்ற செல்வாக்கு மிக்க நாடே தன் பாதுகாப்புக்கு அமெரிக்காவை மட்டும் நம்பிப் பயனில்லை என்ற முடிவுக்கு வந்து பாகிஸ்தானுடன் பாதுகாப்பு ஒப்பந்தம் போட்டது நினைவிருக்கலாம்.  


அதையொட்டி, மத்தியக் கிழக்குப் பகுதியில் தனது செல்வாக்கை  மேலும் அதிகரிக்க , பாகிஸ்தான் , இதே போன்ற பாதுகாப்பு ஒப்பந்தங்களை பிற மத்தியக் கிழக்கு நாடுகளுடனும் போட தான் தயார் என்ற சமிக்ஞைகளைக் கொடுத்துவருகிறது.  

அணு ஆயுத வல்லமை பெற்ற ஒரே இஸ்லாமிய நாடு பாகிஸ்தான்.  அமெரிக்கா ஆளுமை செலுத்தி வரும்  மத்தியக் கிழக்குப் பகுதியில் பாகிஸ்தானும் செல்வாக்குப் பெறுவதை அமெரிக்கா சற்று எச்சரிக்கையுடனே பார்க்கிறது.  இதை வைத்து பாகிஸ்தானின் மற்றொரு கூட்டாளி நாடான சீனாவின் செல்வாக்கு மத்தியக் கிழக்கில் வலுப்பெறும் சாத்தியக்கூறையும் அது கவனத்தில் கொள்கிறது.  அதே போல இஸ்ரேலுக்கு எதிரான மற்றொரு மத்தியக் கிழக்கு சக்தியான, இரானுடன் பாகிஸ்தான் நட்புடனே இருக்கிறது.  இரானுடன்  நேரடியாகப் பேசி அதன் இஸ்ரேல் விரோதப் போக்கைக் குறைக்க முடியாத அமெரிக்கா , பாகிஸ்தானை தன் பக்கத்தில் வைத்துக்கொள்வதன் மூலம் அதை செய்யலாம் என்று எண்ணுகிறதோ என்ற கருத்தும் சில வல்லுனர்கள் மத்தியில் நிலவுகிறது.  

இந்தியா- பாகிஸ்தான் - ட்ரம்ப்
இந்தியா- பாகிஸ்தான் - ட்ரம்ப்

ட்ரம்பின் அரசியல் 

ஆனால் ட்ரம்பின் அரசியல் நகர்வுகளையும், அவர் செயல்படும் விசித்திரமான பாணியையும் கவனிக்கும் பல நோக்கர்கள்,  இதை ஒரு வித “ கொடுக்கல் வாங்கல் ( transactional) பாணி என்று கூறுகின்றனர்.  ஒரு ரியல் எஸ்டேட் வணிகரான ட்ரம்ப்,  சர்வதேச அரசியலிலும்  பெரிய சித்தாந்த அடிப்படை ஏதுமின்றி,  இது போன்ற ஒரு லாப நஷ்ட கணக்குப் பார்த்து இயங்குகிறார்,  அந்த அடிப்படையில் ஏற்படும் எந்த உறவுகளும் நீண்ட காலம் தாக்குப்பிடிக்காது என்று கூறுகின்றனர். 

ஆனால் இந்த அமெரிக்க - பாகிஸ்தான் நெருக்கம் இந்தியாவுக்கு உடனடியாக பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும் சாத்தியக்கூறு ஏதும் இல்லை என்றே தோன்றுகிறது. 

சீனாவை பெரும் போட்டியாளராகக் கருதும் அமெரிக்க அரசு,   அதன் வளர்ச்சியைக் கட்டுப்படுத்துவதை முக்கிய இலக்காகக் கொண்டிருக்கும் வரை,  இந்தியாவை அலட்சியப்படுத்தவோ, அதன் நலன்களுக்கு எதிராகவோ பெரிய அளவில் செயல்படாது என்ற நம்பிக்கை பன்னாட்டு அரசியல் ஆய்வாளர்கள் மத்தியில் இருக்கிறது.  


அதே போல இந்தியா , தாலிபான் தலைமையிலான ஆப்கானிஸ்தானுடன் சமீபத்தில் காட்டியுள்ள அரசியல் நெருக்கமும், இரு நாடுகளுக்கும் இடையில், தற்போதைய காலகட்டத்தில் ஒரு யதார்த்த அரசியலின் தேவை பற்றிய நிர்ப்பந்தத்திலானது.  அது இரு நாடுகளிடையே மக்கள் மத்தியில் ஏற்கனவே, இந்த அரசியல் மாச்சர்யங்களைக் கடந்து நிலவும், வரலாற்று ரீதியிலான உறவுகள் அடிப்படையில் வலுப்பெற்றால் அது பிராந்திய அமைதிக்கு பெரிதும் உதவும்.!

"முஸ்லிம் பெண்களை அழைத்து வந்தால் வேலை" - பாஜக முன்னாள் எம்எல்ஏவின் சர்ச்சை பேச்சு

உத்தரப் பிரதேசத்தில், முஸ்லிம் பெண்களை அழைத்து வரும் இந்து இளைஞர்களுக்கு வேலை வாங்கித் தருவதாக பாஜக முன்னாள் எம்எல்ஏ ஒருவர் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.உத்தரப் பிரதேச மாநிலம் சித்தார்த்... மேலும் பார்க்க

பீகார் தேர்தல் 2025: `குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை' -இந்தியா கூட்டணியின் தேர்தல் வாக்குறுதிகள்

பீகாரில் அடுத்த மாதம் 6-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.இதை முன்னிட்டு இந்தியா கூட்டணியும், தேசிய ஜனநாயக கூட்டணியும் அனல் பறக்க பிரச்சாரங்களை செய்து வருகின்றன. நேற்று இந்தி... மேலும் பார்க்க

சிவகாசி: "சாட்சியாபுரம் ரயில்வே மேம்பால பணியில் பல கோடி ரூபாய் ஊழல்" - ராஜேந்திரபாலாஜி குற்றச்சாட்டு

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அ.தி.மு.க பூத் கமிட்டி நிர்வாகிகள் பயிற்சிக் கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி கலந்து கொண்டு உரையாற்றினார்.அப்போது பேசிய அவர், "... மேலும் பார்க்க

``கரும்பு விவசாயிகளிடம் வசூலித்த பணத்தை என்ன செய்தீர்கள்?'' - சரத்பவாருக்கு பட்னாவிஸ் கேள்வி

மகாராஷ்டிரா மாநிலம் புனேயில் வசந்த்தாதா சர்க்கரை இன்ஸ்டிடியூட் செயல்படுகிறது. புனே, சோலாப்பூர், கோலாப்பூர் மாவட்டங்களில் கரும்பு அதிக அளவில் விளைகிறது. இதற்கான ஆராய்ச்சியில் வசந்த்தாதா சர்க்கரை இன்ஸ்ட... மேலும் பார்க்க

TVK Vijay: "ஒரு அரசியல் தலைவர் மக்களைச் சந்திக்க முடியாத சூழல்" - அரசை விமர்சிக்கும் தமிழிசை

தவெக தலைவர் விஜய் கலந்துகொண்ட கரூர் பரப்புரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். அதைத் தொடர்ந்து நடந்த பல்வேறு அரசியல் மோதல்களுக்கு நடுவில், கூட்ட நெரிசல் மரணம் தொடர்பான வழக்கை சிபிஐ விச... மேலும் பார்க்க

``அசாமில் SIR நடத்தாத நிலையில், தமிழ்நாடு, கேரளா-வில் மட்டும் ஏன் நடத்த வேண்டும்?'' - ஜோதிமணி எம்.பி

மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தலைமையில் கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது.இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் தங்கவேல்... மேலும் பார்க்க