700 மரங்களுடன் ஜாக்கி ஷெராஃப் பண்ணை வீடு: ஏரி முதல் திறந்த தியேட்டர் வரை சுவாரஸ்...
ஹோட்டலில் ரூ.10,900-க்கு சாப்பிட்டு, பின்வாசல் வழியாக ஓட்டம்; சுற்றுலா பயணத்தில் சிக்கிய 5 பேர்
பணம் இல்லாமல் ஹோட்டலில் சாப்பிட்டுவிட்டு தப்பிச் செல்வதை படங்களில்தான் பார்த்திருக்கிறோம். ஆனால் உண்மையில் 5 பேர் ஹோட்டலில் வயிறு முட்ட சாப்பிட்டுவிட்டு தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் மவுண்ட் அபு அருகிலுள்ள சியாவா என்ற இடத்தில் உள்ள ‘ஹேப்பி டே’ ஹோட்டலுக்கு 5 பேர் கொண்ட கும்பல் சாப்பிட வந்தனர். அவர்கள் அனைத்து வகையான உணவையும் ஆர்டர் செய்து போதிய அளவு வயிறு முட்ட சாப்பிட்டனர். வெயிட்டர் அவர்கள் கேட்ட உணவுகளை கொண்டு வந்து கொடுத்துக்கொண்டே இருந்தார். அவர்கள் அனைவரும் சாப்பிட்டு முடிக்கத் தொடங்கினர்.
அப்போதுதான் அவர்கள் ஒரு புதிய நாடகத்தை அரங்கேற்றத் தொடங்கினர். ஒவ்வொருவராக அங்குள்ள கழிவறைக்கு சென்று வருவதாக கூறி சென்றனர்.
ஆனால் அப்படி சென்றவர்கள் திரும்பி வரவில்லை. அதற்குள் அடுத்தவரும் இதே போன்று “ரெஸ்ட்ரூம் சென்று வருகிறேன்” என்று சொல்லிக்கொண்டு சென்றார். இதை கவனித்த வெயிட்டர் உடனே ஹோட்டல் உரிமையாளரை எச்சரித்தார். அதற்குள் அனைவரும் ரெஸ்ட்ரூம் செல்வதாக கூறிவிட்டு பின்வாசல் வழியாக தப்பிச்சென்றிருந்தனர்.
அவர்கள் மொத்தம் ரூ.10,900 அளவிற்கு சாப்பிட்டிருந்தனர். பணத்தை கொடுக்காமல் பின்வாசல் வழியாக தப்பிச்சென்றனர். உடனே ஹோட்டலுக்கு வெளியில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஹோட்டல் உரிமையாளர் ஆய்வு செய்தபோது, சாப்பிட்ட 5 பேரும் ஹோட்டலுக்கு வெளியே நின்றிருந்த காரில் ஏறி தப்பிச்சென்றது தெரியவந்தது.
உடனே ஹோட்டல் உரிமையாளர் வேறு ஒரு காரில் ஏறி அவர்களை விரட்டிச் சென்றார். அதோடு இது குறித்து போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கும் தகவல் கொடுத்தார்.

இதனால் போலீஸாரும் சேர்ந்து விரட்டத் தொடங்கினர். அவர்கள் சென்ற கார் குஜராத் நோக்கி சென்றது. ஆனால் ஒரு கட்டத்தில் அவர்களது கார் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொண்டது. இதனால் அவர்களது கார் அங்கிருந்து நகர முடியவில்லை. போலீஸாரும், ஹோட்டல் உரிமையாளரும் சேர்ந்து 5 பேரையும் பிடித்துக்கொண்டனர்.
அவர்கள் 5 பேரும் குஜராத்தை சேர்ந்த சுற்றுலா பயணிகள் என்று தெரியவந்தது. அவர்களிடம் சாப்பிட பணம் இல்லாமல் இருந்தது விசாரணையில் தெரியவந்தது. அதனால் தான் சாப்பிட்டுவிட்டு தப்பிச்சென்றுள்ளனர். அவர்கள் பிடிபட்டதால் தங்களது நண்பர் ஒருவருக்கு போன் செய்து பணத்தை ஜீபே மூலம் அனுப்பச் சொன்னார்கள். அவரும் பணத்தை அனுப்பிவைத்தார். அதன் பிறகு 5 பேரையும் போலீஸார் எச்சரித்து அனுப்பிவைத்தனர்.










.jpg)




