TVK : 'அறுசுவை விருந்து... நியமன ஆணை... வெள்ளிக்காசு!' - விஜய்யின் பரபர மீட்டிங்கின் ஹைலைட்ஸ்
தவெக கட்சியின் தலைமை அலுவலகத்தில் மாவட்டச் செயலாளர்கள் உட்பட புதிய நிர்வாகிகள் நியமனம் தொடர்பாக முக்கிய மீட்டிங்கை நடத்தி முடித்திருக்கிறார் விஜய். மீட்டிங்கில் கலந்துகொண்ட நிர்வாகிகளுக்கு அறுசுவை விருந்தளித்து நியமன ஆணையோடு வெள்ளிக்காசையும் பரிசாக வழங்கி குஷிப்படுத்தியிருக்கிறார். மூன்றரை மணி நேரமாக நடந்த அந்த பரபர மீட்டிங்கின் அப்டேட்ஸ் இங்கே.
நிர்வாகிகளுக்கு திடீரென விடுக்கப்பட்ட அழைப்பைப் பற்றியும் விஜய் வருகையின் பின்னணி பற்றி முன்பே செய்தி வெளியிட்டிருந்தோம்.
அதன்படி சென்னை, திருச்சி, தஞ்சாவூர், கோயம்புத்தூர், திண்டுக்கல், திருநெல்வேலி, அரியலூர், பெரம்பலூர் உட்பட கிட்டத்த 20 மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகளும் காலை 8:30 மணி முதலே பனையூர் அலுவலகத்துக்கு வர தொடங்கினர். விஜய் சரியாக 12:45 மணிக்கு கட்சி அலுவலகத்துக்கு வந்து சேர்ந்தார். அதற்கு முன்பாகவே புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் நிர்வாகிகள் பற்றிய ரிப்போர்ட்டை ஆனந்த் தனியாக ரெடி செய்து வைத்திருந்தார். புதிய நிர்வாகிகளும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட படிவங்களை நிரப்பி கட்சி வளர்ச்சி நிதிக்கான டிடியோடு வந்து சேர்ந்திருந்தனர்.
12:45 மணிக்கு விஜய் வந்தவுடனேயே எந்த தாமதமும் இல்லாமல் கூட்டத்தை தொடங்கிவிட்டார். முதலில் எல்லா நிர்வாகிகளையும் ஒரே அறையில் அமர வைத்து ஒவ்வொரு மாவட்டமாக ஒவ்வொரு நிர்வாகியாக பெயர் சொல்லி அழைத்து நியமன ஆணைகளை வழங்கியிருக்கிறார். அப்போது ஒவ்வொருவருக்குமே வாழ்த்து சொல்லி ஸ்வீட்டும் கொடுத்திருக்கிறார். இதை முடித்துவிட்டு ஒவ்வொரு மாவட்ட நிர்வாகியாக தனித்தனியாக அழைத்து ஐந்திலிருந்து பத்து நிமிடம் வரை பேசியிருக்கிறார். இதில் ஹைலைட்டாக ஒரு விஷயமும் நடந்தது.
கட்சியின் பொதுச்செயலாளர் ஆனந்த், பொருளாளர் வெங்கட்ராமன் என விஜய்யோடு எப்போதுமே இருக்கும் முக்கியமான நபர்கள் இருவரையும் சந்திப்பு நடக்கும் அறைக்கு வெளியே இருக்குமாறு விஜய் கேட்டுக்கொண்டிருக்கிறார். இருவரும் வெளியே இருக்க நியமன ஆணைகளை பெற்ற நிர்வாகிகளை பெர்சனலாக சந்தித்திருக்கிறார் விஜய். இதிலேயே பல நிர்வாகிகளும் குஷியாகிவிட்டனர்.
கட்சியின் நிறை குறைகளை பற்றியும் பொறுப்புகளைப் பற்றியும் முழுமையாக கேட்டறிந்து கொண்ட விஜய், நம்பிக்கை வார்த்தைகளோடு 'நல்லா பண்ணுங்க...' என தோளில் தட்டிக் கொடுத்து வாழ்த்து சொல்லியும் அனுப்பியிருக்கிறார். மாவட்டச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டவர்களுக்கு மட்டும் விஜய்யின் உருவம் மற்றும் கட்சிக் கொடி பொறிக்கப்பட்ட வெள்ளிக்காசையும் வழங்கியிருக்கிறார்.
ஆனந்த் வெளியே நிற்க, உள்ளே இந்த மீட்டிங் நடந்துகொண்டிருந்த சமயத்திலேயே மதியம் 2:45 மணியளவில் தவெகவின் அரசியல் ஆலோசகரான ஜான் ஆரோக்கியசாமியும் அலுவலகத்துக்கு வந்து சேர்ந்தார். புதிதாக நியமிக்கப்பட்டிருக்கும் நிர்வாகிகளுக்கு தேர்தல் சம்பந்தமாக எப்படி வேலை செய்ய வேண்டும் என்பதை பற்றிய அறிவுரைகளையும் அவர் வழங்கியதாக தெரிகிறது.
இதற்கிடையே இன்னொரு பக்கம் காலையிலிருந்து காத்திருந்த நிர்வாகிகளுக்கு அறுசுவை சைவ விருந்தும் தயாராகி வந்து சேர்ந்திருந்தது. ஒரு பக்கம் கமகமவென பந்தி பரிமாறப்பட்டுக் கொண்டிருக்க இன்னொரு பக்கம் விஜய் விறுவிறு மீட்டிங்கில் தடதடத்துக் கொண்டிருந்தார். விஜய்யிடம் நியமன ஆணைகளை பெற்றுக் கொண்டு பல நிர்வாகிகளும் உற்சாகமாக போஸ் கொடுக்க, சில நிர்வாகிகள் மட்டும் ஓரமாக அதிருப்தியில் அமர்ந்திருந்தனர். உள்ளடி வேலைகள், கோஷ்டி மோதல், விரும்பிய பொறுப்பு கிடைக்காதவர்கள் என பஞ்சாயத்துள்ள இடங்களின் நிர்வாகிகளை மட்டும் விஜய் தனியாக சந்திப்பதை தவிர்த்திருக்கிறார். திடீர் அழைப்பின் பேரில் படபடவென கிளம்பி வந்து விஜய்யை சந்திக்க முடியாததில் அவர்கள் கடும் அப்செட்.
கிட்டத்தட்ட 100 கட்சி மாவட்டங்கள் பிரிக்கப்படும் என்றே தகவல் வெளியான நிலையில் 120 மாவட்டங்களாக இப்போது பிரித்திருக்கிறார்கள். மாவட்டச் செயலாளர், இணைச்செயலாளர், துணைச்செயலாளர்(2), பொருளாளர், செயற்குழு உறுப்பினர்கள் (10) என மாவட்டத்துக்கு 15 பொறுப்புகளுக்கு நிர்வாகிகளை நியமிக்கிறார்கள். இதில் துணைச்செயலாளரில் ஒரு இடம் கட்டாயம் பெண்களுக்கும், செயற்குழுவில் நான்கு இடங்கள் வரைக்கும் பெண்களுக்கும் வழங்கப்பட்டிருக்கிறது.
மதியம் 12:45 மணிக்கு வந்த விஜய் நிர்வாகிகள் சந்திப்பை முடித்துவிட்டு மாலை 4:15 மணிக்கு பனையூர் அலுவலகத்திலிருந்து கிளம்பினார். பிப்ரவரி இரண்டாம் தேதிக்குள் எஞ்சிய மாவட்டங்களை சேர்ந்த நிர்வாகிகளையும் சந்தித்து நியமன ஆணைகளை வழங்க விஜய் திட்டமிட்டிருக்கிறார்.
இது தொடர்பாக விஜய், ``தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாக வசதியைக் கருத்தில் கொண்டு, கழகப் பணிகளைத் துரிதமாக மேற்கொள்ள, கழகமானது அமைப்பு ரீதியாக, சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கி 120 மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 19 கழக மாவட்டங்களுக்கு, கழக விதிகளின்படி மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.புதியதாகப் பொறுப்பேற்கும் நிர்வாகிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். இந்தப் புதிய நிர்வாகிகளுக்குக் கழகத் தோழர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.” எனக் கூறியுள்ளார்.
Junior Vikatan-ன் பிரத்யேக Whatsapp Group...
இணைவதற்கு இங்கே க்ளிக் செய்யவும்https://bit.ly/3OITqxs
வணக்கம்,
BIG BREAKINGS முதல்... அரசியல், சமூகம், க்ரைம், சினிமா என அனைத்து ஏரியாக்களின் அசராத அப்டேட்ஸ், ஆழமான கட்டுரைகள்.
ஜூனியர் விகடன் இதழ் மற்றும் டிஜிட்டலில் கவனம் ஈர்க்கும் கட்டுரைகள் இங்கே உடனுக்குடன்... https://bit.ly/3OITqxs