ASC: ரவி வர்மன் இணைந்த அமெரிக்க சங்கத்தின் சிறப்பு என்ன? - அதில் இணைவது ஏன் கடி...
Union Budget 2025: இந்த மூன்றும் பட்ஜெட்டில் இடம்பெற்றால் பங்குச்சந்தை ஏறுமுகத்திற்கு செல்லும்
பங்குச்சந்தை இறங்குமுகமாக சென்றுகொண்டிருக்கும் இந்த வேளையில், மத்திய பட்ஜெட் தாக்கல் ஆக உள்ளது. இந்தப் பட்ஜெட்டால் நேரடியாக பங்குச்சந்தையில் மாற்றம் இருக்காது.
ஆனால், தாக்கல் ஆகப்போகும் பட்ஜெட்டில் இடம்பெற உள்ள திட்டங்களால் கட்டாயம் பங்குச்சந்தையில் சற்று மாற்றம் இருக்கும் என்பதை யாராலும் மறுக்க முடியாது.
அப்படி பட்ஜெட்டில் என்ன என்ன அறிவிப்புகள் இடம்பெற்றால் பங்குச்சந்தையில் பாசிட்டிவ் மாற்றங்கள் நிகழும் என்பதை விளக்குகிறார் பங்குச்சந்தை நிபுணர் சொக்கலிங்கம்.
கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சந்தை உச்சத்திற்குப் பிறகு, பங்குச்சந்தை இறங்குமுகத்தில் சென்றுகொண்டிருக்கிறது. இதற்கு ஸ்மால் மற்றும் மிட் கேப் பங்குகளின் மதிப்பு அதிகமாக மதிப்பிடப்பட்டது, வெளிநாட்டினர் தங்களது முதலீடுகளை விற்றது, புரோமோட்டர்களும் தங்களது பங்குகளை விற்று லாபம் பார்த்தது போன்ற காரணங்களால் ஸ்மால் மற்றும் மிட் கேப் பங்குகள் பெரிதும் பாதிக்கப்பட்டது.
இதை ஒப்பிடுகையில், நிப்டி மற்றும் சென்செக்ஸ் பாதிப்புகள் குறைவே. ஆனால், சாதாரண மக்கள் பெரும்பாலும் ஸ்மால் மற்றும் மிட் கேப் நிறுவன பங்குகளிலேயே முதலீடு செய்வார்கள். அதனால், இந்தப் பங்குகளை நாம் தவிர்க்கமுடியாது. இந்தப் பங்குகளின் மதிப்பை நிலைப்படுத்துவதற்கான முன்னெடுப்புகளை அரசு இந்தப் பட்ஜெட்டில் செய்யலாம்.
கடந்த 10 ஆண்டுகளில், உலக அளவில் பங்குச்சந்தையின் மதிப்பும், முதலீட்டாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளது. கொரோனாவிற்கு பிறகு, இந்தியாவில் முதலீட்டாளர்களின் எண்ணிக்கை பெரிதும் உயர்ந்துள்ளது.
இந்தக் காலக்கட்டத்தில், பலர் ஃபிக்சட் டெபாசிட்டில் இருந்து பணம் எடுத்து பங்குச்சந்தையில் முதலீடு செய்து வருகின்றனர். அதனால், தற்போது ஃபிக்சட் டெபாசிட்டின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
இந்தத் தருணத்தில் சந்தை மதிப்பு குறைந்திருப்பதற்கு தேவை அளவு குறைந்திருப்பதே காரணம். முதலில், பணவீக்கம், ரூபாய் மதிப்பு வீழ்ச்சி போன்றவையால் ரியல் எஸ்டேட் போன்றவற்றில் மக்களின் நுகர்வு குறைந்துள்ளது. இதை சரிசெய்ய இந்தப் பட்ஜெட்டில் இந்திய பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கான அம்சங்களை நிச்சயம் கொண்டுவர வேண்டும்.
இரண்டாவதாக, மக்களின் நுகர்வை அதிகப்படுத்த நேரடி வரியில் சில சலுகைகள் கொடுக்கலாம். மேலும், மக்களின் வருமானத்தை அதிகப்படுத்துவதற்கான திட்டங்களையும் கொண்டுவர வேண்டும். அப்போது, மக்களிடையே தேவையும், வாங்கும் திறனும் அதிகரிக்கும். இதனால், நிதி பற்றாக்குறை ஏற்பட்டாலும், இந்த நகர்வு நீண்ட காலத்தில் நல்ல பலனை தரும்" என்று கூறினார்.
மூன்றாவதாக, டிவிடென்ட், பை பேக் பங்குகளுக்கான வரியை அரசு 20 சதவிகிதமாக குறைக்கலாம். இது பங்குச்சந்தைக்கு ஒரு உந்துசக்தியாக அமையும். பங்குச்சந்தையும் நிலைதன்மையை பெறும்" என்று கூறினார்.