``போர் நடவடிக்கை, மக்களின் உரிமை அபகரிப்பு..'' - சிந்து நீர் ஒப்பந்த நிறுத்தம் ப...
Until Dawn Review: `செத்துச் செத்து விளையாடுவோமா?' - திகில் அனுபவம் தருகிறதா இந்த லூப் ஹாரர் சினிமா?
காட்டிற்குள் இருக்கும் பள்ளத்தாக்குப் பகுதி ஒன்றில் தொலைந்து போன தன் சகோதரி மெலனியைத் தேடி க்ளோவர் (எலா ரூபின்) மற்றும் அவருடைய நான்கு நண்பர்கள் செல்கிறார்கள்.
காட்டிற்குள் சென்று கொண்டிருக்கும்போதே ஒரு வகையான அமானுஷ்யத்தை இந்த க்ளோவர் & கோ உணர்கிறார்கள். அதன் பிறகு ஒரு வீட்டின் அருகில் தங்களுடைய வாகனத்தை பார்க் செய்துவிட்டு, அந்த வீட்டிற்குள் சென்று மெலனியின் தடயத்தைத் தேடுகையில் பல திகில் பக்கங்களும் அவர்களுடைய கண்களுக்குத் தட்டுப்படுகிறது. அங்கேயே அவர்கள் ஐவரும் ஒரு டைம் லூப்பில் சிக்கிக் கொள்கிறார்கள்.

ஒவ்வொரு லூப்பிலும் வெவ்வேறு அமானுஷ்ய விஷயங்களால் இந்த ஐவரும் கொலை செய்யப்படுகிறார்கள். அன்றைய நாள் இரவைக் கடந்து விடியலைத் தொடுவதுதான் இந்த ஐவர் தப்பிப்பதற்கான ஒரே வழி.
மீண்டும்.. மீண்டும்... மீண்டும் கொலை செய்யப்படும் இந்த ஐவர், துரத்திக் கொண்டு வரும் திகில் கிரியேச்சர்களின் பிடியிலிருந்து எப்படித் தப்பினார்கள், மெலனிக்கு உண்மையாகவே என்ன நடந்தது என்பதைப் பரபரப்பு குறையாமல் சொல்கிறது இந்த 'Until Dawn'.
2015-ம் ஆண்டு வெளியான `Until Dawn' என்ற வீடியோ கேமை மையப்படுத்தி அதே தலைப்பில் இந்த சர்வைவல் ஹாரர் திரைப்படத்தை எடுத்திருக்கிறார் `லைட்ஸ் அவுட்', `அனபெல்' மற்றும் `சஷாம்' புகழ் இயக்குநர் டேவிட் சேண்ட்பெர்க்.
சகோதரியைத் தேடி காட்டிற்குள் களமிறங்கும் கதாபாத்திரத்தில் எலா ரூபின், சூழலின் பதைபதைப்பைத் தன் முகத்தில் வெளிப்படுத்தி கவனம் ஈர்க்கிறார். தன் சகோதரியை எண்ணிப் பார்க்கும் சில காட்சிகளில் எமோஷனல் மீட்டரையும் தேவைக்கேற்ப தொட்டிருக்கிறார்.
க்ளோவரின் நண்பர்களாக வரும் மைக்கேல் சிமினோ, ஓடெஸா அசீயான், ஜி யங் யூ, பெல்மோன்ட் கேமலி ஆகியோர் பரபர திகில் விஷயங்களைத் துணிந்து சமாளிக்கும் இடங்களில் களத்தின் பகீர் உணர்வை நமக்குள்ளும் கடத்துகிறார்கள்.

பீட்டர் ஸ்டோட்மேர், மயா மிட்செல் ஆகியோர் ஓரிரு காட்சிகளில் மட்டும் தலையைக் காட்டி ஜூட் அடித்துவிடுகிறார்கள்.
இரவுப் பொழுதில் பெரிதும் ஆர்ப்பாட்டமில்லாமல் லைட்டிங் அமைத்த விதம், களத்தின் உணர்வைக் கடத்துவதற்குப் பின்பற்றிய நுணுக்கம் ஆகிய விஷயங்களுக்காக ஒளிப்பதிவாளர் மாக்ஸிமே அலெக்சாண்ட்ரேவைப் பாராட்டலாம்.
திகில் திரைப்படங்களுக்குத் தேவையான எடிட் மீட்டரை நினைவில் வைத்து கத்தரித்திருக்கிறார் படத்தொகுப்பாளர் மைக்கேல் அலெர்.
அதே சமயம், பரபரப்பைக் கூட்டி சீட்டின் நுனியில் அமர வைத்துப் பார்த்துக் கொண்டிருக்கும் வேளையில், திடீரென உரையாடல் காட்சிகளுக்கு கட்களை நகர்த்தியிருக்கிறார். இது திகில் காட்சிகள் கொடுக்கும் அனுபவத்தையும் தாக்கத்தையும் 'புஷ்ஷ்' லெவலுக்குக் கொண்டு செல்கிறது.
இசையமைப்பாளர் பெஞ்சமின் வால்பிஷின் பின்னணி இசையும் சில காட்சிகளின் தரத்தை மெருகேற்றியிருக்கிறது. அதுபோலவே, எமோஷனல் காட்சிகளிலும் அவருடைய மென்மையான இசை மிருதுவாய் வருடுகிறது.

ஒரே இரவில் நடக்கும் கதை, திகில் உலகம், டைம் லூப் என அடுக்கடுக்கான சுவாரஸ்யங்களை வைத்துத் தொடக்கக் காட்சியிலேயே கதைக்குள் சென்ற விதம் சுவாரஸ்யம்!
அதுபோலவே, பல பாகங்களுக்கு பிரான்சைஸை நகர்த்துவதற்கு ஏதுவாக கதையின் ஒன்லையும் செட்டப்பையும் அமைத்திருக்கிறார்கள்.
இப்படி அடுக்கடுக்கான சுவாரஸ்யம் ஒரு புறமிருக்க, மற்றொரு புறம் மெருகேற்ற வேண்டிய கான்செப்ட்களை எல்லாம் லெஃப்ட் ஹாண்டில் டீல் செய்திருக்கிறார்கள்.
'டைம் லூப்' என்ற சுவாரஸ்ய ஐடியாவைப் பிடித்துவிட்டு, அதை வைத்தே புத்திசாலித்தனமாகக் காட்சிகளை நகர்த்தாமல் ஏமாற்றியிருக்கிறார்கள்.
ஒவ்வொரு லூப்பிலும் வேறு பேய், வேறு சிக்கல் என்பது ஐடியாவாக ஈர்த்தாலும் அதை வைத்தும் புதிதாக எதையும் படம் காட்டவில்லை என்பது ஏமாற்றமே!

படத்தின் முக்கியக் காட்சிகளில் 'இது அதுல...' என ஏற்கெனவே தடம் பதித்த மாஸ்டர்பீஸ் திகில் படங்களின் தாக்கங்கள் எட்டிப் பார்க்கின்றன.
திகில் காட்சிகளிலும், க்ளைமாக்ஸில் கிரியேச்சர்களைச் சமாளிக்கும் காட்சிகளிலும், அறிவார்ந்த செயல்களை உள்ளடக்கிய திருப்பங்களும் புதுமைகளும் ஏதும் இல்லாதது படத்தை இருள் சூழ வைத்திருக்கிறது.
90 - 100 நிமிடங்கள் ஓடும் டெம்ப்ளேட் திகில் படங்களை விரும்பி பார்ப்பவர்களுக்கு இந்த `Until Dawn' செட்டாகலாம் என்றாலும் புதுசா எதுவுமில்லையே என ஏங்கவும் வைத்திருப்பது ஏமாற்றமே!