Uttar Pradesh: திஷா பதானி வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திய 2 பேர் என்கவுண்டரில் சுட்டுக்கொலை
கடந்த 12ஆம் தேதி அதிகாலை உத்தரப்பிரதேசத்தில் உள்ள பரேலியில் இருக்கும் நடிகை திஷா பதானியின் வீட்டின் மீது மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச்சென்றனர்.
இதில் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. ஆனாலும் திஷா பதானியின் தந்தையும், முன்னாள் போலீஸ் அதிகாரியுமான ஜெகதீஷ் பதானி இது தொடர்பாக போலீஸில் புகார் செய்திருந்தார்.

இதையடுத்து குற்றவாளிகளுக்கு எதிராக உடனே நடவடிக்கை எடுக்க யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டிருந்தார்.
இத்துப்பாக்கிச்சூட்டிற்கு கோல்டி பிரார் கேங் பொறுப்பேற்பதாக சமூக வலைத்தளம் மூலம் அறிவிப்பு வெளியிட்டது.
வீரேந்திர சரண் என்பவர் ஃபேஸ்புக் பக்கத்தில்,''ஆன்மீக தலைவர்களை அவமதித்துவிட்டனர். மதத்திற்கு அவமரியாதை செய்துவிட்டனர். இது ஆரம்பம் தான் என்று குறிப்பிட்டு இருந்தனர். வெளிநாட்டுத் துப்பாக்கியைக் கொண்டு சுட்டு இருந்தனர்.
இத்துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் குறித்து போலீஸார் தீவிர ஆய்வு செய்தபோது இச்செயலில் ஈடுபட்டது ரவீந்திரா மற்றும் அருண் என்று தெரியவந்தது. உடனே அவர்களைத் தேட ஆரம்பித்தனர்.
இப்பணியில் டெல்லி, உத்தரப்பிரதேசம் மற்றும் ஹரியானா போலீஸார் இணைந்து செயல்பட்டனர். துப்பாக்கிச்சூட்டில் தொடர்புடைய இரண்டு பேரும் காஜியாபாத்தில் இருப்பது தெரியவந்தது.
உடனே அவர்கள் இரண்டு பேரையும் மூன்று மாநில சிறப்புப் படை போலீஸாரும் சுற்றிவளைத்தனர். ஆனால் இரண்டு பேரும் போலீஸார் மீது துப்பாக்கியால் சுட்டனர். இதையடுத்து போலீஸார் எதிர்த்தாக்குதல் நடத்தியபோது இரண்டு பேரும் படுகாயம் அடைந்தனர்.

அவர்கள் உடனே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். ஆனால் அதற்குள் இரண்டு பேரும் இறந்துவிட்டனர்.
மதகுரு அனிதாச்சாரியா பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருந்தார். அவரது பேச்சுக்கு திஷா பதானியின் மூத்த சகோதரி குஷ்பு பதானி பதிலடி கொடுத்திருந்தார்.
எனவேதான் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக கோல்டிபிரர் கேங்க் தெரிவித்திருந்தது. உத்தரப்பிரதேசத்தில் யோகி ஆதித்யநாத் ஆட்சிக்கு வந்த பிறகு 238 கிரிமினல்கள் சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளனர்.