Vaibhav Suryavanshi : 'அவனுக்கு பயமில்ல' - அறிமுகப் போட்டியில் எப்படி ஆடினார் இந்த இளம் சூறாவளி?
'அறிமுகம் - வைபவ்!'
இளம் சூறாவளியாய் ஐ.பி.எல் க்கு அறிமுகமாகியிருக்கிறார் 14 வயதே ஆன வைபவ் சூர்யவன்ஷி. கடந்த நவம்பரில் ஏல அரங்கில் வைபவ்வை ரூ.1.10 கோடிக்கு ராஜஸ்தான் அணி வாங்கியபோதே தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்துவிட்டார்.

இப்போது இதோ ஐ.பி.எல் அரங்குக்குள் காலடியும் எடுத்து வைத்துவிட்டார். மறக்கவே முடியாத அளவுக்கு அத்தனை பேரையும் வியப்பில் ஆழ்த்தும் விதத்தில் எதிர்கொண்ட முதல் பந்தையே சிக்சராக்கி தடாலடி இன்னிங்ஸை ஆடியிருக்கிறார்.
'சாதாரண வீரர்களாக இருந்தால் அவர்களுக்குள் ஒரு தயக்கம் இருக்கும். முதல் போட்டியில், முதல் தொடரில் ஆடுகிறோம். சில பந்துகளை பார்த்து ஆடலாம் என நினைப்பார்கள். வைபவ் சாதாரண வீரர் இல்லை!' ஷர்துல் தாகூர் வீச எதிர்கொண்ட முதல் பந்தையே வைபவ் எக்ஸ்ட்ரா கவர் தலைக்கு மேல் சிக்சராக்கிய போது கமெண்ட்ரியில் ஷேன் வாட்சன் இப்படித்தான் அவரை வர்ணித்துக் கொண்டிருந்தார்.
'கனவு ஆட்டம்!'
வாட்சன் சொன்னது முழுக்க முழுக்க உண்மை. வைபவ்க்கு எந்த பயமும் இல்லை. எந்த தயக்கமும் இல்லை. சிறுவயதில் கிரிக்கெட் சார்ந்து எல்லாருக்குமே ஒரு கனவு இருக்கும். அரங்கம் நிறைந்த மைதானம் மொத்தமும் நம்மையே உற்றுநோக்கி ஆர்ப்பரித்துக் கொண்டிருக்க, உள்ளே இறங்கியவுடனேயே பேட்டை வேகமாக சுழற்றி பெரிய பெரிய சிக்சர்களை பறக்கவிட, ஒட்டுமொத்த அணியும் நம்மைக் கொண்டாடித் தீர்க்கும்.

பதின்ம வயதைக் கடந்து விட்டு இதையெல்லாம் நினைத்துப் பார்க்கையில் நமக்கே சிரிப்பாக இருக்கும். வைபவ்வும் அந்தக் கனவை காணும் பிராயத்தில்தான் இருக்கிறார். ஆனால், கோடியில் ஒருவருக்கு அந்தக் கனவு அப்படியே பலிக்குமல்லவா? அந்த கோடியில் ஒருவராக வைபவ் மாறியிருக்கிறார். கட்டற்ற மனவெளியில் அலைந்து திரிந்து கொண்டிருந்த கனவுக் காட்சிகளை நிஜத்தில் நிகழ்த்திக்கொள்ள கிடைத்த வாய்ப்பை சரியாகப் பயன்படுத்தியிருக்கிறார்.
'சிக்சருடன் தொடக்கம்!'
வைபவ், ஷர்துல் தாகூருக்கு எதிராக மட்டும் முதல் பந்தை சிக்சராக்கவில்லை. ஆவேஷ் கான் இரண்டாவது ஓவரை வீசினார். அந்த ஓவரிலும் எதிர்கொண்ட முதல் பந்தையே லாங் ஆனில் சிக்சராக்கினார். அந்த ஓவரில் ஒரு பவுண்டரியை வேறு அடித்தார்.

பெற்றோரின் அன்பைப் பெறுவதில் சகோதரர்களுக்குள் இருக்கும் செல்ல யுத்தத்தை போன்று இருந்தது ஜெய்ஸ்வாலுக்கும் வைபவ்வுக்கும் இடையேயான பார்ட்னர்ஷிப்.

வைபவ் எடுத்த எடுப்பிலேயே அதிரடியாக ஆட, அதைப் பார்த்த ஜெய்ஸ்வாலும் வழக்கத்தை விட அதிரடியாக ஆடினார். இருவரும் வேகப்பந்து வீச்சாளர்களை வெளுத்து எடுத்ததால் நான்காவது ஓவரிலேயே ஸ்பின்னர்களுக்கு சென்றார் ரிஷப் பண்ட்.
நம்முடைய விக்கெட்டை குறிவைத்துதான் ஸ்பின்னரை இவ்வளவு சீக்கிரம் அறிமுகப்படுத்துகிறார்கள் எனும் சூட்சமத்தையும் வைபவ் அறிந்துகொண்டார்.
வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக எடுத்த ரிஸ்க்கை ஸ்பின்னர்களுக்கு எதிராக எடுக்காமல் ஸ்மார்ட்டாக நின்றும் ஆடினார். கொஞ்சம் நேரம் எடுத்துதான் திக்வேஷை சிக்சரும் அடித்தார். 20 பந்துகளில் 34 ரன்களை எடுத்த நிலையில் மார்க்ரமின் பந்தில் ஸ்டம்பிங்க் ஆனார்.

வைபவ் பெரிய ஸ்கோரை எடுக்கவில்லைதான். ஆனாலும், அவரின் ஆட்டம் ஒரு Statement ஆக இருந்தது. நம்பிக்கை நிறைந்த பயமறியாத தன்னுடைய குணாதிசயத்தையும் அணுகுமுறையும் வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டார். இனி வரும் போட்டிகளில் அவரிடமிருந்து மேஜிக்கல் ஆட்டங்களை கட்டாயம் எதிர்பார்க்கலாம். வாழ்த்துகள் சுட்டிக் குழந்தை!