Vikatan Cartoon Row: விகடன் இணையதளம் முடக்கம்; சென்னை பத்திரிகையாளர் மன்றம் சார்பில் ஆர்ப்பாட்டம்!
விகடனின் இணைய இதழான விகடன் ப்ளஸ்ஸில் வெளியான கேலிச்சித்திரம் சம்பந்தமாகத் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கொடுத்த புகாரின் பேரில், எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் விகடனின் இணையதளம் (www.vikatan.com) சில நாள்களுக்கு முன்பு முடக்கப்பட்டது.
மத்திய அரசின் இத்தகைய நடவடிக்கையைக் கண்டித்து, கருத்துச் சுதந்திரத்துக்கு ஆதரவு தெரிவித்து... அரசியல் தலைவர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள் மற்றும் வாசகர்கள் உள்ளிட்டோர் தங்கள் ஆதரவைத் தெரிவித்து, விகடனுடன் நிற்கின்றனர்.

விகடனின் பிரதான இணையதளம் முடக்கப்பட்டதைத் தொடர்ந்து, தற்போது www.anandavikatan.com என்ற தளத்தின் வழியே விகடன் செயல்பட்டு வருகிறது. வாசகர்கள் தற்காலிகமாக இந்த தளத்தின் வழியாக விகடனின் செய்திகள் மற்றும் கட்டுரைகளைப் படித்து வருகின்றனர்.
சென்னை பத்திரிகையாளர் மன்றம் சார்பில் ஆர்ப்பாட்டம்!

விகடன் இணையதள முடக்கம், இந்திய அளவில் பேசுபொருளாக மாறியிருக்கிறது. இந்த நிலையில், சென்னை பத்திரிகையாளர் மன்றம், ``விகடன் இணையதளம் முடக்கப்பட்டதைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்" என்ற அறிவிப்பை, நேற்றைய தினம் வெளியிட்டிருந்தது. அதன்படி இன்றைய தினம் 18:02:2025, சென்னை பத்திரிகையாளர் மன்ற வளாகத்தில் மாலை 4 மணியளவில் ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது. பத்திரிகையாளர்கள் திரளாகக் கலந்துகொண்டு, மத்திய அரசின் எதேச்சதிகாரப் போக்கைக் கண்டித்து உரையாற்றவிருக்கின்றனர்.