Vote Chori: `ராகுல்காந்தி கூறுவது சரியானது; தேர்தல் ஆணையம் பதில் அளிக்க வேண்டும்' -திவ்யா ஸ்பந்தனா
வாக்காளர் பட்டியலில் மோசடி நடந்திருப்பதாகத் தேர்தல் ஆணையம் மற்றும் ஆளும் பாஜக மீது, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டுகளை முன்வைத்தது அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.
பிகார் மாநிலத்தில் 16 நாள்கள் வாக்காளர் அதிகார நடைபயணம் மேற்கொள்ள இருக்கிறார் ராகுல் காந்தி.
வாக்கு திருட்டு சம்பவம் தொடர்பாக எதிர்க்கட்சிகளும் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இந்நிலையில், "அரசியல் கட்சிகளுக்கு எந்தவிதத்திலும் தேர்தல் ஆணையம் பாகுபாடு காட்டாது.
ராகுல் காந்தி கூறும் குற்றச்சாட்டிற்கு ஆதாரத்தை காட்ட வேண்டும்" என்று இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தெரிவித்தார்.
மேலும் ராகுல் காந்தி கூறிய புகாருக்கும் விளக்கம் அளித்து பேசியிருந்தார்.
இருப்பினும் தேர்தல் ஆணையம் மீதான நம்பிக்கை குறைந்துவிட்டதாகவும் எதிர்க்கட்சிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் ராகுல் காந்திக்கு ஆதரவாக திவ்யா ஸ்பந்தனா பேசியிருக்கிறார். "வாக்குத் திருட்டு நடைபெற்று வருவதாக ராகுல்காந்தி கூறுவது மிகச் சரியானது.

தேர்தல் ஆணையர்களின் செய்தியாளர் சந்திப்பு கேலிக்கூத்தானது. எந்த கேள்விகளுக்கும் அவர்கள் பதிலளிக்கவே இல்லை.
வாக்காளர் பட்டியலில் ஏன் இத்தனை போலி வாக்காளர்கள் இருக்கிறார்கள்? அவற்றை நீக்குவதற்கு தேர்தல் ஆணையம் என்ன செய்யப் போகிறது? என்ற கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும்" என்று காட்டமாகப் பேசியிருக்கிறார்.