Wankhede: ``அந்த ஒரு போட்டி... " - அர்ஜுன் டெண்டுல்கருடனான நிகழ்வைப் பகிரும் பிரித்வி ஷா
இந்திய உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் ஆதிக்கம் செலுத்தும் அணியாக மும்பை அணி இருக்கிறது. அத்தகைய மும்பை கிரிக்கெட் அசோஷியனுடைய (MCA) வான்கடே மைதானத்தின் 50-வது ஆண்டு விழாவை முன்னிட்டு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதில், இந்திய வீரர் மற்றும் உள்ளூர் போட்டிகளில் மும்பை அணிக்காக விளையாடும் பிரித்வி ஷா கலந்துகொண்டு, வான்கடே என்றதும் தனக்கு முதலில் நினைவுக்கு வரும் நிகழ்ச்சியைப் பகிர்ந்திருக்கிறார்.
அந்த நிகழ்ச்சியில் பேசிய பிரித்வி ஷா, ``2011-ல் இங்கு உலகக் கோப்பை பார்க்க வந்ததுதான் எனக்கு முதலில் நினைவுக்கு வருகிறது. எனது வாழ்நாள் முழுவதும் அது இருக்கும். எனக்கு அப்போது 11 வயது. நானும், அர்ஜுன் டெண்டுல்கரும் நன்பர்கள். நாங்கள் இருவரும் இங்கே அமர்ந்து நேராக ஆட்டத்தைப் பார்த்தோம். நாம் அந்த உலகக் கோப்பையை வென்ற தருணம் இன்னும் எனக்கு நினைவிருக்கிறது... என்ன மாதிரியான ஒரு அனுபவம்." என்று கூறினார்.
2018-ல் 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியை கேப்டனாக வழிநடத்திய பிரித்வி ஷா, தனது ஆரம்பகால சர்வதேச ஆட்டங்கள் வாயிலாகப் பெரிய அளவில் கவனிக்கப்பட்டார். ஆனால், சமீபகால மோசமான ஆட்டங்கள் மற்றும் முறையாகப் பயிற்சிகளில் ஈடுபடாதது போன்ற காரணங்களால் மும்பை அணியிலிருந்து ஓரங்கட்டப்பட்டார். ஐ.பி.எல் மெகா ஏலத்திலும் அவரை யாரும் எடுக்கவில்லை.
அதேசமயம், 2018-ல் U19 கோப்பை வென்ற அணியில் இடம்பெற்றிருந்த சுப்மன் கில், அர்ஷதீப் சிங் ஆகியோர் தேசிய அணியில் தொடர்ச்சியாக விளையாடி வருகின்றனர். மேலும், பிரித்வி ஷாவின் நண்பர் அர்ஜுன் டென்டுல்கரும் ஐ.பி.எல் மெகா ஏலத்தில் மும்பை அணியால் வாங்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.