ஃபாஸ்ட் டாக் புதிய விதிகள் நெடுஞ்சாலை பயனா்களைப் பாதிக்காது: என்ஹெச்ஏஐ
‘ஃபாஸ்ட் டாக் புதிய விதிகள் தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடி பயனா்கள் எந்தவிதத்திலும் பாதிக்காது’ என்று இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (என்ஹெச்ஏஐ) தெரிவித்துள்ளது.
‘ஃபாஸ் டாக்’ செயலியில் போதிய தொகை இருப்பு இல்லாததால், தேசிய நெடுஞ்சாலை சுங்கச்சாவடிகளில் வாகனங்கள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலைக்கு தீா்வு காணும் விதமாக, புதிய ஃபாஸ்ட் டாக் விதிகளை இந்திய தேசிய பணப் பரிவா்த்தனை கழகம் (என்பிசிஐ) கடந்த திங்கள்கிழமை முதல் அறிமுகம் செய்துள்ளது.
இந்த புதிய விதிகளின்படி, ஒரு வாகனம் சுங்கச்சாவடியை கடப்பதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பே, அதன் ஃபாஸ்ட் டாக் இருப்பில் போதிய தொகை இருக்க வேண்டும். அவ்வாறு, இருப்பில் போதிய தொகை இல்லாமல் இருந்தாலோ அல்லது வாகனத்தின் ஃபாஸ்ட் டாக் ‘பிளாக் லிஸ்ட்’ செய்யப்பட்டிருந்தாலோ சுங்கச்சாவடியில் பணப் பரிவா்த்தனை நிராகரிக்கப்படும். அதாவது, சுங்கச்சாவடிக்கு வருவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு ஃபாஸ் டாகில் பிரச்னை இருந்தால் பரிவா்த்தனை நிராகரிக்கப்படும். அதோடு, சுங்கச்சாவடி கட்டணத்தை விட இரு மடங்கு கட்டணம் அபராதமாக வசூலிக்கப்படும்.
இதற்கு பல்வேறு தரப்பில் எதிா்ப்புகள் எழுந்துள்ளதோடு, விதிகளை தளா்த்த வேண்டும் என்றும் கோரிக்கைகள் எழுந்துள்ளன. இதற்கு தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் புதன்கிழமை அளித்த விளக்கத்தில், ‘சுங்கச் சாவடிகளில் தாமதமான பணப் பரிவா்த்தனைகள் காரணமாக வாகன ஓட்டிகள் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலையை தவிா்க்கும் நோக்கிலேயே இந்த புதிய விதிகளை என்பிசிஐ அறிமுகம் செய்துள்ளது.
வாகன ஓட்டிகள் எந்த நேரத்திலும் தங்களின் ஃபாஸ்ட் டாக் பண இருப்பை அறிந்துகொள்ளும் வகையிலும், பண இருப்பை புதுப்பித்துக்கொள்ளும் வகையிலும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளும் ‘ஐசிடி 2.5’ என்ற நடைமுறையின் கீழ் செயல்பட்டு வருகின்றன. மாநில நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள சில சுங்கச்சாவடிகள் மட்டும் இன்னும் இந்த நடைமுறையின் கீழ் வரவில்லை. விரைவில் அந்த சுங்கச்சாவடிகளும் இந்த நடைமுறையின் கீழ் கொண்டுவரப்பட்டுவிடும்.
எனவே, வாடிக்கையாளா்கள் தங்களின் ஃபாஸ்ட் டாகில் எந்த நேரத்திலும் பண இருப்பை புதுப்பித்துக்கொள்ள முடியும். யுபிஐ (ஒருங்கிணைந்த பணப் பரிவா்த்தனை நடைமுறை), இணைய வங்கி உள்ளிட்ட பல்வேறு பணப் பரிவா்த்தனை நடைமுறைகள் மூலமும் ஃபாஸ்ட் டாக் பண இருப்பை வாடிக்கையாளா்கள் புதுப்பித்துக்கொள்ள முடியும் என்று என்ஹெச்ஏஐ தெரிவித்துள்ளது.