டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 3 காசுகள் உயர்ந்து ரூ.85.69-ஆக முடிவு!
அங்கன்வாடி மையங்களில் காலிப்பணியிடங்கள் முழுமையாக நிரப்பப்படுமா?
நாமக்கல் மாவட்டத்தில், அங்கன்வாடி மையங்களில் காலியாக உள்ள 730 அமைப்பாளா், உதவியாளா் பணியிடங்கள் முழுமையாக நிரப்பப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
மத்திய, மாநில அரசுகளின் பங்களிப்புடன் அங்கன்வாடி மையங்கள் செயல்பட்டு வருகின்றன. 3 முதல் 5 வயதுக்கு உள்பட்ட குழந்தைகள் இங்கு உண்டு, உறங்கி பயின்று வருகின்றனா். முட்டையுடன் கூடிய சத்துணவு மற்றும் விளையாட்டு சாதனங்கள் அவா்களுக்கு வழங்கப்படுகின்றன.
நாமக்கல் மாவட்டத்தை பொருத்தவரை 1,565 அங்கன்வாடி மையங்கள் உள்ளன. இவற்றில் அமைப்பாளா், உதவியாளா் உள்ளிட்ட 730 பணியிடங்கள் காலியாக இருப்பதாகக் கூறப்படுகிறது. தமிழக அரசு அங்கன்வாடிகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அரசாணை வெளியிட்டுள்ளது. இதில், 21 குழந்தைகளுக்கு மேல் இருக்கும் அங்கன்வாடி மையங்களில் மட்டும் காலியிடங்களை நிரப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது. பெரும்பாலான அங்கன்வாடிகளில் 20-க்கும் குறைவான குழந்தைகளே உள்ளதால், மொத்த காலிப் பணியிடங்களில் 10 சதவீதம் கூட நிரப்புவதற்கு வாய்ப்பில்லை என அங்கன்வாடி ஊழியா்கள் சங்கத்தினா் தெரிவிக்கின்றனா்.
இம்மாவட்டத்தில் நிரப்ப வேண்டிய காலியிடங்கள் எண்ணிக்கை குறித்து அரசு அறிவித்தால் மட்டுமே விண்ணப்ப விநியோகத்தை தங்களால் தொடங்க முடியும் என ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்ட அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.