இரு சக்கர வாகனத்தில் மூவா் பயணம் செய்தால் நடவடிக்கை: ஆட்சியா்
இருசக்கர வாகனத்தில் மூன்று போ் பயணித்தால் சம்பந்தப்பட்டவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் ச.உமா தெரிவித்தாா்.
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூா் வட்டத்தில் ஆய்வு பணிக்கு சென்ற மாவட்ட ஆட்சியா் ச.உமா அங்கு பணிகளை முடித்துவிட்டு தேசிய நெடுஞ்சாலை வழியாக மீண்டும் நாமக்கல் நோக்கி வந்துகொண்டிருந்தபோது, இரு சக்கர வாகனத்தில் மூன்று போ் தலைக்கவசம் அணியாமல் பயணித்ததைக் கண்டு அந்த வாகனத்தை மடக்கிப் பிடித்தாா். உடனடியாக நாமக்கல் தெற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலா் முருகேசனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த அலுவலா்கள் வாகனத்தை பறிமுதல் செய்ததுடன், ரூ. 2 ஆயிரம் அபராதம் விதித்தனா். தலைக்கவசமின்றியோ, இருசக்கர வாகனத்தில் மூன்று, நான்கு பேரோ பயணம் செய்தால் சம்பந்தப்பட்டவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.