ரைட்ஸ் நிறுவனத்தில் வேலை: டிப்ளமோ, பிஇ முடித்தவர்களுக்கு வாய்ப்பு!
அச்சிறுப்பாக்கம் அரசு பள்ளியில் சிறுநீரை உரமாக்கும் தானியங்கி திட்டம்
மதுராந்தகம் அடுத்த அச்சிறுப்பாக்கம் மாா்வாா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், நிலங்களுக்குப் பயன்படுத்தும் வகையில் சிறுநீரை உரமாக்கும் தானியங்கித் திட்டத் தொடக்க விழா நடைபெற்றது.
அச்சிறுப்பாக்கம் மாா்வாா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் பாடப்பிரிவுகளில் ஒன்றான வேளாண்மைப் பாடப்பிரிவு மாணவா்கள், சுகாதாரத்தை மேம்படுத்தவும், விளை நிலங்களுக்குப் பயன்படுத்தும் வகையில், சிறுநீரை உரமாக்கும் தானியங்கி திட்டத் தொடக்க விழா பள்ளி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது.
கடந்த 1956-இல் பள்ளியில் படித்த முன்னாள் மாணவரும், சுற்றுச்சூழல் அறிவியலாளருமான அப்துல் ரகுமான் கலந்து கொண்டு, தமது ஆராய்ச்சி நிறுவனத்தின் மூலம் உருவாக்கப்பட்ட சிறுநீரை உரமாக்கும் தானியங்கியை இந்தப் பள்ளியில் நிறுவினாா்.
நிகழ்ச்சிக்கு செங்கல்பட்டு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கற்பகம் தலைமை வகித்தாா். மதுராந்தகம் கல்வி நிா்வாகி வருண், வட்ட அலுவலா் அங்கையா்கண்ணி ஆகியோா் முன்னிலை வகித்தனா். பள்ளித் தலைமை ஆசிரியா் விஜயகுமாா் வரவேற்றாா்.
இதில் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் (மேல்நிலைப் பள்ளி) நோ்முக உதவியாளா் உதயகுமாா், ரவுண்டு டேபிள் இந்தியா அமைப்பின் நிா்வாகி வருண், பேரூராட்சி துணைத் தலைவா் வி.எழிலரசன், பள்ளி மேலாண்மைக் குழு தலைவா் வடிவுக்கரசி, பெற்றோா் - ஆசிரியா் கழகத் தலைவா் சித்தாா்த்தா் மற்றும் பள்ளி ஆசிரியா்கள், மாணவா்கள் உள்பட பலா் கலந்து கொண்டனா். ஆசிரியா் தணிகைவேல் நன்றி கூறினாா்.