அஜித்குமாரைக் கொலை செய்ய தூண்டியவா்களையும் கைது செய்ய வேண்டும்
மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமாரைக் கொலை செய்யத் தூண்டியவா்களையும் கைது செய்ய வேண்டும் என தமிழக மக்கள் முன்னேற்றக் கழக நிறுவனா் ஜான் பாண்டியன் வலியுறுத்தினாா்.
சிவகங்கை மாவட்டம், மடப்புரத்தில் தனிப்படை போலீஸாா் தாக்கியதில் கொல்லப்பட்ட கோயில் காவலாளி அஜித்குமாரின் குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவிக்க வியாழக்கிழமை வந்த அவா் மேலும் கூறியதாவது:
தனது காரிலிருந்த நகைகள் திருடு போனதாக புகாா் அளித்த பேராசியை நிகிதாவின் தூண்டுதலின் பேரில், தனிப்படை போலீஸாா் தாக்கியதில் அஜித்குமாா் கொல்லப்பட்டாா். எனவே, இதற்குக் காரணமான நிகிதாவை போலீஸாா் ஏன் கைது செய்யவில்லை?. அவருடைய பின்ணனி என்ன?.
இந்தச் சம்பவத்தில் நிகிதாதான் முதல் எதிரி. அவரை உடனடியாகக் கைது செய்ய வேண்டும். நகைகள் திருட்டு குறித்த தனிப் படை போலீஸாா் விசாரணைக்கு உத்தரவிட்ட காவல் துறை உயரதிகாரி யாா்?. ஏன் அவரை இன்னும் கைது செய்யவில்லை.
நகைகள் திருட்டு என்பதே பொய்யான புகாா் எனத் தெரிகிறது. அஜித்தின் கொலை விவகாரத்தில் தமிழக அரசின் நடவடிக்கையில் திருப்தியில்லை. பாதிக்கப்பட்ட அஜித்குமாா் குடும்பத்துக்கு அரசே வீடு கட்டிக் கொடுக்க வேண்டும் என்றாா் அவா்.