கொச்சி: பஹல்காம் தாக்குதலில் பலியானவரின் குடும்பத்தினரைச் சந்தித்த அமித் ஷா
அடர்பச்சை நிறத்தில் தென்பெண்ணை ஆற்று நீர்; `பெயிண்ட்’போல படியும் ரசாயனம் - விவசாயிகள் பேரதிர்ச்சி!
கிருஷ்ணகிரி, கே.ஆர்.பி அணையில் சேமிக்கப்படும் தென்பெண்ணை ஆற்று நீரால் சுமார் 9,012 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசனம் பெறுகின்றது. ஆண்டுதோறும் இருபோக சாகுபடிக்காக அணையில் இருந்து, பாசன கால்வாய்களின் வழியாக நீர் திறந்துவிடப்படுகிறது. மாவட்ட மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், இந்த நீர்தேக்கம் உயிர்ப்பூட்டிக்கொண்டிருக்கிறது.
இந்த நிலையில், கடந்த சில மாதங்களாக நீர்த்தேக்கத்துக்கு பாய்ந்து வரும் நீர்... அடர்பச்சை நிறத்தில் மிகவும் மாசடைந்திருப்பது, விவசாயிகளையும் பொதுமக்களையும் பேரதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது. கர்நாடக மாநில தொழிற்சாலைகளின் ரசாயன கழிவுகளும், பெங்களூர் நகரத்தின் கழிவுகளும் சுத்திகரிப்புச் செய்யப்படாமல் தென்பெண்ணை ஆற்றில் நேரடியாக, அப்படியே திறந்துவிடப்படுவதாக வெகுகாலமாகவே தமிழக விவசாயிகள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இதனால், எப்போதுமே நீர் மாசுபட்ட நிலையில் நுரைப் பொங்க வருவதையும் பார்க்க முடிகிறது. மழைக்காலங்களில், இந்த நிலை மேலும் மோசமாகிறது. அணையில் இருந்து கால்வாய்களில் பாசனத்துக்காகத் திறந்துவிடப்படும் மாசற்ற நீரால் பயிர்கள் பாதிக்கப்படுவதாகவும் விவசாயிகள் கவலைக் கொள்கின்றனர். ரசாயனக் கழிவு `பெயிண்ட்’போல நிலத்தில் படிவதால், மண்ணின் வளமே மலட்டுத் தன்மையாகும் சூழல் உருவாகியிருப்பதாகவும் கூறப்படுகிறது. எனவே, தென்பெண்ணை ஆற்று நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மத்திய நதி ஆணையக் குழுவும், தென்மண்டல பசுமை தீர்ப்பாயமும் நீர் மாதிரிகளை சேகரித்து ஆய்வு செய்து, `கழிவுகளை திறந்துவிடும் அட்டூழியத்துக்கு முடிவு கட்ட வேண்டும்’ என கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகள் கோரிக்கை விடுத்திருக்கின்றனர்.