மம்மூட்டிக்கு என்ன ஆனது? மோகன்லால் பதிவால் ரசிகர்கள் நெகிழ்ச்சி!
Crow: ஒரே இணை; தினமும் குளியல்; செவிலித்தாய்... - காக்கைகளின் கதை!
பக்கத்தில் இருந்தால் அதன் அருமை தெரியாது என்பார்கள். அது காக்கைக்கும் பொருந்தும். சுற்றுச்சுழலில் காக்கையின் பங்கு முக்கியமானது என்கிறார் இயற்கை ஆய்வாளர், ஆர்வலர் மற்றும் எழுத்தாளர் கோவை சதாசிவம்.
’’காக்கை கிட்டத்தட்ட உலகம் முழுக்க வாழ்கிற ஒரு புத்திசாலிப் பறவை. தென் அமெரிக்கா மற்றும் அண்டார்டிகாவைத் தவிர மற்ற கண்டங்களில் பல்வேறு வகையான காக்கைகள் வாழ்கின்றன. மனிதர்களுக்கு முன்பே காக்கைகள் பூமியில் இருந்தன. சுமார் 30 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பூமியில் காக்கைகள் வாழ்ந்து வருவதாக பறவை ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள்.

உண்மையில் காக்கைகள் மனிதனை அண்டி வாழ்கிற பறவையினம் கிடையாது. ஆனால், காலப்போக்கில் காக்கைகளை நம் மூதாதையர்களாக நம்பி உணவுக் கொடுப்பதில் ஆரம்பித்து இன்றைக்கு காக்கைகளுக்கு என்றே தனியாக கடைகளில் விற்கப்படுகிற மிக்சர்களை வாங்கி அவற்றுக்குக் கொடுப்பது வரை செய்துகொண்டிருக்கிறோம். விளைவு, அவை நமக்கு வெகு அருகில் வந்துவிட்டன. ஆனால், ஒரு மனிதன் எதன் பொருட்டு நெருங்குகிறான், உணவு வைக்கவா; விரட்டவா என்பதை அவன் உடல்மொழி மற்றும் முகபாவத்தை வைத்தே அறியக்கூடிய அளவுக்கு காக்கைகள் நுட்பம் மிகுந்தவை. இதைத்தான் ’காக்கை நோக்கறியும்’ என்று சொல்வார்கள்.
காக்கைகள் ஆகச்சிறந்த துப்புரவாளர்கள் மற்றும் பசுமை பரப்பாளர்கள். இந்த இரண்டு வேலைகளையும் ஓர் உயிர் செய்கிறது என்றால், அது சுற்றுச்சூழலில் மிக முக்கியமான இடத்தில் இருக்கிறது என்று பொருள்.
வீட்டு வாசலில் எத்தனையோ நாள் எலிகள் செத்துப்போய் கிடப்பதைப் பார்த்திருப்போம். அடுத்த சில மணி நேரங்களில் காக்கைகள் அதைத் தின்று அந்த இடத்தைத் துப்புரவாக்கிவிடும். உயிர்கள் வாழ்வதற்கு முதன்மை தேவையான துப்புரவுப்பணியை காக்கைகள் செய்கின்றன. இவை இந்தப் பணியை செய்யவில்லை என்றால், நோய்க்கிருமிகள் காற்றில் பரவி பலருக்கும் தொற்று நோய்களை பரப்பி விடும்.

பறவைகளுக்கும் தாவரங்களுக்கும் பெரும் பந்தமொன்று உண்டு. இது காக்கைக்கும் உண்டு. காக்கையின் எச்சம் வழியாக பரப்பப்படுகிற பல்வேறு விதைகள் செழித்து வளர்வதைப் பார்த்திருப்போம். கான்கிரீட் சுவர்களின் விரிசல்களில்கூட காக்கைகள் பரப்புகிற விதைகள் வீறுகொண்டு வளரும்.
உலகின் பல நாடுகளிலும் காக்கைகள் இருக்கின்றன என்று கூறியிருந்தேன். அந்தந்த நாடுகளுக்கே உரிய முக்கியமான தாவரங்களின் விதைகளைப் பரப்புவதில் காக்கைகள் முக்கிய பங்கு வகிக்கிறது. தமிழ்நாட்டை எடுத்துக்கொண்டால், வேப்ப மரத்தைச் சொல்லலாம்.
நாளொன்றுக்கு நூறில் இருந்து நூற்றைம்பது வேப்பம்பழங்களையாவது காக்கைகள் சாப்பிடும். கிட்டத்தட்ட அந்த சீசன் முழுக்க வேப்பம்பழங்களைச் சாப்பிட்டு அதன் விதைகளை எச்சம் வழியே வெளியேற்றும். தரிசு நிலங்களில், கேட்பாரற்றுக் கிடக்கிற நிலங்களில், வானம் பார்த்த பூமிகளில் வளர்ந்து நிற்கிற வேப்ப மரங்களுக்கான விதைகளையெல்லாம் காக்கைகளே விதைத்தன. காக்கைகளின் ஆயுட்காலம் கிட்டத்தட்ட 13 ஆண்டு காலம் என்கிறார்கள். அந்த 13 ஆண்டுகளில் கிட்டத்தட்ட ஆயிரம் மரங்களையாவது காக்கைகள் தன் எச்சம் வழியே பரப்புகின்றன. அதனால்தான் காக்கைகளை பசுமை பரப்பாளர்கள் என்று குறிப்பிடுகிறேன்’’ என்கிறார் கோவை சதாசிவம்.

உலகம் எத்தனை நகரமயமானாலும், அதற்கேற்ப தன்னை தகவமைத்துக்கொள்ளும் காக்கைகள். எத்தனையோ பறவைகள் நகர்மயம் மற்றும் தொழில்மயம் காரணமாக புலம் பெயர்ந்துவிட்டன. நம் சிறு வயதில் தெருவோர செடிகளின் சிறு பழங்களைக் கொத்திய எத்தனையோ பறவைகளை நம்மால் இப்போது பார்க்க முடிவதில்லை. ஆனால், காக்கைகள் மட்டும் ’சர்வைவல் ஆஃப் தி ஃபிட்டஸ்ட்’டாகவே இருக்கிறது. மாநகரங்களில் மரங்களைவிட செல்போன் டவர்களே அதிகம் இருக்கின்றன. இவற்றிலும் கம்பிகளை வைத்து கூடு கட்டி, எந்தச் சூழலிலும் தன்னை தகவமைத்துக் கொள்கின்றன இவை.
காக்கைகள் முதல் முறை ஜோடி சேருகிற இணையுடன் மட்டுமே வாழ்நாள் முழுக்க ஜோடி சேரும் என்கிறார்கள் பறவை ஆய்வாளர்கள்.
காக்கைகள் கூடி வாழ்கிற பறவை. ஓர் இரை கிடைத்தால் பிற காக்கைகளை கரைந்து அழைத்து, எல்லாம் ஒன்றாகச் சேர்ந்துதான் பகிர்ந்துண்ணும்.
தங்கள் இனத்தில் ஒன்று இறந்துவிட்டால், எக்கச்சக்க காக்கைகள் ஒன்றுகூடி கரைவது கிட்டத்தட்ட மனிதர்களுடைய கண்ணீர் அஞ்சலியை ஒத்தது.

இவை காலையிலேயே புறப்பட்டு கிட்டத்தட்ட 6 முதல் 7 கி.மீட்டர் வரை பறந்து திரிந்து உணவுத் தேடும்; ஒன்றாகப் பறக்கும்; ஒன்றாகச் சாப்பிடும். மாலை நேரங்களில் தினமும் காக்கைகள் குளிக்கும். கழிவுகளைச் சாப்பிடுவதால், கிருமிகளை நீக்க தினமும் குளிக்கும். வேகமாக குளிப்பவர்களை, அவர்கஹள் சரியாக குளித்திருக்க மாட்டார்கள் என்ற அர்த்தத்தில் ‘காக்கா குளியல்’ என்று கேலி செய்வோம். உண்மையில், காக்கைகள் குளியலின் முக்கியத்துவம் தெரிந்தவை.
காக்கைகள் நுட்பமான அறிவு கொண்டவை என்று ஏற்கெனவே கூறியிருந்தேன் அல்லவா..? தன்னுடைய கூட்டில் வேறொரு பறவையான குயிலின் முட்டை இருப்பதை காக்கைகள் உணர்ந்துவிடும். ஆனால், அதை கீழே தள்ளி உடைக்காது. ஒருவேளை அது தன் முட்டையாக இருந்தால் என்ன செய்வது என்கிற பாசத்தில், அந்த முட்டைகளையும் அடைகாத்து, குஞ்சு பொரிய வைத்து, அது குயில் குஞ்சு என்பது தெரியும்வரை உணவூட்டும். அந்த வகையில், காக்கையை தலைசிறந்த செவிலித்தாயாகச் சொல்லலாம்.

காக்கைகள் மனிதன் வீசும் உணவுகள், பிஸ்கட், மிக்சர் என எல்லாவற்றையும் சாப்பிடுகின்றன. இறைச்சிக்கழிவுகள் அதிகமாகக் கிடைக்கிற நகரங்களில் வசிக்கிற காக்கைகளின் செரிமான உறுப்புகள், இதயம், சிறுநீரகங்கள் நோய்த்தொற்றால் பாதித்துபோய் கிடக்கின்றன. மீந்த உணவுகளைச் சாப்பிடுகிற காக்கைகள் அதிலிருக்கிற ரசாயனங்களாலும் பாதிக்கப்படுகின்றன. கூடவே சுற்றுச்சூழல் சீர்கேடும்... விளைவு, காக்கைகளின் கரிய நிறம் மங்கிக்கொண்டிருக்கிறது. கால் விரல்களின் எண்ணிக்கைக் குறைந்திருக்கிறது. சில காக்கைகளின் கால்கள் ஊனமாக இருக்கின்றன. சிலவற்றுக்கு அலகு சிறியதாக இருக்கிறது. சர்வைவல் ஆஃப் தி ஃபிட்டஸ்ட்டாக இருக்கிற காக்கைகளையும் காக்க வேண்டிய காலம் வருமோ என்னவோ’’ என வருத்தப்படுகிறார் கோவை சதாசிவம்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...