கொச்சி: பஹல்காம் தாக்குதலில் பலியானவரின் குடும்பத்தினரைச் சந்தித்த அமித் ஷா
ஷேக் ஹசீனாவின் அறிக்கைகளை வெளியிட்டால் கடும் நடவடிக்கை! ஊடகங்களுக்கு வங்கதேச அரசு எச்சரிக்கை!
வங்கதேசத்தில், பதவி நீக்கம் செய்யப்பட்ட முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் அறிக்கைகளை வெளியிடவோ விளம்பரப்படுத்தவோ கூடாது என அந்நாட்டின் இடைக்கால அரசு ஊடகங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
வங்கதேசத்தின், அவாமி லீக் கட்சித் தலைவரும், அந்நாட்டின் முன்னாள் பிரதமருமான ஷேக் ஹசீனாவின் ஆட்சியானது, கடந்த 2024-ம் ஆண்டு அவருக்கு எதிராக தேசியளவில் நடைபெற்ற மாணவர் போராட்டத்தினால் கவிழ்க்கப்பட்டது. இதையடுத்து, அந்நாட்டை விட்டு வெளியேறிய ஷேக் ஹசீனா இந்தியாவில் தஞ்சமடைந்தார்.
இத்துடன், ஷேக் ஹசீனாவின் மீது ஏராளமான குற்றவழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், ஷேக் ஹசீனாவின் அறிக்கைகள் மற்றும் உரையாடல்கள் ஆகியவற்றை வெளியிடும் ஊடகங்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அந்நாட்டின் இடைக்கால அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து, அலோசகர் முஹம்மது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
“ஊடக அதிகாரிகளுக்கு நாங்கள் எச்சரிக்கை விடுக்கின்றோம். ஷேக் ஹசீனாவின் அறிக்கைகளை யாராவது பரப்பினால், உடனடி சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்பதை அனைவருக்கும் உறுதியாகத் தெரிவித்துக்கொள்கிறோம்.
ஷேக் ஹசீனாவின் ஆடியோ பதிவுகளை தொலைக்காட்சி சேனல்கள், செய்திகள் மற்றும் இணையதளங்களில் வெளியிடுவது, பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் 2009-ஐ மீறுவதாகும்” எனக் கூறப்பட்டுள்ளது.
மேலும், ஷேக் ஹசீனா கும்பல் படுகொலைகள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டு தப்பியோடிய குற்றவாளி எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னதாக, வங்கதேசத்தில் வரும் 2026-ம் ஆண்டின் பிப்ரவரி மாதம் பொது தேர்தல் நடத்தப்படும் என இடைக்கால அரசு அறிவித்திருந்தது. இதற்கான ஏற்பாடுகள் நடைபெறுவதால், பாதுகாப்பு காரணங்களினால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: இந்தியாவுடன் விரிவான பேச்சுவார்த்தை நடத்த தயார்: பாகிஸ்தான் அறிவிப்பு!