பிகாரில் விடுபட்ட வாக்காளர்கள் ஆதார் எண்ணுடன் விண்ணப்பிக்கலாம்: உச்ச நீதிமன்றம்
வான்வழித் தாக்குதலில் போகோ ஹராம் மூத்த தலைவர் கொலை! நைஜர் ராணுவம் அறிவிப்பு!
மேற்கு ஆப்பிரிக்காவில் ஆயிரக்கணக்கான மக்களைக் கொன்ற பயங்கரவாத அமைப்பான போகோ ஹராமின், மூத்த தலைவரைக் கொன்றுள்ளதாக நைஜர் நாட்டு ராணுவம் அறிவித்துள்ளது.
நைஜீரியா நாட்டைச் சேர்ந்த பயங்கரவாத அமைப்பான போகோ ஹராம், மேற்கத்திய கல்வி, கலாசாரம் ஆகியவை ஆப்பிரிக்காவில் பின்பற்றப்படுவதற்கு எதிராக பல பயங்கரவாதத் தாக்குதல்களை நடத்தி வருகின்றது.
நைஜீரியாவில் இருந்து மேற்கு ஆப்பிரிக்க நாடான நைஜரிலும் தனது பயங்கரவாதத் தாக்குதல்களைத் தொடர்ந்து வரும் போகோ ஹராமின் படைகளுக்கு எதிராக அந்நாட்டு ராணுவம் பல ஆண்டுகளாகப் போராடி வருகின்றது.
இந்நிலையில், சாத் நதி பகுதியில் கடந்த ஆக.15 ஆம் தேதி நைஜர் ராணுவம் மேற்கொண்ட வான்வழித் தாக்குதல்களில் ஏராளமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இதில், போகோ ஹராம் அமைப்பின் தற்போதைய தலைவரான இப்ராஹிம் பகோவ்ராவும் கொல்லப்பட்டதாக, நைஜர் ராணுவம், நேற்று (ஆக.21) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
முன்னதாக, போகோ ஹராமின் நீண்டகால தலைவரான அபூபக்கர் ஷெகாவூ என்பவர் கடந்த 2021-ம் ஆண்டு மரணமடைந்தார். அதன்பின்னர், போகோ ஹராம் பயங்கரவாத அமைப்பு இரண்டாகப் பிளவுப்பட்ட நிலையில், அதில் ஒன்றுக்கு இப்ராஹிம் பகோவ்ரா தலைமைத் தாங்கி வந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: பாகிஸ்தான்: நள்ளிரவில் துப்பாக்கிச் சண்டை! 15 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை!