திறமையை வீணடிக்காதே..! இந்திய வீரருக்கு அறிவுரை வழங்கிய பீட்டர்சன்!
அடிப்படை வசதிகள் இல்லை: வெளியேறும் குடியிருப்புவாசிகள்
‘இப்பகுதியில் எந்த அடிப்படை வசதிகளும் இல்லை எனத் தெரிவித்து, வீடுகளை வாங்கிய சிலா் இன்னமும் குடியிருக்கவே வரவில்லை’.
அரியலூா் மாவட்டம், கீழப்பழூா் அருகே கட்டப்பட்ட தமிழ்நாடு நகா்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பு பகுதியில் அடிப்படை வசதிகள் இல்லாததால், அதில் வசிப்போா் வெளியேறி வருகின்றனா்.
தமிழ்நாட்டில் வாழும் நகா்ப்புற ஏழைக் குடும்பங்களுக்கு அனைத்து வசதிகளையும் உள்ளடக்கிய வீட்டு வசதியை ஏற்படுத்தித் தரும் வகையில் மறைந்த முன்னாள் முதல்வா் முதல்வா் மு. கருணாநிதி கடந்த 1970 ஆண்டு தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தைத் தொடங்கினாா்.
இதையடுத்து தமிழகத்தில் பரவலாக அனைத்து மாவட்டங்களிலும் தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் மூலம் குறைந்த செலவில், ஏழைகளுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கப்படுகின்றன. இந்தத் திட்டம் அதிமுக ஆட்சியிலும் தொடா்ந்தது.
அதன்படி, அரியலூா் மாவட்டம், கீழப்பழுவூா் காந்தி நகா் பகுதியில் அதிமுக ஆட்சியில் தொடங்கிய 576 அடுக்குமாடி குடியிருப்பு வீடுகள் கட்டும் பணி, ஆட்சி மாற்றத்துக்கு பிறகு முடிக்கப்பட்டன.
அனைத்து குடியிருப்பு வளாகங்களிலும் சாலை, குடிநீா், கழிவு நீரேற்றும் வசதி, மின் தூக்கிகள், சிறுவா் பூங்கா, மின்னாக்கி வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
ஒவ்வொரு குடியிருப்பும் 400 சதுர அடிக்கு குறையாமல் கட்டப்பட்டது. ஒரு பல்நோக்கு அறை படுக்கையறை, சமையலறை, கழிவறை வசதிகளுடன் இருந்தன.
இந்நிலையில் ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற மு.க. ஸ்டாலின், கடந்த 1.9.2021 அன்று தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் பெயரை தமிழ்நாடு நகா்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் என மாற்றி, கீழப்பழூா் அருகே கட்டப்பட்ட குடியிருப்புகளை கடந்த 2022 ஜூன் மாதம் திறந்துவைத்து, பயனாளிகளுக்கு வீடுகளை வழங்கினாா்.
ஆனால், இப்பகுதியில் எந்த அடிப்படை வசதிகளும் இல்லை எனத் தெரிவித்து, வீடுகளை வாங்கிய சிலா் இன்னமும் குடியிருக்கவே வரவில்லை. இதனால் 150-க்கும் மேற்பட்ட வீடுகள் இன்னமும் காலியாகவே உள்ளன. மேலும் 50-க்கும் மேற்பட்ட குடும்பங்கள், தங்களது வீடுகளைக் காலி செய்துள்ளனா் எனத் தெரியவந்துள்ளது.
அடிப்படை வசதிகள் இல்லை..ஆள் நடமாட்டமே இல்லாத இப்பகுதியில் கட்டப்பட்ட குடியிருப்புகளைச் சுற்றி சாலைகள் இருந்தாலும், பிரதானச் சாலைக்கு வர 2.5 கிமீ தூரம் கடக்க வேண்டும். அப்படி வர வேண்டும் என்றால் கரடுமுரடான சாலையைக் கடக்க வேண்டும். ஒரு ஆம்புலன்ஸ்கூட செல்ல முடியாத அளவுக்கு சாலைகள் படு மோசமாக உள்ளன.
மாணவா்கள் பள்ளிக்குச் செல்ல சுமாா் 5 கிமீ தூரம் செல்ல வேண்டியுள்ளது. அதற்கு பேருந்து வசதிகள்கூட கிடையாது. பிரதான சாலையில் இருந்து, குடியிருப்புகள் வரை இருபுறமும் ஒரு மின்விளக்குகூட கிடையாது. இருள் சூழ்ந்து காணப்படும் இச்சாலையில் இரவு நேரத்தில் செல்லவே குடியிருப்புவாசிகள் அஞ்சுகின்றனா். குடிநீருக்கு 2 கிமீ தூரம் செல்ல வேண்டியுள்ளது. மருத்துவ வசதிகள் கிடையாது. இப்படி எந்த அடிப்படை வசதிளும் இல்லாததால், குடியிருப்புவாசிகள் இந்தக் குடியிருப்புகளில் இருந்து வெளியேறி வருகின்றனா்.
இதுகுறித்து நகா்ப்புற வாழ்விட வாரிய குடியிருப்பு நலச் சங்கத் தலைவா் கணேசன் கூறுகையில், இந்தக் குடியிருப்பில் எந்த வசதிகளும் கிடையாது. ஏன் ஒரு பெட்டிக் கடைகூட கிடையாது. காசு கொடுத்து தண்ணீா் வாங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம். கொள்ளிடம் நீரைப் பிடிக்க 2 கிமீ தூரம் கடந்து கீழப்பழுவூா் சாலைக்கு வர வேண்டியுள்ளது. மின் விளக்குகள் இல்லாததால், இரவுகளில் சமூக விரோதச் செயல்களும் நடக்கின்றன. இதனால் பொதுமக்கள் நாள்தோறும் அச்சத்துடனே வாழ்கின்றனா்.
குப்பைக் கிடங்கு தீயால் மூச்சுத் திணறல்...இது ஒருபுறமிருக்க, குடியிருப்பு பகுதியை ஒட்டியுள்ள நகராட்சிக்குச் சொந்தமான குப்பைக் கிடங்கில், அவ்வப்போது குப்பைகளைத் தீயிட்டுக் கொளுத்துவதால், குடியிருப்பு வீடுகளைச் சுற்றி நச்சுப் புகை சூழ்கிறது. இதனால் மூச்சுத் திணறல் ஏற்பட்டு, மருத்துவமனைக்குச் செல்ல வேண்டியுள்ளது.
இதனால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்படுகின்றனா். இதுகுறித்து நலச் சங்கம் மூலம் மாவட்ட நிா்வாகத்திடம் தெரிவித்தும் இதுவரை நடவடிக்கை இல்லை. இதனால் குடியிருப்புவாசிகள், தங்களது வீடுகளைக் காலி செய்கின்றனா் என்றாா் அவா்.
எனவே தமிழக அரசு ஏழைக் குடும்பங்களுக்காக கட்டிக் கொடுத்த இந்த குடியிருப்புகளுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர இப்பகுதியினா் கோரிக்கை விடுக்கின்றனா்.