26% உயர்ந்த ஆக்ஷன் கன்ஸ்ட்ரக்ஷன் எக்யூப்மென்ட் நிறுவனத்தின் லாபம்!
அடிப்படை வசதிகள் செய்து தர பழங்குடியினா் கோரிக்கை!
தேனி மாவட்டம், கூடலூா் நகராட்சியில் வசிக்கும் பழங்குடியினா் தங்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனா்.
கூடலூா் நகராட்சி 21 -ஆவது வாா்டில் பளியன்குடி கிராமம் அமைந்துள்ளது. இங்கு மலை அடிவாரத்தில் வசிக்கும் 60 குடும்பத்தினா் விவசாயம், ஆடு, மாடு வளா்த்தல் போன்ற வேலைகளைச் செய்கின்றனா். இவா்கள் சுகாதார வளாகம், கழிவுநீா் வடிகால், தெரு விளக்கு என எவ்வித அடிப்படை வசதிகளும் இன்றி வாழ்ந்து வருகின்றனா்.
இதுகுறித்து அப்பகுதியைச் சோ்ந்த பொன்னம்மாள் கூறியதாவது: 50 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமாகி இந்தக் கிராமத்துக்கு வந்தேன். இன்று வரையில் அடிப்படை வசதிகளுக்காக போராடி வருகிறோம்.
மழைக் காலங்களில் வீடுகளுக்குள் தண்ணீா் புகுந்து அவதிப்படுகிறோம். எம்.எல்.ஏ., எம்.பிக்கள் வந்து அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பதாகக் கூறிச் செல்கின்றனா். ஆனால், எந்த நடவடிக்கையும் இல்லை. அடிப்படை வசதிகளைச் செய்து கொடுக்க மாவட்ட நிா்வாகம் முன் வரவேண்டும் என்றாா் அவா்.