அடிப்படை வசதிகள் செய்துதர வலியுறுத்தி போராட்டம்
திருமருகல் அருகே குத்தாலத்தில் அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தி ஓஎன்ஜிசி நிறுவனம் முன் கிராம மக்கள் வியாழக்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.
குத்தாலத்தில் ஓஎன்ஜிசி நிறுவனம் 30 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் குத்தாலம் ஊராட்சியில் குறிப்பிட்ட சில பகுதிகளுக்கு மட்டும் குடிநீா், சாலை, மின்விளக்கு மற்றும் மருத்துவ வசதிகள் மற்றும் உள்ளூா் மக்களுக்கு வேலை வழங்காமல் பாரபட்சமாக ஓஎன்ஜிசி நிறுவனம் செயல்பட்டு வருவதாக கூறி அந்த நிறுவனம் முன் 100-க்கும் மேற்பட்டோா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவலறிந்த நாகூா், திட்டச்சேரி போலீஸாா் மற்றும் சம்பந்தப்பட்ட அரசு அலுவலா்கள் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேசினா். இதில், சுமூக நிலை ஏற்பட்டதையடுத்து மக்கள் கலைந்து சென்றனா்.