அட்லியுடன் உரையாடல்... சாய் அபயங்கர் காட்டில் மழைதானா?
இயக்குநர் அட்லியுடன் இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கர் பேசியது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
நடிகர் அல்லு அர்ஜுன் புஷ்பா - 2 படத்திற்குப் பின் இயக்குநர் அல்லு அர்ஜுன் இயக்கத்தில் நடிக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படம் ரூ. 600 கோடி பட்ஜெட்டில் உருவாகிறது.
இந்தப் படம் அட்லீயின் 6ஆவது படமாகவும் அல்லு அர்ஜுனின் 22ஆவது படமாகவும் உருவாகிறது.
படத்தின் கதை விஎஃப்எக்ஸ் காட்சிகளால் நிறைந்துள்ளதால் ஹாலிவுட்டின் பிரபல விஎஃப்எக்ஸ் நிறுவனங்களிடம் அதற்கான பணிகளை அட்லி ஒப்படைத்திருக்கிறார்
இதில், ரஷ்மிகா மந்தனா, கீர்த்தி சுரேஷ், சமந்தா எனப் பலர் இருப்பார்கள் என வதந்திகள் வந்துகொண்டிருந்த நிலையில் நடிகை தீபிகா படுகோன் படத்தில் இணைந்திருப்பதை படக்குழு உறுதி செய்துள்ளது.
இந்நிலையில், இளம் இசையமைப்பாளர் சாய் அபயங்கருடன் அட்லி விடியோ காலில் பேசியது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றன.
ஒரு படம்கூட வெளியாகாத நிலையில் இவ்வளவு பெரிய வாய்ப்பு கிடைத்துள்ளதா என ரசிகர்கள் சமூக ஊடகங்களில் பேசத் தொடங்கிவிட்டார்கள்.
20-வயதான சாய் அபயங்கர் என்கிற இசையமைப்பாளர், ‘கட்சி சேர’, ‘ஆச கூட’ ஆல்பம் பாடல்களால் கவனம் ஈர்க்கப்பட்டார்.
லோகேஷ் கனகராஜின் தயாரிப்பில் பென்ஸ், சூர்யா - 45, பிரதீப் ரங்கநாதன் படம் என அடுத்தடுத்து மூன்று படங்களில் ஒப்பந்தமாகி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளார்.
இந்தாண்டில் அமேசான் மியூசிக்கில் அதிகம் கேட்கப்பட்ட 3 இசையமைப்பாளர்களில் ரஹ்மான், அனிருத்துடன் அபயங்கரும் இடம்பிடித்து அசத்தியுள்ளார். இதனால், அனிருத்துக்கு அடுத்த இடத்தை சாய் அபயங்கர் பிடிக்கலாம் என்றே பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சாய் அபயங்கர் பிரபல பின்னணி பாடகர்கள் திப்பு மற்றும் ஹரிணியின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.