அண்டார்டிகாவில் எண்ணெய் வளம்! ரஷியா ஆராய்ச்சியால் சர்வதேச மோதல் நிகழுமா?
உலகளவில் பல்வேறு நாடுகளிக்கிடையே பல்வேறு விதமான பிரச்னைகளால் மோதல் நிகழ்ந்து வருகிறது. இந்த நிலையில், அண்டார்டிகாவில் எண்ணெய் வளம் இருப்பதாக ரஷியாவின் ஆராய்ச்சியால், சர்வதேச அளவில் மோதல் உண்டாகுமா என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது.
அண்டார்டிகாவின் வெட்டெல் கடலில் எண்ணெய் வளம் இருப்பதை ரஷிய ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். எண்ணெய் இருப்பதாக ஆய்வு செய்யப்பட்ட பிரிட்டிஷ் பகுதியில் சுமார் 500 பில்லியனுக்கும் மேற்பட்ட பீப்பாய்கள் அளவில் எண்ணெய் வளம் இருக்கலாம் என்று ஆராய்ச்சிகள் கூறுகின்றனர். சௌதி அரேபியாவில் கண்டறியப்பட்ட எண்ணெய் இருப்புகளைவிட இரண்டு மடங்கு அதிகம்.
1959, அண்டார்டிகா ஒப்பந்தத்தின்படி, அண்டார்டிகா அறிவியல் ஆராய்ச்சிக்கான இடமேதவிர, அங்கு ராணுவ நடவடிக்கைகளோ வளங்களைச் சுரண்டுதலோ கூடாது என்று மேற்கொள்ளப்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் அமெரிக்கா, இங்கிலாந்து முதலிய நாடுகளும் கையெழுத்திட்ட நிலையில், அறிவியல் ஆராய்ச்சி என்ற பெயரில் ஒப்பந்தத்தை ரஷியா மீறுவதாகக் கூறப்படுகிறது.
இருப்பினும், இந்தக் குற்றச்சாட்டை மறுத்ததுடன், அண்டார்டிகா ஒப்பந்தத்துடன் ஒத்துப்போவதாகக் கூறிய ரஷியா, மேற்கொள்ளப்படும் ஆராய்ச்சியானது அறிவியல்பூர்வமானது என்றும், எண்ணெய் வளங்களைச் சுரண்டுவதற்கானது அல்ல என்றும் கூறியது.
எரிசக்தி வளங்களுக்காகவும் போர்கள் இதுவரையில் நடைபெற்றுள்ள நிலையில், இனியும் அதுபோன்று ஒரு போர் நடக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளதாக சமூக ஊடகங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர்.