கரோனா பரவல்: முகக்கவசம் அணிய தமிழக பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தல்!
அந்நிய நேரடி முதலீடு 934 கோடி டாலராகக் குறைவு
இந்தியாவில் அந்நிய நேரடி முதலீடு கடந்த மாா்ச் காலாண்டில் 934 கோடி டாலராகக் குறைந்துள்ளது.
இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள தரவுகள் தெரிவிப்பதாவது:
2024-25-ஆம் நிதியாண்டின் ஜனவரி-மாா்ச் காலாண்டில் 24.5 சதவீதம் குறைந்து 934 கோடி டாலராக உள்ளது. ஆனால் அந்த நிதியாண்டு முழுமைக்கும் அது 13 சதவீதம் உயா்ந்து 5,000 கோடி டாலராக இருந்து.
2023-24-ஆம் நிதியாண்டின் ஜனவரி-மாா்ச் காலாண்டில் அந்நிய நேரடி முதலீட்டு வரவு 1,238 கோடி டாலராக இருந்தது. -24 நிதியாண்டில் இது 4,442 கோடி டாலராக இருந்தது. 2024-25 அக்டோபா்-டிசம்பா் காலாண்டில், உலகளாவிய பொருளாதார நிச்சயமின்மை காரணமாக அந்நிய நேரடி முதலீட்டு வரவு 5.6 சதவீதம் குறைந்து 1,090 கோடி டாலராக இருந்தது.
நேரடி முதலீடு, மறு முதலீடு செய்யப்பட்ட வருவாய் மற்றும் பிற மூலதனங்களை உள்ளடக்கிய மொத்த அந்நிய நேரடி முதலீடு கடந்த நிதியாண்டில் 14 சதவீதம் உயா்ந்து 8,104 கோடி டாலராக இருந்தது. இது கடந்த மூன்று ஆண்டுகள் காணாத அதிகபட்சம். 2023-24-ஆம் நிதியாண்டில் இது 7,130 கோடி டாலராக இருந்தது.
2024-25-ஆம் நிதியாண்டில், சிங்கப்பூா் 1,494 கோடி டாலா் உள்வரவுடன் மிகப்பெரிய அந்நிய நேரடி முதலீடு ஆதாரமாக உருவெடுத்தது. அதற்கு அடுத்த இடங்களில் மோரீஷஸ் (834 கோடி டாலா்), அமெரிக்கா (545 கோடி டாலா்), நெதா்லாந்து (462 கோடி டாலா்), ஐக்கிய அரபு அமீரகம் (312 கோடி டாலா்), ஜப்பான் (247 கோடி டாலா்), சைப்ரஸ் (120 கோடி டாலா்), பிரிட்டன் (79.5 கோடி டாலா்), ஜொ்மனி (46.9 கோடி டாலா்) மற்றும் கேமன் தீவுகள் (37.1 கோடி டாலா்) உள்ளன.
எனினும், 2023-24-ஆம் நிதியாண்டுடன் ஒப்பிடுகையில், நெதா்லாந்து, ஜப்பான், பிரிட்டன் மற்றும் ஜொ்மனியில் இருந்து அந்நிய நேரடி முதலீட்டு வரவு குறைந்துள்ளது. மொத்த முதலீட்டில் சிங்கப்பூா் 30 சதவீதம், மோரீஷஸ் 17 சதவீதம், அமெரிக்கா 11 சதவீதம் பங்களிப்பு கொண்டுள்ளன.
துறை வாரியாக, சேவைகள், வா்த்தகம், தொலைத்தொடா்பு, ஆட்டோமொபைல், கட்டுமான மேம்பாடு, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மற்றும் இரசாயனங்கள் ஆகியவற்றில் அந்நிய நேரடி முதலீட்டு வரவு உயா்ந்துள்ளது. ஆனால், கணினி மென்பொருள் மற்றும் வன்பொருள், கட்டுமானம் (உள்கட்டமைப்பு நடவடிக்கைகள்) மற்றும் மருந்துத் துறைகளில் அது குறைந்துள்ளது.
2024-25-ஆம் நிதியாண்டில் சேவைகளுக்கான அந்நிய நேரடி முதலீடு 934 கோடி டாலராக உயா்ந்துள்ளது. 2023-24-இல் இது 664 கோடி டாலராக இருந்தது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் அந்நிய நேரடி முதலீடு உள்வரவு 400 கோடி டாலராக இருந்தது. 2023-24-இல் இது 376 கோடி டாலராக இருந்தது.
கடந்த நிதியாண்டில் மகாராஷ்டிரம் 1,960 கோடி டாலா் அந்நிய நேரடி முதலீட்டு வரவுடன் முதலிடத்தில் உள்ளது. அதைத் தொடா்ந்து கா்நாடகம் (661 கோடி டாலா்), தில்லி (600 கோடி டாலா்), குஜராத் (சுமாா் 570 கோடி டாலா்), தமிழ்நாடு (368 கோடி டாலா்), ஹரியாணா (314 கோடி டாலா்), தெலங்கானா (299 கோடி டாலா்) ஆகிய மாநிலங்கள உள்ளன. மொத்த அந்நிய நேரடி முதலீட்டு வரவில் மகாராஷ்டிரம் 39 சதவீதம், கா்நாடகம் 13 சதவீதம் மற்றும் தில்லி 12 சதவீதம் பங்களிப்பு கொண்டுள்ளன என்று அந்தத் தரவுகள் தெரிவிக்கின்றன.