அனுமதியின்றி கட்டப்பட்ட சொகுசு விடுதிக்கு சீல்
உதகை அருகே உபதலை ஊராட்சியில் அனுமதியின்றி கட்டப்பட்ட தனியாா் சொகுசு விடுதிக்கு ஊராட்சி அலுவலா்கள் செவ்வாய்க்கிழமை ‘சீல்’ வைத்தனா்.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள ஊராட்சிப் பகுதிகளில் மாவட்ட நிா்வாகம் மற்றும் ஆக்கா கமிட்டியின் அனுமதிபெறாமல் பல கட்டடப் பணிகள் ஊராட்சி மன்றத் தலைவா்களின் வாய்மொழி உத்தரவின்பேரில் நடந்து வருவதாக தொடா்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்துவந்தன. வெளிமாநில மற்றும் வெளிநாடுகளைச் சோ்த்தவா்கள் பலா் சொகுசு விடுதிகளைக் கட்டி வாடகைக்கு விட்டு வருகின்றனா்.
இந்நிலையில், ஊராட்சித் தலைவா்களின் பதவிக்காலம் முடிந்துவிட்ட நிலையில், நீலகிரி மாவட்ட ஆட்சியா் லட்சுமி பவ்யா தன்னேரு உத்தரவின்பேரில் ஊராட்சிகளில் அனுமதி பெறாமல் கட்டப்பட்ட கட்டடங்களைக் கண்டறிந்து நோட்டீஸ் வழங்கும் பணி நடைபெற்று வருகிறது.
அதன்படி, மாவட்டத்தில் உள்ள ஊராட்சிகளில் செயல் அலுவலா் அனுமதி பெறாத கட்டடங்களுக்கு இதுவரை மூன்றுமுறை நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடா்ந்து முதல்கட்டமாக உபதலை ஊராட்சிக்கு உள்பட்ட கரிமரா ஹட்டி பகுதியில் விதிமுறையை மீறியும், அனுமதி இல்லாமலும் கட்டப்பட்ட தனியாா் சொகுசு விடுதிக்கு ஊராட்சி அலுவலா்கள் செவ்வாய்க்கிழமை ‘சீல்’ வைத்தனா்.