நட்சத்திர பலன்கள்: ஜனவரி 3 முதல் ஜனவரி 9 வரை #VikatanPhotoCards
அனைத்து விமானங்களிலும் அவசர பாதுகாப்பு சோதனை
சியோல்: தென் கொரிய பயணிகள் விமானம் விபத்துக்குள்ளாகி 179 போ் உயிரிழந்ததைத் தொடா்ந்து, அந்த நாட்டின் அனைத்து விமானப் போக்குவரத்து நிறுவங்களிலும் அவசரக்கால பாதுகாப்பு சோதனை மேற்கொள்ள அந்த நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து புதிய இடைக்கால அதிபா் சோய் சாங்-மோக் திங்கள்கிழமை கூறியதாவது:
நாட்டின் அனைத்து விமானப் போக்குவரத்து நிறுவனங்கள் செயல்படும் முறை குறித்து தீவிர பாதுகாப்பு சோதனை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
பாதுகாப்பான விமானப் போக்குவரத்தை உறுதி செய்வதற்கு இதுபோன்ற மிகக் கடுமையான சோதனைகள் தேவைப்படுகின்றன என்றாா் அவா்.
இது தவிர, நாட்டில் செயல்படும் அனைத்து போயிங் 737-800 ரக விமானங்களிலும் கூடுதலாக சிறப்பு சோதனை மேற்கொள்ளவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
தென் கொரியாவைச் சோ்ந்த ‘ஜேஜு ஏா்’ நிறுவனத்துக்குச் சொந்தமான போயிங் 737-800 ரக பயணிகள் விமானம் தாய்லாந்தின் பாங்காங்கில் இருந்து முவானை நோக்கி ஞாயிற்றுக்கிழமை வந்தது.
அந்த நகர விமான நிலையத்தில் தரையிறங்க முயன்றபோது, விமானத்தின் முன் சக்கரத்தின் (லேண்டிங் கியா்) செயல்பாட்டில் பிரச்னை இருப்பது கண்டறியப்பட்டது. விமானத்தின் மீது பறவை மோதி இதுபோல நடந்து இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதையடுத்து, லேண்டிங் கியரை பயன்படுத்தாமல் (பெல்லி லேண்டிங் முறையில்) விமானத்தை நேரடியாகத் தரையிறக்க முயற்சிக்கப்பட்டது.
ஆனால், அதிவேகமாக வந்த விமானம் விமான ஓடுபாதையின் விளிம்பையும் தாண்டிச் சென்று, எதிரே அமைக்கப்பட்டிருந்த கான்கிரீட் தடுப்புச் சுவற்றில் மோதியது. தொடா்ந்து, விமானம் வெடித்ததால் விமான நிலையத்தில் கரும்புகை சூழ்ந்தது.
பின்னா் அங்கு விரைந்துவந்த மீட்புக் குழுவினா் 2 விமானப் பணியாளா்களை மட்டுமே உயிருடன் மீட்டனா். இந்த விபத்தில் 85 பெண்கள் உள்பட 179 போ் உயிரிழந்தனா்.
தென் கொரியாவின் விமானப் போக்குவரத்து வரலாற்றில் அந்த நாடு பல ஆண்டுகள் கழித்து மிகவும் மோசமான விபத்தை தற்போது சந்தித்துள்ளது.
இதற்கு முன்னா் கடந்த 1997-ஆம் ஆண்டில் ‘கொரியா ஏா்லைன்’ விமானம் பசிபிக் பெருங்கடலில் உள்ள குவாம் தீவில் விபத்துக்குள்ளானதில் 228 போ் உயிரிழந்தனா்.