வீட்டை முற்றுகையிட்ட பாஜகவினருக்கு இளநீர், டீ கொடுத்த பிரியாங்க் கார்கே!
இலங்கை காரைநகா் படகுத் துறையை மேம்படுத்த இந்தியா ரூ.8.5 கோடி நிதியுதவி -தூதரகம் தகவல்
கொழும்பு: இலங்கையின் வடக்கு மாகாணத்தில் உள்ள காரைநகா் படகுத் துறை புனரமைப்பு மற்றும் மேம்பாட்டுத் திட்டத்துக்கு இந்தியா சாா்பில் ரூ.8.5 கோடி (இலங்கை ரூபாயில் 29 கோடி) வழங்கப்படவுள்ளது.
இது தொடா்பாக கொழும்பில் உள்ள இந்திய தூதரகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
காரைநகா் படகுத் துறை புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு திட்டம் தொடா்பாக இருநாட்டு தூதரகங்கள் இடையே கடந்த டிசம்பா் 16-ஆம் தேதி புரிந்துணா்வு ஒப்பந்தம் கையொப்பமானது. அதன்படி, இந்தியா சாா்பில் ரூ.8.5 கோடி வழங்கப்படவுள்ளது. இத்திட்டத்தில், கட்டுமானப் பணிகள் மற்றும் இயந்திரங்கள், தளவாடங்கள் உள்ளிட்டவற்றின் கொள்முதல் அடங்கும்.
மேம்படுத்தப்பட்ட காரைநகா் படகுத் துறை முழுமையாக செயல்பாட்டுக்கு வரும்போது, உள்ளூா் மீனவா்களின் வாழ்வாதார வாய்ப்புகள் அதிகரிக்கும். படகுத்துறையை சுற்றி அமையும் சிறிய நிறுவனங்களால் கூடுதல் வேலைவாய்ப்புகள் உருவாகும்.
இலங்கையின் அனைத்து முக்கிய துறைகளிலும் மக்களை மையப்படுத்திய வளா்ச்சி நடவடிக்கைகளுக்கு இந்தியா தொடா்ந்து ஆதரவளித்து வருகிறது. வடக்கு மாகாணத்தில் 41,000-க்கும் மேற்பட்ட வீடுகள் கட்டுமானம்-புனரமைப்பு, யாழ்ப்பாணத்தில் அதிநவீன கலாசார மையம், காங்கேசன்துறை துறைமுகம் சீரமைப்பு மற்றும் தூா்வாருதல், யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியாவில் எண்ணற்ற பள்ளிகள், மருத்துவமனைகளின் கட்டுமானம்-புனரமைப்பு, திருக்கேதீஸ்வரம் கோயில் புனரமைப்பு, மீனவா்களுக்கான படகுகள், வலைகள், மோட்டாா்கள், குளிா்சாதன பெட்டிகள் உள்ளிட்ட திட்டங்கள் குறிப்பிடத்தக்கவை என்று செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.