வீட்டிற்குள் நுழைந்த திருடர்கள்; வெளிநாட்டில் இருந்தபடியே கொள்ளையை முறியடித்த நபர்; என்ன நடந்தது?
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே கோட்டார் பகுதியைச் சேர்ந்தவர் சலீம். இவர் மஸ்கட் நாட்டில் வேலை செய்து வருகிறார். இவரது வீடு கோட்டார் ரஹமத் கார்டன் பகுதியில் அமைந்துள்ளது. வெளிநாட்டில் வேலை பார்ப்பதால் வீட்டைப் பூட்டிவிட்டுச் சென்றுள்ளார். மேலும், வீட்டுக்கு உள்ளேயும், வெளியைவும் முழுவதும் சி.சி.டி.வி கேமராக்கள் பொருத்தி இண்டெர்நெட் உதவியுடன் தனது செல்போனில் கண்காணித்து வந்துள்ளார் சலீம்.
இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாததைச் சாதகமாகப் பயன்படுத்தி நேற்று முன்தினம் (ஜனவரி 1) நள்ளிரவு வீட்டின் முன்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்ம நபர்கள் இரண்டு பேர் வீட்டில் உள்ள அறைகளின் கதவுகளை ஒன்றொன்றாக உடைத்துள்ளனர். ஒரு கம்பியை வைத்து பீரோவை உடைக்க முயன்றனர். வெளிநாட்டிலிருந்த சலீம் வழக்கம்போல தனது மொபைல் போனில் வீட்டின் சி.சி.டி.வி கட்சிகளை லைவ்வாக பார்த்துள்ளார். அப்போது வீட்டின் உள்ளே இரண்டு நபர்கள் கொள்ளையடித்துக் கொண்டிருந்ததைக் கவனித்தவர் அதிர்ச்சி அடைந்தார். அந்த நபர்கள் வீட்டின் வெளியிலிருந்த கேமராவை உடைப்பதும் தெரியவந்தது.
இதனை அடுத்து துரிதமாகச் செயல்பட்டு கோட்டாரில் உள்ள தனது வீட்டின் பக்கத்து வீட்டினரை செல்போனில் தொடர்புகொண்டு தனது வீட்டில் திருடன் இருப்பதைத் தெரியப்படுத்தி உள்ளார். உடனடியாகப் பக்கத்து வீட்டினர் தங்கள் வீட்டிலிருந்து வெளியே வந்து, "திருடன்.. திருடன்.." எனக் கூச்சலிட்டனர்.
மேலும், டார்ச் லைட்டை வீட்டின் ஜன்னல் கண்ணாடிகளில் அடித்தனர். இதனால் வீட்டுக்குள்ளும் வெளிச்சம் பரவியது. வீட்டுக்குள் திருட நுழைந்த விவரம் அக்கம்பக்கத்தினருக்குத் தெரிந்துவிட்டது என்பதை உணர்ந்த திருடர்கள், பதறி அடித்துக்கொண்டு வீட்டின் முன்பக்கம் ஓடினர். அங்கிருந்துதான் சத்தம் வருகிறது என்பதை உணர்ந்த திருடர்கள் வீட்டின் பின்பக்க வாசல் வழியாகத் தப்பித்து ஓடினர்.
இது தொடர்பாக கோட்டார் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீட்டில் கொள்ளை முயற்சி நடந்ததை அடுத்து சலீம் வெளிநாட்டிலிருந்து வர உள்ளார். அதே சமயம் திருடர்கள் வேறு எதாவது எடுத்துச் சென்றார்களா என்பதும் அவர் வந்த பிறகே தெரியவரும் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. தொழில்நுட்ப உதவியுடன் வீட்டில் நடக்க இருந்த கொள்ளையை வெளிநாட்டிலிருந்து கண்காணித்து முறியடித்த சலீமின் செயல் சமூக வலைத்தளங்களில் பாராட்டைப் பெற்றுள்ளது.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...