பிரியங்கா காந்தியின் கன்னங்களைப் போன்ற சாலை அமைப்பேன்: பாஜக வேட்பாளர் சர்ச்சை பே...
Doctor Vikatan: `பசங்களுக்கு அதெல்லாம் தேவையில்லை' - skin care என்பது பெண்களுக்கு மட்டும்தானா?
Doctor Vikatan: எனக்கு டீன் ஏஜில் மகனும் மகளும் இருக்கிறார்கள். மகள், அநியாயத்துக்கு அழகு விஷயத்தில் அக்கறை செலுத்துகிறாள். அவளுக்கு நேரெதிராக மகன், அதைக் கண்டுகொள்வதே இல்லை. முகம் கழுவக்கூட சோம்பேறித்தனமாக இருக்கிறான். அடிப்படை சருமப் பராமரிப்பு விஷயங்களையாவது பின்பற்றச் சொன்னால், 'பசங்களுக்கு அதெல்லாம் அவசியமே இல்லை... பொண்ணுங்களுக்குத்தான் தேவை...' என்கிறான். பெரும்பாலான ஆண் பிள்ளைகளுக்கு இத்தகைய மனநிலை இருப்பதைப் பார்க்கிறோம். உண்மையிலேயே சருமம் மற்றும் கூந்தல் பராமரிப்பு என்பது பெண்களுக்கு மட்டும்தான் அவசியமா... ஆண்களுக்குத் தேவையில்லையா?
பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த சருமநல மருத்துவர் பூர்ணிமா
அப்படியெல்லாம் இல்லை. சருமம் மற்றும் கூந்தல் பராமரிப்பு என்பது பெண்கள், ஆண்கள், குழந்தைகள் என எல்லோருக்குமே அவசியம்தான். பெண்கள் அளவுக்கு ஆண்களுக்கு அதிகபட்ச கவனம் தேவையில்லை. அடிப்படை விஷயங்களைப் பின்பற்றினாலே போதுமானதாக இருக்கும். அதாவது, ஆண்களுக்கான சருமம் மற்றும் கூந்தல் பராமரிப்பு (skin care and hair care) என்பது ரொம்பவே எளிமையானது.
அடிப்படையாக மூன்று விஷயங்களில் அவர்கள் கவனம் செலுத்தினாலே போதுமானது. அந்த வகையில், முதலில் கிளென்சர் பயன்படுத்த வேண்டும். எண்ணெய்ப் பசையான சருமம் உள்ளவர்கள் என்றால் சாலிசிலிக் அமிலமோ (Salicylic acid), லாக்டிக் அமிலமோ (Lactic acid), மாண்டெலிக் அமிலமோ (Mandelic acid) உள்ள கிளென்சராக தேர்வு செய்யலாம். அடுத்து சன் ஸ்கிரீன் உபயோகிக்க வேண்டும். இதைத் தேர்வுசெய்யும்போது மாய்ஸ்ச்சரைசர் உள்ளதாகப் பார்த்து வாங்க வேண்டும். நிறைய பேர் மாய்ஸ்ச்சரைசில் சன் ஸ்கிரீன் உள்ளதைத் தேர்வு செய்வார்கள். அது தவறு. எஸ்பிஎஃப் (SPF) 30 முதல் 50 அளவுள்ள மாய்ஸ்ச்சரைசர் சிறந்தது. அதே போல 'நான் காமிடோஜெனிக்' (Non-comedogenic ) என குறிப்பிடப்பட்டுள்ளதைத் தேர்வு செய்ய வேண்டும். அது சரும துவாரங்களை அடைக்காமலும், பருக்களை ஏற்படுத்தாமலும் இருக்கும். பகல் பொழுதுக்கு இந்த இரண்டும் போதும்.
இரவு, மீண்டும் முகத்தை கிளென்ஸ் செய்ய வேண்டும். 30 வயதுக்கு மேலான ஆண்கள், ஆன்டி ஏஜிங் எஃபெக்ட் வேண்டுமென்றால் ரெட்டினால் கலந்த க்ரீம் பயன்படுத்தலாம். பருக்கள், பிக்மென்ட்டேஷன் எனப்படும் மங்கு பிரச்னை இருந்தால் சரும மருத்துவரை அணுகி, அதற்கேற்ற தயாரிப்புகளை உபயோகிக்கலாம். ஷேவிங்கை பொறுத்தவரை ரிவர்ஸ் ஷேவ் செய்யாமல், ட்ரிம் செய்வது சிறந்தது. வாரத்தில் 3 முதல் 4 நாள்கள் தலைக்குக் குளிக்க வேண்டும். இரண்டு நாள்களாவது பொடுகு நீக்கும் ஆன்டி டாண்டிராஃப் (Anti-dandruff) ஷாம்பூ உபயோகிக்க வேண்டியதும் அவசியம். ஆண்களைப் பொறுத்தவரை இந்த விஷயங்களை ரெகுலராக செய்து வந்தாலே போதும்.
உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்து கொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.