புஷ்பா 2 விவகாரம்: நடிகர் அல்லு அர்ஜுன் காவல் நிலையில் ஆஜர்!
கோவையில் கேஸ் சிலிண்டர் டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்து: பள்ளிகளுக்கு விடுமுறை
கோவை: கோவை உப்பிலிபாளையம் மேம்பாலத்தில் எல்பிஜி எரிவாயு ஏற்றி வந்த டேங்கர் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதையடுத்து சம்பவ இடத்தில் இருந்து 500 மீட்டர் தொலைவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
கேரளம் மாநிலம், கொச்சியில் இருந்து எல்பிஜி எரிவாயு ஏற்றி வந்த பாரத் டேங்கர் லாரி வெள்ளிக்கிழமை அதிகாலை கோவை உப்பிலிபாளையம் மேம்பாலத்தின் மீது ஏறி காந்திபுரம் நோக்கி திரும்பும் போது ஆக்சில் துண்டாகி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் டேங்கர் லாரியில் இருந்து டேங்கர் மட்டும் கழன்று விழுந்ததில் சேதம் ஏற்பட்டு எரிவாயு கசிந்தது.
இதையடுத்து லாரியில் இருந்தவர்கள் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் நான்கு மணி நேரத்திற்கு மேலாக எரிவாயு கசிவை தடுக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தீயணைப்புத் துறையினர் தொடர்ந்து லாரி மீது தண்ணீரை பீய்ச்சி அடித்து முன்னெச்சரிக்கை பணிகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.
இதையும் படிக்க | நிலத்தடி நீரில் நைட்ரேட் மாசு: தமிழகம் உள்பட 4 மாநிலங்கள் கடும் பாதிப்பு!
போக்குவரத்து மாற்றம்
காவல்துறையினர் மேம்பாலத்தில் போக்குவரத்திற்கு தடை செய்து போக்குவரத்தை மாற்று பாதையில் திருப்பி விட்டுள்ளனர். இந்தப் பணிகள் முடிவதற்கு கூடுதல் நேரமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், எரிவாயு முழுவதும் வெளியேற்றபட்டாலோ அல்லது முழுவதும் தண்ணீரில் கலக்கப்பட்டால் பெரும் விபத்து தவிர்க்கப்படும் என கூறப்படுகிறது.
பள்ளிகளுக்கு விடுமுறை
இந்த நிலையில், விபத்துக்குள்ளான டேங்கர் லாரியில் இருந்து எரிவாயு தொடர்ந்து வெளியேறி வருவதால் பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 500 மீட்டர் தொலைவில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் வெள்ளிக்கிழமை(ஜன.3)விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சம்பவ இடத்திற்கு வந்துள்ள காவல்துறை உயர் அதிகாரிகள் மற்றும் எரிவாயு நிறுவன பொறியாளர்கள் பலரும் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
அதிகாலையில் நடந்த இந்த விபத்தால் நல்வாய்ப்பாக பெரும் சேதம் தவிர்க்கப்பட்டுள்ள நிலையில் விபத்துக்குள்ளான டேங்கரை அப்புறப்படுத்துவதற்காக கிரேன் போன்ற வாகனங்களும் கொண்டுவரப்பட்டுள்ளது.