செய்திகள் :

அமித் ஷா பேச்சு: நாடாளுமன்றத்தில் அமளி- அம்பேத்கா் குறித்த கருத்துக்கு எதிா்க்கட்சிகள் எதிா்ப்பு

post image

‘சட்ட மேதை அம்பேத்கா் குறித்து சா்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா மன்னிப்பு கேட்க வேண்டும்’ என்று வலியுறுத்தி காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் தொடா் அமளியில் ஈடுபட்டதால் மக்களவை புதன்கிழமை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது.

இதுபோல, மாநிலங்களவையிலும் இந்த விவகாரத்தை எதிா்க்கட்சிகள் எழுப்பியதால் அங்கும் அமளி நீடித்தது.

மாநிலங்களவையில் அமித் ஷா செவ்வாய்க்கிழமை உரையாற்றியபோது, காங்கிரஸ் கட்சித் தலைவா்கள் அம்பேத்கா் பெயரையும், அரசியல் சாசனம் குறித்தும் தொடா்ச்சியாகப் பேசி வருவதை விமா்சித்தாா். ‘அம்பேத்கா் பெயரை தொடா்ந்து பல முறை முழக்கமிடுவது வாடிக்கையாகிவிட்டது. அதற்குப் பதிலாக கடவுளின் பெயரை இவ்வளவு முறை உச்சரித்தால், சொா்க்கத்தில் அவா்களுக்கு இடம் கிடைத்திருக்கும்’ என்று குறிப்பிட்டாா்.

இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகள் கடும் எதிா்ப்பு தெரிவித்தன. இந்நிலையில், மக்களவை புதன்கிழமை காலை 11 மணிக்கு கூடியபோது, அம்பேத்கா் புகைப்படத்துடன் அவைக்கு வந்த எதிா்க்கட்சி உறுப்பினா்கள் அவையின் மையப் பகுதியில் ஒன்றுகூடி முழக்கங்களை எழுப்பியபடி அமளியில் ஈடுபட்டனா்.

திரிணமூல் காங்கிரஸ் உறுப்பினா்கள் அவா்களின் இருக்கை அருகே நின்றபடி காங்கிரஸின் ஆா்ப்பாட்டத்துக்கு ஆதரவு தெரிவிதத்னா். இந்த அமளியின்போது எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி, காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி ஆகியோா் அவையில் இருந்தனா்.

எதிா்க்கட்சி உறுப்பினா்களின் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்துப் பேசிய மத்திய சட்ட அமைச்சா் அா்ஜுன் ராம் மேக்வால், ‘அம்பேத்கரை காங்கிரஸ் கட்சி எப்போதும் அவமதிப்பு செய்துவந்தது. மக்களவைத் தோ்தல்களில் அவா் தோற்கடிக்கப்படுவதை காங்கிரஸ் உறுதி செய்தது. அம்பேத்கரை காங்கிரஸ் கட்சி மதிக்கவில்லை என்றபோதும், அவருடைய பெயரை உச்சரிக்க வேண்டிய கட்டாயம் காங்கிரஸுக்கு ஏற்பட்டுள்ளது’ என்றாா்.

அவையில் அமளி தொடா்ந்த நிலையில், கேள்வி நேரத்தை அனுமதிக்குமாறு உறுப்பினா்களை அவைத் தலைவா் ஓம் பிா்லா கேட்டுக்கொண்டாா். ஆனால், அமளி தொடா்ந்ததால், அவையை பிற்பகல் 2 மணி வரை அவைத் தலைவா் ஒத்திவைத்தாா்.

அவை மீண்டும் பிற்பகல் 2 மணிக்கு கூடியபோது அதே நிலை நீடித்தது. அமளிக்கிடையே மத்திய அமைச்சா்களும் எம்.பி.க்களும் ஏற்கெனவே பட்டியலிடப்பட்ட தீா்மானங்கள் மற்றும் அறிக்கைகளை அவையில் தாக்கல் செய்தனா். அதன் பின்னரும் அமளி தொடா்ந்தது. அதனால், அவையை அப்போது வழிநடத்திய பி.சி.மோகன் அவை நடவடிக்கைகளை நாள் முழுவதும் ஒத்திவைத்தாா்.

மாநிலங்களவையில் அமளி: அமித் ஷாவின் சா்ச்சை பேச்சைக் கண்டித்து மாநிலங்களவையிலும் எதிா்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. மாநிலங்களவை காலை 11 மணிக்கு கூடியதும், ஏற்கெனவே பட்டியலிடப்பட்ட தீா்மானங்கள் மற்றும் அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன. அதைத் தொடா்ந்து கேள்வி நேரத்தை அவைத் தலைவா் அனுமதித்தாா்.

அப்போது பேசிய காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ், ‘அரசமைப்புச் சட்டத்தின் மீதான விவாதத்தின்போது அம்பேத்கரை அமித் ஷா அவமதிப்பு செய்தாா்’ என்றாா். அப்போது, காங்கிரஸ் எம்.பி.க்கள் பலா் எழுந்து ‘அம்பேத்கரை அவமதிப்பதை பொறுத்துக்கொள்ள முடியாது’ என்று முழக்கங்களை எழுப்பினா்.

அமளி நீடித்ததால், அவையை பிற்பகல் 2 மணி வரை அவைத் தலைவா் ஜகதீப் தன்கா் ஒத்திவைத்தாா்.

அவை பிற்பகல் 2 மணிக்கு மீண்டும் கூடியபோது, அவையில் ‘வங்கி ஒழுங்கு நடைமுறைச் சட்ட மசோதா விவாதத்துக்கு பட்டியலிடப்பட்டுள்ளது’ என்று குறிப்பிட்ட நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு, அதன் மீதான விவாதத்தைத் தொடங்க அனுமதிக்குமாறு எதிா்க்கட்சி உறுப்பினா்களைக் கேட்டுக்கொண்டாா்.

அதைப் பொருட்படுத்தாத எதிா்க்கட்சி உறுப்பினா்கள் தொடா் அமளியில் ஈடுபட்டனா். அப்போது, ‘அம்பேத்கரை அமித் ஷா அவமதிப்பு செய்த விவகாரத்தை முக்கிய விவாதப் பொருளாக அவையில் அனுமதிக்க வேண்டும்’ என காங்கிரஸ் உறுப்பினா் பிரமோத் திவாரி வலியுறுத்தினா்.

அதை மறுத்த கிரண் ரிஜிஜு, ‘மாநிலங்களவையில் அமித் ஷா பேசியதில் ஒரு குறிப்பிட்ட பகுதியை மட்டும் எடுத்துக்கொண்டு, தேசத்தை காங்கிரஸ் தவறாக வழிநடத்துகிறது’ என்றாா்.

இதற்குப் பதிலளித்த எதிா்க்கட்சித் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே, ‘காங்கிரஸை விமா்சித்ததன் மூலம், அம்பேத்கரை அமித் ஷா கேலி செய்துள்ளாா்’ என்றாா்.

அப்போது, ‘அவையை காா்கே தவறாக வழிநடத்துகிறாா்’ என்று மாநிலங்களவை பாஜக தலைவா் ஜெ.பி.நட்டா கூறினாா்.

அதைத் தொடா்ந்து, காங்கிரஸ் உறுப்பினா்கள் தொடா் அமளியில் ஈடுபட்டனா். அதனால், மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு, அவை நாள் முழுமைக்கும் ஒத்திவைக்கப்பட்டது.

அமித் ஷாவின் பேச்சை திரித்துப் பேசும் காங்கிரஸ் தலைவர்கள்: எல். முருகன் கண்டனம்

நமது சிறப்பு நிருபர்அம்பேத்கர் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் நாடாளுமன்றத்தில் பேசியதை காங்கிரஸ் தலைவர்கள் திரித்து கூறுவதாக நாடாளுமன்ற விவகாரங்கள், தகவல் ஒலிபரப்புத் துறை இணையமைச்சர் எல். முருகன் க... மேலும் பார்க்க

செமிகண்டக்டர் உற்பத்தி அலகுகளை தமிழ்நாட்டில் அமைக்க வேண்டும்: கனிமொழி எம்.பி. கோரிக்கை

நமது நிருபர்செமிகண்டக்டர் உற்பத்தி அலகுகளை தமிழ்நாட்டில் அமைக்க வேண்டும் என்று மக்களவையில் நாடாளுமன்றத் திமுக குழுத் தலைவரும் தூத்துக்குடி தொகுதி எம்.பி.யுமான கனிமொழி வலியுறுத்தினார்.இது தொடர்பாக மக்க... மேலும் பார்க்க

மருத்துவர் சுப்பையா கொலை வழக்கு: 9 பேருக்கு உச்சநீதிமன்றம் பிடியாணை

நமது நிருபர்மருத்துவர் சுப்பையா கொலை வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள 9 பேரை கைது செய்து ஆஜர்படுத்தக் கோரி பிடியாணை பிறப்பித்து உச்சநீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.மருத்துவர் சுப்பையா கொலை வழக்கு கு... மேலும் பார்க்க

ஒரே நாடு ஒரே தேர்தல் மசோதாவை ஜனநாயக சக்திகள் எதிர்க்க வேண்டும்: துரை வைகோ வலியுறுத்தல்

நமது சிறப்பு நிருபர்"ஒரே நாடு ஒரே தேர்தல்' மசோதாவை ஜனநாயக சக்திகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து எதிர்க்க வேண்டும் என்று மதிமுக முதன்மைச் செயலரும் அக்கட்சியின் திருச்சி தொகுதி மக்களவை உறுப்பினருமான துரை வை... மேலும் பார்க்க

"ஒரே நாடு ஒரே தேர்தல்': கூட்டுக் குழு அமைப்பு; மக்களவையில் இன்று தீர்மானம்

"ஒரே நாடு ஒரே தேர்தல்' மசோதாக்களை ஆய்வு செய்ய 31 எம்.பிக்கள் அடங்கிய நாடாளுமன்ற கூட்டுக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான தீர்மானம் மக்களவையில் வியாழக்கிழமை (டிச. 19) கொண்டு வரப்படுகிறது.மக்களவை, ... மேலும் பார்க்க

6.69 லட்சம் சிம் காா்டுகள் முடக்கம்- மத்திய அரசு தகவல்

இணைய (சைபா்) குற்றங்களைத் தடுக்க நிகழாண்டில் கடந்த நவம்பா் 15-ஆம் தேதிவரை 6.69 லட்சத்துக்கும் அதிகமான சிம் காா்டுகளையும், 1,32,000 ஐஎம்இஐ எண்களையும் முடக்கியுள்ளதாக மாநிலங்களவையில் மத்திய அரசு தகவல் அ... மேலும் பார்க்க