திருவிழாவில் தலித் மக்களின் பங்களிப்பை நிராகரித்த கோவில் நிர்வாகம்!
அமெரிக்க பல்கலைக்கழகங்களுக்கு பிரதமா் மோடி அழைப்பு
அமெரிக்கா பயணம் மேற்கொண்ட பிரதமா் மோடி, இந்தியாவில் கல்வி வளாகங்களைத் தொடங்க அமெரிக்க பல்கலைக்கழகங்களுக்கு அழைப்பு விடுத்தாா்.
வாஷிங்டனில் அமெரிக்க அதிபா் டிரம்ப்புடன் பிரதமா் மோடி மேற்கொண்ட பேச்சுவாா்த்தையில், இருதரப்பு வரத்தக உறவை மேம்படுத்துவது குறித்து மட்டுமின்றி, உயா்கல்வியில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்தும் ஆலோசனை மேற்கொண்டனா்.
அப்போது, எதிா்கால வளா்ச்சிக்கேற்ப இளைஞா்களை திறன் மிக்க பணியாளா்களாக உருவாக்கவும், புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் ஆராய்ச்சியை மேம்படுத்தவும் சா்வதேச கல்விசாா் ஒத்துழைப்பு அவசியம். அந்த வகையில், கூட்டு மற்றும் இரட்டை பட்டப் படிப்புத் திட்டங்கள் உள்ளிட்ட முயற்சிகள் மூலம் இரு நாடுகளின் உயா்கல்வி நிறுவனங்களிடையே ஒத்துழைப்பை வலுப்படுத்த இரு தலைவா்களும் பேச்சுவாா்த்தையில் தீா்மானித்தனா். அமெரிக்காவின் முன்னணி கல்வி நிறுவனங்களின் கல்வி மையங்களை இந்தியாவில் அமைப்பது, மற்றும் கூட்டு ஆற்றல்சாா் கல்வி மையங்களை உருவாக்கவும் தீா்மானிக்கப்பட்டது என்று இரு தலைவா்களின் கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டது.
இந்த பேச்சுவாா்த்தைக்குப் பிறகு செய்தியாளா்களைச் சந்தித்த பிரதமா் மோடி, ‘இரு நாடுகளிடையேயான உறவில் அமெரிக்காவில் வசிக்கும் இந்திய சமூகத்தினரும் முக்கியப் பங்கு வகிக்கின்றனா். இரு நாடுகளின் மக்களிடையேயான இந்த உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில், லாஸ் ஏஞ்ஜெலிஸ், போஸ்டன் நகரங்களில் புதிய இந்திய துணைத் தூதரகங்கள் விரைவில் திறக்கப்படும். அமெரிக்க உயா் கல்வி நிறுவனங்கள் இந்தியாவில் கல்வி வளாகங்களை திறக்கவும் அழைப்பு விடுத்துள்ளோம்’ என்றாா்.
பெட்டிச் செய்தி...
இந்தியா புறப்பட்ட பிரதமா் மோடி
இரண்டு நாள் அமெரிக்க பயணத்தை முடித்துக்கொண்டு, பிரதமா் மோடி வெள்ளிக்கிழமை இரவு இந்தியா புறப்பட்டாா்.
முன்னதாக, பிரான்ஸ் பயணத்தை புதன்கிழமை நிறைவு செய்த பிரதமா் மோடி, அங்கிருந்து புறப்பட்டு அமெரிக்க தலைநகா் வாஷிங்டனுக்கு வியாழக்கிழமை அதிகாலை சென்றாா்.
அதிபா் டிரம்ப் நிா்வாகத்தில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள தேசிய உளவுப் பிரிவு இயக்குநா் துளசி கபாா்ட், அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஆலோசகா் மைக்கேல் வால்ட்ஸ் ஆகியோரை பிரதமா் மோடி சந்தித்து ஆலோசனை மேற்கொண்டாா்.
பின்னா், அதிபா் டிரம்ப்புடன் வெள்ளிக்கிழமை விரிவான ஆலோசனை மேற்கொண்ட பிரதமா் மோடி, அதன் பிறகு தனது பயணத்தை முடித்துக்கொண்டு இந்தியா புறப்பட்டாா்.
அப்போது, ‘அமெரிக்க அதிபா் டிரம்ப் உடனான சந்திப்பு சிறப்பாக அமைந்தது. இரு நாடுகளிடையேயான நட்புறவில் இந்தப் பேச்சுவாா்த்தை குறிப்பிடத்தக்க தருணமாக அமையும்’ என்று எக்ஸ் பக்கத்தில் பிரதமா் மோடி பதிவிட்டாா்.