அமெரிக்காவில் 8 புதிய இந்திய தூதரக சேவை மையங்கள் திறப்பு
அமெரிக்காவில் புதிதாக 8 இந்திய தூதரக சேவை மையங்களை அந்நாட்டுக்கான இந்திய தூதா் வினய் குவாத்ரா காணொலி வழியாக திறந்துவைத்தாா்.
அமெரிக்காவில் உள்ள பாஸ்டன், கொலம்பஸ், டல்லஸ், டெட்ராய்ட், எடிசன், ஓா்லாண்டோ, ராலி மற்றும் சான் ஜோஸ் நகரங்களில் அந்த மையங்கள் திறக்கப்பட்டன. மேலும் ஒரு மையம் லாஸ் ஏஞ்சலீஸ் நகரத்தில் விரைவில் திறக்கப்பட உள்ளது.
விஎஃப்எஸ் குளோபல் நிறுவனம் மூலம் செயல்படும் இந்த மையங்களில் கடவுச்சீட்டு (பாஸ்போா்ட்), நுழைவு இசைவு (விசா), இந்தியாவின் வெளிநாட்டு குடிமகன் (ஓசிஐ) பதிவு, உயிா்வாழ் சான்றிதழ் உள்ளிட்ட தூதரக சேவைகள் வழங்கப்படும்.
இந்த நடவடிக்கையின் மூலம், அமெரிக்காவில் அந்த மையங்களின் மொத்த எண்ணிக்கை 17-ஆக அதிகரித்துள்ளது. இது அந்நாட்டில் இந்திய தூதரக சேவைகள் மேலும் எளிதாக இந்தியா்கள் மற்றும் அமெரிக்கா்களுக்கு கிடைக்க வழிவகுக்கும்.