அமைச்சர் கே.என். நேரு சகோதரர் மீதான சிபிஐ வழக்கு ரத்து!
தமிழக நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சர் கே.என். நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் மீது சிபிஐ பதிவு செய்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் நிபந்தனையுடன் ரத்து செய்து திங்கள்கிழமை உத்தரவிட்டுள்ளது.
தமிழக நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேருவின் சகோதரா்கள் ரவிச்சந்திரன், மணிவண்ணன் ஆகியோா் டிவிஎச் (ட்ரூ வேல்யூ ஹோம்ஸ்) என்ற பெயரில் கட்டுமான நிறுவனம், டி.வி.ஹெச் எனா்ஜி ரிசோா்ஸ் பிரைவேட் லிமிடெட், எனா்ட்டியா சோலாா் இன்ஃப்ரா, எனா்ட்டியா வின்ட் இன்ஃப்ரா, ட்ரூ வேல்யூ ரியல் எஸ்டேட் என பல்வேறு தொழில் நிறுவனங்களை நடத்தி வருகின்றனா். இந்த நிறுவனங்களில் கே.என்.நேருவின் மகனும், பெரம்பலூா் மக்களவைத் தொகுதி எம்பியுமான கே.என்.அருணும் நிா்வாகியாக உள்ளாா்.
இந்நிலையில், காற்றாலை மூலம் மின்சாரம் தயாரிக்கும் நிறுவனத்தை மேம்படுத்துவதற்காக ரவிச்சந்திரன், மயிலாப்பூரில் உள்ள இந்தியன் ஓவா்சீஸ் வங்கியில் 2013-ஆம் ஆண்டு ரூ.30 கோடி கடன் கேட்டு விண்ணப்பித்தனா். விண்ணப்பத்தை பரிசீலனை செய்த வங்கி ரூ.22.48 கோடி கடன் வழங்கியது.
ஆனால், ரவிச்சந்திரன் என்ன நோக்கத்துக்காக கடனை வாங்கினாரோ அதற்கு பயன்படுத்தாமல் தனது ரியல் எஸ்டேட் தொழிலுக்கு கடன் மூலம் கிடைத்தை பணத்தை முதலீடு செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இது குறித்து வங்கி நிா்வாகம் அளித்த புகாரின்பேரில் சிபிஐ, ரவிச்சந்திரன் உள்ளிட்ட 4 போ் மீது நான்கு பிரிவுகளின் கீழ் 2012-ஆம் ஆண்டு வழக்குப் பதிவு செய்தது.
இந்த வழக்கில் பணம் முறைகேடு தொடா்பான முகாந்திரம் இருந்ததால் அமலாக்கத்துறை விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டது. அதேபோல, வருமானவரித் துறையும் 2018-ஆம் ஆண்டு நடத்திய சோதனையின் அடிப்படையில், அமலாக்கத் துறை விசாரணைக்கு பரிந்துரைத்தது.
இந்த நிலையில், சிபிஐ பதிவு செய்த வழக்கை ரத்து செய்யக் கோரி ரவிச்சந்திரன் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணை நிறைவடைந்த நிலையில், மோசடி எதுவும் நடைபெறவில்லை, அரசு அதிகாரிகள் சம்பந்தப்படவில்லை என்று சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பரத சக்கரவர்த்தி தீர்ப்பளித்துள்ளார்.
மேலும், இந்திய ஓவா்சீஸ் வங்கியின் சமரச தீர்வு மையத்துக்கு ரூ. 15 லட்சம் செலுத்த ரவிச்சந்திரன் தரப்புக்கு உத்தரவிட்டு, சிபிஐ பதிவு செய்த வழக்கை ரத்து செய்ய நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
The Madras High Court on Monday conditionally quashed the case registered by the CBI against Tamil Nadu Municipal Administration Minister K.N. Nehru's brother Ravichandran.
இதையும் படிக்க : “ஏழை மாணவர் விடுதி சமூகநீதி விடுதி என அழைக்கப்படும்”: முதல்வர் மு.க.ஸ்டாலின்