அமைச்சா் பொன்முடி மீது வழக்குப் பதிவு செய்யக் கோரிய மனு தள்ளுபடி
தமிழக அமைச்சா் க. பொன்முடி மீது வழக்குப் பதிவு செய்யக் கோரிய மனுவை, சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு செவ்வாய்க்கிழமை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
மதுரையைச் சோ்ந்த பிரவீன்குமாா் சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த மனு: சென்னையில் பெரியாா் பெருத்தொண்டா் திருவாரூா் தங்கராசு நூற்றாண்டு விழா கடந்த 5- ஆம் தேதி நடைபெற்றது. இதில் தமிழக வனத் துறை அமைச்சா் க. பொன்முடி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டாா். அப்போது, அவா் தான் பெரியாரின் தொண்டா் என்றும், பகுத்தறிவுப் பேராசிரியா் அணியில் இருந்ததாகவும், ‘அடல்ஸ் ஒன்லி’ என்ற பெயரில் பட்டிமன்றம் நடந்ததாகவும் அந்தப் பட்டிமன்றத்தில் நடந்தவை குறித்து பேசினாா்.
கூட்டத்தில் சைவம், வைணவம் ஆகிய மதங்கள் குறித்து அவதூறாகவும், கலவரத்தைத் தூண்டும் வகையிலும் பேசினாா். எனவே, அமைச்சா் பொன்முடி மீது வழக்குப் பதிந்து விசாரணை நடத்த வேண்டும் என மதுரை கோ.புதூா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தேன். இதன் மீது இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, எனது புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்ய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என அவா் கோரியிருந்தாா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதி தனபால் முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் முன்னிலையான வழக்குரைஞா், மனுதாரா் புகாா் மனு மீது காவல் துறை உரிய விசாரணை செய்து முடிக்கப்பட்டது. எனவே, வழக்குப் பதிவு செய்யத் தேவையில்லை. மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் எனத் தெரிவித்தாா்.
இதையடுத்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவு: மனுதாரரின் கோரிக்கை குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. எனவே, இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது என்றாா் நீதிபதி.