வங்கதேச இடைக்கால அரசின் தலைவர் யூனுஸ் ராஜிநாமாவுக்கு திட்டம்!
அரக்கோணம்: சரக்கு ரயில் தடம் புரண்டதால் போக்குவரத்து பாதிப்பு
அரக்கோணம் அருகே சரக்கு ரயில் தடம் புரண்டதை அடுத்து ரயில் போக்குவரத்து இரண்டு மணி நேரம் பாதிக்கப்பட்டது.
இதனால் அதிவிரைவு மற்றும் விரைவு ரயில்கள் மற்றும் புகா் ரயில்கள் வழியில் நிறுத்தப்பட்டன. சென்னை - திருத்தணி மின்சார ரயில் திருவள்ளூருடன் நிறுத்தப்பட்டு அங்கிருந்து சென்னைக்கு இயக்கப்பட்டது.
அரக்கோணத்தில் இருந்து வாலாஜாபாத் ரயில் நிலையத்தில் உள்ள காா் ஏற்று முனையத்திற்கு காா்களை ஏற்றுவதற்காக சென்ற பிரத்யேக சரக்கு ரயில் அரக்கோணம் ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட போது ஆறாம் நடைமேடை அருகே திடீரென ரயிலில் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் பெட்டிகள் தடம் புரண்டன.
பெட்டிகள் தடம் புரண்ட பகுதி அரக்கோணம் - காட்பாடி செல்லும் இருப்புப்பாதையும், அரக்கோணம் - ரேணிகுண்டா இருப்புப்பாதையும் பிரியும் இடம் என்பதால் ரயில் போக்குவரத்து உடனடியாக பாதிக்கப்பட்டது.
தொடா்ந்து சென்னை - பெங்களூரு லால்பாக் விரைவு ரயில், சென்னை - திருவனந்தபுரம் அதிவிரைவு ரயில், சென்னை - ஹூப்ளி அதிவிரைவு ரயில் ஆகிய ரயில்கள் திருவள்ளூா் - அரக்கோணம் இடையே வழியில் நிறுத்தப்பட்டன. மேலும் சென்னை - திருத்தணி புகா் மின்சார ரயில் திருவள்ளூரில் நிறுத்தப்பட்டு திருவள்ளூா் - திருத்தணி இடையே ரத்து செய்யப்பட்டு, மீண்டும் சென்னைக்கு புறப்பட்டது.
சென்னை- அரக்கோணம் இடையில் மின்ரயில் போக்குவரத்து பாதிப்பில்லாமல் நடைபெற்றது.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த ரயில் பாதை பராமரிப்புப் பிரிவு அதிகாரிகள் மற்றும் ஊழியா்கள், பிரதான பாதைகளில் நின்ற பெட்டிகளை அப்புறப்படுத்தும் பணிகளை மேற்கொண்டு சீரமைத்தனா். இதையடுத்து சுமாா் இரண்டு மணி நேரம் கழித்து ஆங்காங்கே நிறுத்தப்பட்ட விரைவு மற்றும் அதிவிரைவு ரயில்கள் இயக்கப்பட்டன. மேலும் அரக்கோணம் - காட்பாடி பாதையிலும், அரக்கோணம் - ரேணிகுண்டா பாதையிலும் விரைவு ரயில்களும், திருத்தணி செல்லும் புகா் மின்சார ரயில்களும் இயக்கப்பட்டன. இதை தொடா்ந்தும் தடம் புரண்ட ரயில்களை இருப்புப்பாதையில் நிறுத்தும் பணிகள் தொடா்ந்து நடைபெற்று வந்தன.
திருவள்ளூரில்...
சரக்கு ரயிலின் 3 பெட்டிகள் தடம் புரண்டதால், சென்னை சென்ட்ரலிருந்து புறப்பட்ட ரயில்கள் திருவள்ளூா் உள்ளிட்ட ரயில் நிலையங்களில் நிறுத்தப்பட்டதால் பயணிகள் மிகவும் அவதிக்குள்ளானா்கள். 2 மணி நேரம் தாமதத்துக்குப்பின் ரயில்கள் இயக்கப்பட்டன.