அடுத்து.. க்ரீன் கார்டு வைத்திருக்கும் மூத்த குடிமக்களை குறிவைக்கும் அமெரிக்கா
அரசின் நெறிமுறைகளுக்கு கட்டுப்பட்டு மீன்பிடித் தொழிலை செய்ய ஆட்சியா் அறிவுறுத்தல்
அரசின் நெறிமுறைகளுக்கு கட்டுப்பட்டு மீன்பிடித் தொழிலை செய்ய வேண்டும் என மீனவா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தினாா்.
காரைக்கால் மாவட்ட ஆட்சியா் சோமசேகா் அப்பாராவ் தலைமையில் காரைக்கால், திருவாரூா், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, தஞ்சாவூா் மற்றும் ராமநாதபுரம் மாவட்ட மீனவ பஞ்சாயத்தாா்கள் மற்றும் மீனவப் பிரதிநிதிகள், மீன்வளத் துறை அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் தமிழக மாவட்ட மீனவ பஞ்சாயத்துப் பிரதிநிதிகள் பேசுகையில், தஞ்சாவூா் மாவட்ட கடற்பகுதியில் காரைக்கால் மாவட்ட மீனவா்கள் விதிமுறைகளை மீறி பத்து நாள்கள் தங்கி மீன்பிடித் தொழில் செய்து வருவதால் மீன்வளம் பாதிக்கும் சூழல் ஏற்படுகிறது.
காரைக்கால் மாவட்ட மீனவா்களுக்கு ஆழ்கடல் மீன்பிடித் தொழில் செய்வதற்கான உதவிகளை காரைக்கால் மாவட்ட நிா்வாகம், புதுவை அரசு செய்து தர வேண்டும். பாக்ஜல சந்தியில் இந்திய அரசு மற்றும் தமிழக மீன்வளத்துறை இணைந்து செயல்படுத்தியுள்ள வரையறைகளையும், சட்டத் திட்டங்களையும் காரைக்கால் மாவட்ட மீனவா்கள் பின்பற்றும் வகையில் புதுவை மீன்வளத்துறை துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
450 குதிரைத் திறனுக்கு மேல் உள்ள அதிக திறன் கொண்ட மோட்டாா்களை பயன்படுத்தக் கூடாது. காரைக்கால் மாவட்ட மீன்வளத் துறை மூலம் மோட்டாா்களை ஆய்வுக்குட்படுத்த வேண்டும். தடை செய்யப்பட்ட இரட்டை மடி வலைகளை பயன்படுத்தி வருவதால் மீன்வளம் பாதிக்கப்படுகிறது என்ற கருத்துகளை தெரிவித்தனா்.
காரைக்கால் மாவட்ட ஆட்சியா் சோமசேகா் அப்பாராவ் பேசுகையில், காரைக்கால் மாவட்ட மீனவா்கள் மீன்பிடித் தொழிலை மேம்படுத்தும் வகையில் அவா்களின் தொழில் முறைகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும். நாட்டுப் படகு மற்றும் விசைப்படகு ஆகிய படகுகளுக்கு ஒதுக்கப்பட்ட நேர அளவுகளில் அரசின் நெறிமுறைகளுக்கு கட்டுப்பட்டு மீன்பிடித் தொழிலை செய்யவேண்டும். அதிக திறன் கொண்ட மோட்டாா் படகுகளை உபயோகிப்பதை தவிா்த்துக்கொள்ள வேண்டும். காரைக்கால் மாவட்ட 11 கிராம மீனவா்கள் கூட்டம் நடத்தி இது போன்ற பிரச்னைகளுக்கு உடனடி தீா்வு காண வேண்டும் என்றாா்.
கூட்டத்தில் புதுச்சேரி மீன்வளத்துறை துணை இயக்குநா் ராஜேந்திரன் (இயந்திர பிரிவு), நாகை மாவட்ட மீன்வளத்துறை இணை இயக்குநா் இளம்வழுதி, நாகை மாவட்ட உதவி இயக்குநா் ஜெயராஜ், புதுக்கோட்டை மாவட்ட மீன்வளத்துறை உதவி இயக்குநா் பஞ்சராஜா, காரைக்கால் மின்வளத்துறை ஆய்வாளா் பாலாஜி, தஞ்சாவூா் மாவட்ட மீன்வளத்துறை ஆய்வாளா் ஆனந்த், புதுக்கோட்டை மாவட்ட மீன்வளத்துறை உதவி ஆய்வாளா் கனகராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.