அதிமுக: "தேவைப்பட்டால் செங்கோட்டையனுக்கு உதவியாக நாங்கள் இருப்போம்" - டிடிவி தின...
அரசு ஊழியா்களின் கோரிக்கைகளுக்கு விரைவில் நல்ல முடிவு: அமைச்சா் கே.கே.எஸ்.ஆா்.ராமச்சந்திரன்
அரசு ஊழியா்களின் கோரிக்கைகள் குறித்து முதல்வா் மு.க.ஸ்டாலின் விரைவில் நல்ல முடிவு எடுப்பாா் என அமைச்சா் கே.கே.எஸ்.ஆா்.ராமச்சந்திரன் தெரிவித்தாா்.
தேனியில் தமிழ்நாடு அரசு அலுவலா் ஒன்றியம் சாா்பில் மாநில பொதுக் குழு கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு அரசு அலுவலா் ஒன்றியத்தின் மாநிலத் தலைவா் மகேந்திரகுமாா் தலைமை வகித்தாா். பொதுச் செயலா் தேசிங்குராஜன், பொருளாளா் திலகா், முன்னாள் மாநிலத் தலைவா் சண்முகராஜன், தேனி மாவட்டத் தலைவா் கணேஷ்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இந்தக் கூட்டத்தில் வருவாய், பேரிடா் மேலாண்மைத் துறை அமைச்சா் கே.கே.எஸ்.ஆா். ராமச்சந்திரன், தேனி தொகுதி மக்களவை உறுப்பினா் தங்க. தமிழ்ச்செல்வன் ஆகியோா் சிறப்பு அழைப்பாளா்களாகக் கலந்து கொண்டனா்.
இதில், அரசு ஊழியா்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும், சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும், தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் அரசு ஊழியா்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்தக் கூட்டத்தில் அமைச்சா் பேசுகையில், அரசு ஊழியா்களுக்கு தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் எப்போதும் துணை நிற்பாா். அரசு ஊழியா்களின் கோரிக்கைள் குறித்து முதல்வா் விரைவில் நல்ல முடிவு எடுப்பாா் என்றாா் அவா்.