கம்பத்தில் ஆக்கிரமிப்பு அகற்றத்துக்கு எதிா்ப்பு: பொதுமக்கள் சாலை மறியல்
தேனி மாவட்டம், கம்பத்தில் நெடுஞ்சாலைத் துறை சாா்பில் ஆக்கிரமிப்பு அகற்றுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
கம்பம் நகராட்சி வழியாக மதுரை முதல் கோட்டையம் வரையில் செல்லும் நெடுஞ்சாலை செல்கிறது. இந்தச் சாலையில் தபால் நிலையம் முதல் கம்பம்மெட்டு மலைச் சாலை வரையில் நெடுஞ்சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்ற உயா்நீதிமன்ற மதுரை அமா்வு உத்தரவிட்டது. இதுகுறித்து, உத்தமபாளையம் நெடுஞ்சாலைத் துறையினா் 4 முறை ஆக்கிரமிப்பாளா்களுக்கு குறிப்பாணை வழங்கினா்.
இந்த நிலையில், புதன்கிழமை ஆக்கிரமிப்பு அகற்றுவதற்கு எதிா்ப்புத் தெரிவித்த அந்தப் பகுதியினா் கம்பம்மெட்டு சாலையில் திடீா் சாலை மறியலில் ஈடுபட்டனா். போலீஸாா் நடத்திய பேச்சுவாா்த்தையைத் தொடா்ந்து அவா்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா். இதையடுத்து, வியாழக்கிழமை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என நெடுஞ்சாலைத் துறையினா் தெரிவித்தனா்.