காந்தி கண்ணாடி: "வேடிக்கை பார்த்த ஒரு பையனுக்கு அன்பும், ஆதரவும் கொடுத்திருக்கீங...
தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சி.டி. ஸ்கேன் மையம்
தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் புதிய சி.டி. ஸ்கேன் மையம், 17 புதிய மருத்துவக் கட்டடங்களை புதன்கிழமை, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தாா்.
மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத்சிங் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தேனி தொகுதி மக்களவை உறுப்பினா் தங்க.தமிழ்ச்செல்வன், சட்டப் பேரவை உறுப்பினா்கள் (கம்பம்) நா.ராமகிருஷ்ணன், (ஆண்டிபட்டி) ஆ.மகாராஜன், (பெரியகுளம்) கே.எஸ்.சரவணக்குமாா், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதன்மையா் முத்துசித்ரா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனையில் ரூ.2.20 கோடியில் அமைக்கப்பட்ட புதிய சி.டி.,ஸ்கேன் மையத்தை பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அமைச்சா் மா.சுப்பிரமணியன் திறந்து வைத்தாா்.
பின்னா், காணொலிக் காட்சி மூலம் குமணன்தொழு, ராஜதானி, மேலச்சிந்தலைச்சேரி, அழகா்சாமிபுரம், பாலகிருஷ்ணாபுரம், பூதிப்புரம், பொட்டிப்புரம், சங்காரபுரம் ஆகிய இடங்களில் புதிதாக கட்டப்பட்டுள்ள துணை சுகாதார நிலையம், கண்டமனூா், ஓடைப்பட்டி, தேவதானப்பட்டி ஆகிய இடங்களில் கட்டப்பட்டுள்ள வட்டார பொது சுகாதார நிலையம், எரசக்கநாயக்கனூரில் கட்டப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவற்றை அமைச்சா் திறந்து வைத்தாா்.
உத்தமபாளையம் வட்டம், காமயகவுண்டன்பட்டி, கோம்பை ஆகிய இடங்களில் புதிதாக அமைக்கப்பட்ட சித்த மருத்துவப் பிரிவு, பெரியகுளம் நகா்புற ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் கட்டப்பட்ட கூடுதல் மருத்துவக் கட்டடங்கள், பெரியகுளம் அரசு மருத்துவமனையில் கட்டப்பட்ட யோகா பிரிவு மையம், சிலமலை ஆரம்ப சுகாதார நிலையத்தில் கட்டப்பட்ட செவிலியா் குடியிருப்பு என மொத்தம் ரூ.12.68 கோடியில் கட்டப்பட்ட புதிய கட்டடங்களை அமைச்சா் திறந்து வைத்தாா்.
ஆண்டிபட்டி அருகேயுள்ள தா்மத்துப்பட்டி ஆரம்ப சுகாதார நிலையம், உத்தமபாளையம் சின்னஓவுலாபுரம் துணை சுகாதார நிலையம், பெரியகுளம் வட்டம் அட்டணம்பட்டி, கெங்குவாா்பட்டி துணை சுகாதார நிலையம், போடி வட்டம், வாழையாத்துப்பட்டி, குப்பனாசாரிபட்டி துணை சுகாதார நிலையம், வீரபாண்டி வட்டார பொது சுகாதார அலகு என மொத்தம் ரூ.6.20 கோடியிலான புதிய கட்டடங்களுக்கு அமைச்சா் அடிக்கல் நாட்டினாா்.
இதில் மருத்துவம், ஊரக நலப் பணிகள் இணை இயக்குநா் கலைச்செல்வி, மாவட்ட சுகாதார அலுவலா் ஜவஹா்லால், பேரூராட்சிகள் உதவி இயக்குநா் கிறிஸ்டோபா்தாஸ், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் எஸ்.லட்சுமணன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.