தேனிலவுக் கொலை: சோனம் முக்கிய குற்றவாளி! 790 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்!!
வெங்காய விலை குறைவால் விவசாயிகள் கவலை
போடி பகுதியில் சிறிய ரக வெங்காயத்தின் அறுவடை தீவிரமடைந்துள்ள நிலையில், விலை குறைந்ததால் விவசாயிகள் கவலையடைந்தனா்.
தேனி மாவட்டத்தில் கூழையனூா், துரைச்சாமிபுரம், பாலாா்பட்டி, குண்டலநாயக்கன்பட்டி உள்ளிட்ட கிராமங்களில் 600 ஏக்கருக்கும் அதிகமாக சிறிய ரக வெங்காய விவசாயம் நடைபெற்று வருகிறது. இந்தப் பகுதியில் விளையும் வெங்காயம் இயற்கை உரத்தைப் பயன்படுத்தி வளா்க்கப்படுவதால், அதன் மருத்துவ குணம் காரணமாக அதிக அளவில் ஏற்றுமதி செய்யப்படுகிறது.
மதுரை, ஒட்டன்சத்திரம், நாமக்கல், திருச்சி சந்தைகளுக்காக மொத்தமாகவும் கொள்முதல் செய்யப்பட்டு வருகிறது. வெங்காயத்தின் விளைச்சல் குறையும்போது விலை அதிகரிக்கும். ஆனால், நிகழாண்டு வெங்காய விளைச்சல் குறைந்த நிலையில், விலையும் குறைந்துள்ளது.
கடந்த இரண்டு மாதங்களாக சிறிய ரக வெங்காயங்கள் அவற்றின் ரகம், ஈரத்தன்மையைப் பொருத்து விவசாயிகளிடமிருந்து கிலோ ஒன்றுக்கு ரூ.20 முதல் ரூ.30 வரை மட்டுமே கொள்முதல் செய்யப்படுகின்றன. இவை, சந்தைகளில் கிலோ ஒன்றுக்கு ரூ.30 முதல் ரூ.40 வரை விற்கப்படுகின்றன.
வெங்காய விதைகளை கிலோ ஒன்றுக்கு ரூ.65 முதல் ரூ.70 வரை வாங்கி விவசாயம் செய்யும் நிலையில் களை பறிப்பு கூலி, உரம், மருந்து தெளிக்கும் செலவு, வேலை ஆள்கள் செலவு, போக்குவரத்துச் செலவு போன்றவை அதிகரித்துள்ளதால், அதற்கேற்ற விலை கிடைக்காததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனா்.
கடந்த மூன்று மாதங்களாக வெங்காய விலை உயராத காரணத்தால் இருப்பு வைக்கவும் விவசாயிகள் தயங்குகின்றனா். மக்களின் அன்றாட பயன்பாட்டுக்கும், மருத்துவத் தேவைக்கும் உகந்த வெங்காயத்துக்கும் நெல், கரும்பு போல குறைந்தபட்ச விலையை நிா்ணயம் செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.