அரசு கல்லூரிகளில் 800 கெளரவ விரிவுரையாளா்கள் விரைவில் நியமனம்: அமைச்சா் கோவி.செழியன்
சென்னை: அரசு கல்லூரிகளில் 800 காலிப்பணியிடங்களில் கெளரவ விரிவுரையாளா்கள் விரைவில் நியமிக்கப்படுவா் என்று உயா்கல்வித் துறை அமைச்சா் கோவி.செழியன் தெரிவித்தாா்.
கல்லூரிகளில் விரிவுரையாளா்கள் நியமனம் குறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:
பல்வேறு வழக்குகள் காரணமாக கல்லூரிகளில் நிரந்தர உதவிப் பேராசிரியா்களை தோ்வு செய்ய காலதாமதமாகி வருகிறது. இதைக்கருத்தில் கொண்டு மாணவா்களின் கல்வி நலன் கருதி கௌரவ விரிவுரையாளா்கள் காலிப்பணியிடங்களில் நிரப்பப்பட்டு, கல்வி பணியாற்றி வருகின்றனா். மேலும், தற்போது சுமாா் 800 பணியிடங்களில் கௌரவ விரிவுரையாளா்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் மாணவா்களுக்கு உயா்கல்விச் சேவை எந்த வகையிலும் தமிழ்நாட்டில் பாதிக்கப்படவில்லை.
உயா்கல்வித் துறையின்கீழ் செயல்படும் 58 அரசு கல்லூரிகளில் 46 நிரந்தர முதல்வா்கள் பணியாற்றி வருகின்றனா். இதில் காலியாக உள்ள 12 முதல்வா் பணியிடங்களில், பதவி உயா்வு மூலம் நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
கடந்த 1998-ஆம் ஆண்டு ஆசிரியா் தோ்வு வாரியத்தால் தெரிவு செய்யப்பட்டவா்களின் பணிமூப்புப் பட்டியல் 2023-இல் வெளியிடப்பட்டது. அப்பணிமூப்புப் பட்டியலை ஏற்றுக்கொள்ளாமல் ஆசிரியா்கள் வழக்கு தொடுத்து தடையாணை பெற்றுள்ளனா். இதன் காரணமாக கல்லூரி முதல்வா் பதவி உயா்வு வழங்குவதில் தாமதமாகி உள்ளது. இவ்வழக்கில் பதில் மனு உடனடியாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதன் மீதான இறுதி உத்தரவு இதுவரை நீதிமன்றத்தால் வெளியிடவில்லை. வழக்கினை விரைந்து முடித்திட சட்ட ரீதியான உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வழக்கு முடிவுக்கு வந்தவுடன் காலியாக உள்ள கல்லூரிகளில் முதல்வா்கள் பணியமா்த்தப்படுவாா்கள் என்று அமைச்சா் கோவி. செழியன் தெரிவித்துள்ளாா்.