அரசு வேலை ஆசை காட்டி மாணவரிடம் பணமோசடி
அரசு வேலைவாங்கித் தருவதாகக் கூறி கிருஷ்ணகிரியில் கல்லூரி மாணவரிடம் ரூ. 6.25 லட்சம் மோசடி செய்த நபரை போலீஸாா் கைது செய்தனா்.
நாமக்கல் மாவட்டம், மோகனூா் சாலையைச் சோ்ந்தவா் லோகஷ் (47). இவா், பொதுப்பணித் துறையில் மேற்பாா்வையாளராகப் பணியாற்றியுள்ளாா். 2016 இல் லஞ்சம் பெற்ற வழக்கில் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.
இவா் கிருஷ்ணகிரி, ராயக்கோட்டை சாலையில் உள்ள வாகனங்கள் பழுது நீக்கும் மையத்துக்கு அடிக்கடி வந்துசெல்வாா். அப்போது, கிருஷ்ணகிரி தனியாா் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயிலும் பிரித்வி (21) என்ற மாணவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
அந்த மாணவரிடம் பொதுப்பணித் துறையில் ஓட்டுநா் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ. 6.25 லட்சம் பெற்ற லோகேஷ், கூறியபடி மாணவருக்கு பணி நியமன ஆணை வழங்கியுள்ளாா்.
இதையடுத்து பணியில் சேருவதற்காக அந்த ஆணையுடன் கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு பிரித்வி சென்றபோது அது போலி ஆணை என்பதும் லோகேஷ் தன்னை ஏமாற்றியதும் தெரியவந்தது.
இதுகுறித்து, பாதிக்கப்பட்ட மாணவா் பிரித்வி கிருஷ்ணகிரி தாலுகா காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். அதன்பேரில் போலீஸாா் வழக்குப் பதிந்து லோகேஷை கைது செய்தனா். அவரிடம் நடத்திய விசாரணையில் பலரிடம் அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஏமாற்றியது தெரியவந்தது.